search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச கழிப்பிடம்"

    • 15 மண்டலங்களில் 700-க்கு மேல் மாநகராட்சி பொது கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • பிராட்வே பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி சார்பில் இலவச பொது கழிப்பிடங்கள் பொது மக்கள் அதிகம் கூடக் கூடிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ளது.

    பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, மார்க்கெட் போன்ற இடங்களில் கட்டணமின்றி பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்திக் கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் 15 மண்டலங்களில் 700-க்கு மேல் மாநகராட்சி பொது கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதால் புதிய உள்ளாட்சி பிரதி நிதிகள் பொறுப்பேற்றவுடன் இதனை முறைப்படுத்தினார்கள்.

    தண்ணீர் இல்லாமலும், சுத்தம் செய்யாமலும் பெரும்பாலான கழிவறைகள் காணப்பட்டதால் பொதுமக்கள் பயன்படுத்த தயங்கினார்கள். இதனால் கழிவறைக்குள் சென்று சிறுநீர் கழிப்பதற்கு பதிலாக வெளியே கழித்ததால் பொதுசுகாதாரம் பாதித்தது.

    சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பொறுப்பேற்றவுடன் மாநகராட்சி கழிப்பிடங்கள் தனியாரிடம் ஒப்படைத்து பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் இலவச கழிப்பிடங்கள் அனைத்தும் படிப்படியாக தனியார் வசம் ஒப்படைத்து முறையாக பராமரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    தனியாரிடம் ஒப்படைத்தாலும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும், இதற்காக ஒவ்வொரு கழிப்பிடத்திற்கு ரூ.25 ஆயிரம் நிதி மாநகராட்சி மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

    கழிவறையை சுத்தம் செய்து, பராமரிக்க ஊழியர்கள் பயன்படுத்தப்படுவர். அதனை தனியார் நிறுவனங்கள் டெண்டர் மூலம் கோரி உரிமையை பெற்று கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது.

    சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் நகரை அழகுப்படுத்தவும், தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கழிப்ப டங்கள் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக முதலில் ராயபுரம் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி கழிப்பிடங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டன. முதல் கட்டமாக 70 கழிப்பிடங்கள் ஒப்படைக்கப்பட்டு பயன் பாட்டில் உள்ளன.

    ஆனால் இந்த கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதியை மீறி வசூலிக்கப்படுகிறது. சிறுநீர் கழிப்பதற்கே 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். ராயபுரத்தில் 52-வது டிவிசனில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பிடம், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள கழிப்பிடம், பிராட்வே பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடங்களில் பொது மக்களிடம் அடாவடியாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

    சிறுநீர் கழிப்பதற்கா 10 ரூபாய் என்று கேட்டால் அதற்கு இஸ்டம் இருந்தா போ... என்ற பதில் உடனே வருகிறது.

    பிராட்வே பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு பயணியிடமும் சிறுநீர் கழிக்க 10 ரூபாய் வசூலிப்பதால் தினமும் பல ஆயிரத்தை அங்குள்ள ஊழியர் கல்லா கட்டுகிறார்கள். மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 13 கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தனியாருக்கு கழிப்பிடங்களை ஒப்படைக்கும்போது, அந்த நிறுவனம் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. கழிப்பிடங்களின் முகப்பு மற்றும் பக்கவாட்டில் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாய் பெறலாம் என வழி வகுக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    3 தனியார் நிறுவனங்களுக்கு கழிப்பிடங்கள் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களிடம் கட்டணம் வசூலிப்பது தனியார் நிறுவனமா? அல்லது அரசியல் பிரமுகர்களா? என்பது புதிராக உள்ளது.

    மேலும் இந்த கழிப்பிடங்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. அந்த பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களை சிலர் பயன்படுத்தி தினமும் சுத்தம் செய்ய கூறுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு மாதம் சிறு தொகை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அங்கு பணி நியமிக்கப்படவில்லை. அந்த பகுதி அரசியல் பிரமுகர்கள் அவர்களை தவறுதலாக பயன்படுத்துகின்றனர்.

    இதுபற்றி அந்த பகுதி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கக் கூடாதுதான். ஆனால் சிலர் வசூலிக்கிறார்கள். அவர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க கூறுவது யார்? அரசியல் பிரமுகரா? ஒப்பந்தம் எடுத்து உள்ள தனியாரா? என்பது தெரியவில்லை என்று பதில் அளித்து நழுவுகிறார்.

    ×