search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு லாக்கர்"

    ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் இருந்து மர்ம நபர்கள் திருடி சென்ற இரும்பு லாக்கர் குட்டையில் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
    வரதராஜன்பேட்டை: 

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றிருந்த போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவில் எதுவும் சிக்காததால் படுக்கை அறையில் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயன்றனர். அது, முடியாமல் போகவே அந்த லாக்கரை அப்படியே தூக்கி சென்று விட்டனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து ஊர் திரும்பிய பழனிசாமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அதில் 19 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கம், 250 கிராம் வெள்ளி பொருட்கள், வங்கி புத்தகங்கள், நில பத்திரங்கள் ஆகியவை இருந்ததாக தெரிவித்தார்.

    இந்த திருட்டு குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பழனிசாமி வீட்டின் பின்புற பகுதியில் உள்ள குட்டை அருகே வங்கி புத்தகங்கள், நில பத்திரங்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் இரும்பு லாக்கரில் இருந்த நகை-பணத்தை எடுத்துக் கொண்டு, லாக்கரை குட்டையில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து தனிப்படை போலீசார் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அவர்களும் அங்கு வந்தனர்.

    பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் வீரர்கள் குட்டையில் இறங்கி தண்ணீரில் கிடந்த இரும்பு லாக்கரை தூக்கி வெளியே கொண்டு வந்தனர். அந்த இரும்பு லாக்கரை போலீசார் திறந்து பார்த்த போது அதில் நில பத்திரங்கள், 2 தங்க தோடுகள், 2 வெள்ளி விளக்குகள் ஆகியவை மட்டுமே இருந்தன. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×