search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதள சேவை முடக்கம்"

    தூத்துக்குடி கலவரம் மேலும் பரவாமல் இருக்க தென்மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் இணைய சேவையை பயன்படுத்த முடியாமல் 3 மாவட்ட மக்கள் அவதியடைந்தனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தென்மாவட்ட மக்கள் மனதில் ஒரு நீங்காத வடுவை ஏற்படுத்தி உள்ளது. போராட்டத்தில் வன்முறை, அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு, 13 பேர் பலியான சோகம், 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கதறும் பரிதாபம்...இவை நெஞ்சை விட்டு அகலாமல் பதற வைக்கின்றன. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டத்தை சமூக வலைதளங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றதாக அரசுக்கு அறிக்கை சென்றதன் விளைவு மற்றொரு பேரிடியாக மக்கள் மீது இறங்கியதுதான் இணைய தள முடக்கம்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக புறப்பட்டது முதல் போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூடு, கல்வீச்சு, பலியானவர்களின் புகைப்படம் என பல்வேறு விவரங்கள் வாட்சாப், பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் மூலமாக எளிதில் பரவின. இதன் உச்சகட்டமாக துப்பாக்கி சூடு நடத்திய சீருடை அணியாத போலீசார் கலெக்டருடன் சேர்ந்து எடுத்த புகைப்படமும் வலைதளங்களில் வெளியானது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    போராட்டத்துக்கு ஆதரவான‌, அரசுக்கும், போலீசாருக்கும் எதிரான பதிவுகளே சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெற்றது. இதன் எதிரொலியாக போராட்டத்தை முடக்கவும், போராட்டக்காரர்களிடம் விவரங்கள் செல்லாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இணையதள முடக்கம். வன்முறை பரவாமல் இருக்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதிவரை 5 நாட்களுக்கு இணையதள சேவையை அரசு முடக்கியுள்ளது.

    அரசால் சாதாரணமாக செய்து விட்ட இந்த நடவடிக்கை நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை கலங்க செய்துவிட்டது. ஏற்கனவே மக்களின் அன்றாட அனைத்து உபயோகங்களிலும் கணினி பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. எந்த அலுவலகம் இயங்கவேண்டும் என்றாலும், கணினியும், இணையமும் தேவை. இதயம் போன்ற இணையம் முடக்கப்பட்டது மக்களை பெரிதும் பாதித்து விட்டது எனலாம். இன்றைய சூழலில் பிறப்பு முதல் இறப்பு வரை கணினி தேவை என ஆகிவிட்டது.

    குழந்தை பிறந்ததும் பிறப்புசான்றிதழ் கணினி மூலமே வழங்கப்படுகிறது. அந்த குழந்தை வளர்ந்ததும் சாதி சான்றிதழ், கல்விக்கான சான்றிதழ்கள், உயர்கல்வியில் சேர சான்றிதழ்கள் அனைத்துமே கணினி மூலமே பெறப்படுகிறது. மேலும் மின் கட்டணம், வங்கி பண பரிவர்த்தனைகள் அனைத்துமே ஆன்லைன் மூலமே செய்யப்படுகிறது. இந்த பணிகள் அனைத்துமே தற்போது முடங்கியுள்ளன.

    பணமில்லா பரிவர்த்தனை எனப்படும் நெட் பேங்கிங் பயனற்று போனது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முழக்கம் கேள்விக்குறியாகிவிட்டது. சமீபத்தில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த முயற்சிகளை ஆன்லைன் மூலமே மேற்கொள்வார்கள். அதேபோல என்ஜினீயரிங், கல்லூரி விண்ணப்பங்கள் அனைத்துமே இப்போதுஆன்லைன் மூலமே அனுப்பப்படுகிறது.

    இணையதள சேவை முடக்கத்தால் இந்த பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு மாணவர்கள் கலங்கும் நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் வங்கிகள் அனைத்துமே கோர்பேங்கிங் முறைப்படி இணையம் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இணையம் நின்றுபோனதால் வங்கிப்பணிகளுமே முடங்கிவிட்டன. ஏ.டி.எம் எந்திரங்களும் நெட் ஒர்க் கிடைக்காமல் பணம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.

    ஓரிரு ஏ.டி.எம்கள் மட்டுமே செயல்பட்டன. இதனால் ஏ.டி.எம் மையங்களில் மக்கள் காத்து நிற்கும் நிலை உண்டானது. இ-சேவை மையங்களும் சில மையங்களே செயல்பட்டன. ரெயில்வே கேபிள் மூலமாக வரக்கூடிய இணையதள சேவையும் முடங்கியதால் ரெயில் வருவது, புறப்பட்டு செல்வது போன்ற தகவல்கள் பெற முடியாமல் மக்கள் தவித்தனர்.

    இணையதள சேவை முடங்கியதால் மாணவர்களால் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், தனியார் இன்டர்நெட் மையங்களிலும் பணிகள் முடங்கியுள்ள‌ன. இ-சேவை மையங்கள் மூலமாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுமே முடங்கியுள்ளன. எனவே அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இணையதள சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது,” ஏற்கனவே ஸ்டெர்லைட் பிரச்சினை, துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்கள் காரணமாக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இணையதள சேவையையும் முடக்கியிருப்பது பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அரசு உடனடியாக இணையதள சேவையை தொடங்கவேண்டும்“ என்றனர்.
    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். #sterliteprotest
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருவதை தவிர்ப்பதற்காக தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் இணையதள சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதனால் வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் தகவல்களை பரிமாற முடியவில்லை.



    தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இணையதளம் மூலமாகவே மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டதால், மாணவர்களால் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

    அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு சேவை மையங்கள், தனியார் இண்டர்நெட் மையங்களிலும் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பெயர் மாற்றம், ஆதார் அட்டை இணைப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ரெயில் டிக்கெட், பத்திரப்பதிவு ஆகியவைகளும் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும், வங்கிகளின் பணப்பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகளுக்கு வந்தவர்கள் காசோலை, வரைவோலை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #sterliteprotest

    ×