search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்பூர் தோல் தொழிற்சாலை"

    • வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 120 வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 23-ந் தேதி ஆம்பூர் வந்தனர்.
    • சின்னவரிகம், மோட்டுக்கொல்லை, தார்வழி, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்த வருமான வரி சோதனை முடிவுக்கு வந்தது.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள், தோல் சுத்திகரிப்பு நிலையம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்த தொழிற்சாலைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பரிதா குழுமத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பரிதா குழுமம் வருமானத்தை சரியாக கணக்கு காட்டாமல் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும், ஜிஎஸ்டியை முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைத்தொடர்ந்து, வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 120 வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 23-ந் தேதி ஆம்பூர் வந்தனர்.

    ஆம்பூர் மோட்டுக் கொல்லை, அம்பேத்கர் நகர், சின்னவரிகம், கிருஷ்ணாபுரம், துத்திப்பட்டு, தார்வழி உள்ளிட்ட 12 இடங்களில் இயங்கி வரும் பரிதா குழுமம் தோல் தொழிற்சாலைகளில் சோதனை நடத்த தொடங்கினர்.

    23-ம் தேதி காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. சோதனை நடைபெற்ற தோல் தொழிற்சாலைகள் முன்பாக ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

    வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தோல் பொருட்களின் விவரம் தொழிற்சாலைக்கு வாங்கப்பட்ட எந்திரம் மற்றும் உதிரிபாகங்கள் குறித்த விவரம், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.

    மேலும் தொழிற்சாலை நிர்வாகப்பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகளிடம் வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தனித்தனியாக விசாரணை நடத்தினார். 4-வது நாள் சோதனை நேற்று காலை தொடங்கியது.

    சின்னவரிகம், மோட்டுக்கொல்லை, தார்வழி, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்த சோதனை முடிவுக்கு வந்தது. அதில், 6 தொழிற்சாலைகளில் இருந்து முக்கிய ஆவணங்கள், கணினி ஹார்ட்டிஸ்க்குகள், பென்டிரைவ் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் எடுத்துச்சென்றனர்.

    இரவு 7 மணியளவில் கிருஷ்ணாபுரம், துத்திப்பட்டு, கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் நடந்து வந்த சோதனையும் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஆம்பூர் பரிதா குழுமத்தில் 12 இடங்களில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த சோதனை நேற்றிரவு 7.15 மணியுடன் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆம்பூரில் பரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலையில் நேற்று மாலை சோதனை முடிந்து முக்கிய ஆவணங்களை 3 வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் எடுத்துச்சென்றனர்.

    ×