search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா மழை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோதாவரி ஆற்றில் பருவ மழை காரணமாக வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் பருவ மழை காரணமாக வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 7 நாட்களாக குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    மழை வெள்ளத்தில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்டவை வீடுகளுக்கு புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டத்தில் 3 பேரும், ஏலூர் மாவட்டத்தில் ஒருவரும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஒருவரை மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதே போல் நேற்று கோதாவரி மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் மாணவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆந்திரா, தெலுங்கானா மாநில எல்லையான சீதா ராமராஜ் மாவட்டத்தில் தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் உடல்களை மீட்டனர்.

    தெலுங்கானாவில் 13 மீட்பு குழுவும் ஆந்திராவில் 10 மீட்பு குழுவினரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோதாவரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

    மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நர்சாபுரம், எலமஞ்சிலி, அச்சந்த மண்டலம், ஏலூர் மாவட்டத்தில் குக்கனூர், வேளேறுபாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    அந்தப் பகுதிகளில் உணவு, பால், ரொட்டி, பிஸ்கட், குடிநீர், குளோரின் மாத்திரைகள், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்டவைகள் இந்திய கடற்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மீட்புப் பணிகளில் 120 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×