search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதரவற்றோர் இல்லம்"

    • முதியோர் இல்லங்களில் தங்கள் சுகமான நினைவுகளையும், சோகமான நிலமைகளையும் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    • ‘ஹெல்பேஜ்’ இந்தியா அமைப்பின் மூலம் முதியோர்களை கொண்டாடும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடந்தது.

    கடந்த கால நினைவுகள் என்பது நடந்தது. அது எளிதாக மனதில் வந்து நிழலாடும். மகிழ்வை தரும்.

    நடக்கப் போகும் நினைவுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது முதுமை. அது இளமையை போல் இனிமையாக இருக்காது என்பதன் அடையாளங்களாக நம் கண்முன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் முதியவர்கள்.

    நமக்கும் நாளை முதுமை வரும் இப்படி ஒரு நிலமை வரும் என்ற நினைப்பு இல்லாமல் பெற்ற பிள்ளைகள், சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டவர்கள் பலர் முதியோர் இல்லங்களில் தங்கள் சுகமான நினைவுகளையும், சோகமான நிலமைகளையும் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    குடும்பம் கைவிட்டாலும், சமூகம் கைவிடவில்லை என்பதன் அடையாளமாக சர்வதேச முதியோர் தினமான இன்று 'ஹெல்பேஜ்' இந்தியா அமைப்பின் மூலம் முதி யோர்களை கொண்டாடும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடந்தது.

    இதில் சென்னையின் பல்வேறு இல்லங்களில் பராமரிக்கப்படும் 500 தாத்தா-பாட்டிகள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். எல்லோரும் புத்தாடைகள் அணிந்து முகத்தில் கட்டாயமாக வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அரங்கத்தில் அமர்ந்து இருந்தார்கள்.

    இந்த காலத்தில் அறுபதை தாண்டுவதே பெரும்பாடு என்ற நிலையில் தொண்ணூறை கடந்தும் நம்பிக்கையோடு பல தாத்தா-பாட்டிகள் நடந்து வந்தார்கள். அவர்களில் 5 பேரை தேர்வு செய்து விழாக் குழுவினர் கவுரவித்துள்ளார்கள்.

    நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தாத்தா-பாட்டிகளின் நடன நிகழ்ச்சியும், ஆடை அலங்கார போட்டியும் நடந்தது.

    பாட்டி நீ இந்த வயசுலேயும் இப்படி ஆடி கலக்குறியே... இளமையில் எப்படி கலக்கி இருப்பாய்? என்று பார்வையாளர் கைகளால் திருஷ்டி சுற்றி விரல்களால் தலையில் சொடுக்கி கொண்டார்கள்.

    எத்தனை ஆசைகள்.. எத்தனை எத்தனை கனவுகள்... அத்தனையும் கலைந்து போய் இல்லங்களில் தஞ்சமடைந்து இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தியதும் உற்சாகமாகிவிட்டார்கள்.

    தங்களை மகிழ்வித்தவர்களை மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள்.

    சித்தாந்தம் 97 வயது தாத்தா! ராஜா உடையில் ராஜா மாதிரி கம்பீரமாக மேடையில் தோன்றினார். அவர் அருகில் பசிந்தா மேரி 94 வயதான இந்த பாட்டி ராணியின் ராஜ உடையுடன் ராணி போல் நின்றார்.

    வாவ்... தாத்தா... வாவ் பாட்டி என்று அரங்கில் திரண்டு இருந்த மாணவ-மாணவிகள் எழுப்பிய விசில் சத்தம் அரங்கையே தெறிக்கவிட்டது.

    தொலைத்துவிட்ட மகிழ்ச்சியை மீட்டெடுத்த உணர்வுடன் நெகிழ்ந்த அவர்களின் குழி விழுந்த கண்களில் இருந்து பெருகிய ஆனந்த கண்ணீர் வெடித்து சிதறிய விளை நிலத்தில் விழுந்த மழைத்துளிபோல் கன்னத்து சுருக்கங்களில் அங்கும் இங்குமாக உருண்டோடியது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹெல்பேஜ் இந்தியா அமைப்பின் இயக்குனர் எட்வின்பாபு செய்து இருந்தார்.

    ×