search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டவர் கோவில்"

    வருகிற 1-ந்தேதி முதல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி என்ற இடத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்த கோவில் அருகே உள்ள மலையில் ஏறினால் 7-வது மலையில் லிங்கத்தை தரிசிக்கலாம். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.

    7-வது மலைக்கு செல்ல, மலை மீது அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும். அத்துடன் இங்கு திடீரென்று காலநிலை மாற்றமும் ஏற்படும். இதனால் மலைமீது செல்ல குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் முதல் மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து மலை மீது ஏறி அங்குள்ள லிங்கத்தை தரிசித்தனர். கேரளாவில் அடுத்த மாதம் (ஜூன்) முதல் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு மழை தொடங்கிவிட்டால், வெள்ளியங்கிரி மலைப்பகுதியிலும் மழை பெய்யும்.

    எனவே அங்கு காலநிலை மாற்றம் ஏற்பட்டு அடிக்கடி காற்று சுழன்று வீசும். அத்துடன் திடீரென்று உடலை உறைய வைக்கும் அளவுக்கு குளிர்காற்று வீசும். செந்நாய், கழுதைப்புலி, கரடிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே வருகிற 1-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வெள்ளியங்கிரி மலைக்கு கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று லிங்கத்தை தரிசித்து விட்டு திரும்பினார்கள். ஜூன் மாதம் தொடங்கியதும் அங்கு காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே வருகிற 1-ந் தேதி முதல் மலை மீது பக்தர்கள் செல்வதை தடுக்க பூண்டி கோவிலில் மலை மீது செல்லும் பாதையில் இருக்கும் கேட் மூடப்படும். அதன் அருகில் உள்ள பாதை வழியாக மலைமீது செல்வதை தடுக்க அங்கும் தடுப்பு வசதி செய்யப்படும்.

    இதுதவிர வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவில் உள்ளவர்களும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள். இந்த கண்காணிப்பையும் மீறி 1-ந் தேதிக்கு பிறகு வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மீது வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ×