search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணைய வக்கீல்"

    ஜெயலலிதா சிகிச்சையில் தவறு எதுவும் நடக்கவில்லை என்று அப்பல்லோ விளக்கம் அளித்துள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital


    ஆணையத்தின் வக்கீல் முகமது ஜபருல்லாகான் அளித்துள்ள மனு தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சட்ட விவகார மேலாளர் மோகன் குமார் கூறியதாவது:-

    அப்பல்லோ நிர்வாகம் மீது ஆணைய வக்கீல் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகளை வன்மையாக எதிர்க்கிறோம்.

    ஆணையத்தில் உள்ள ஒரு வக்கீலே எதிர்தரப்பினர் தொடர்பாக மனு தாக்கல் செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது, வழக்கமானது அல்ல.

    ஜெயலலிதாவுக்கு பல்வேறு மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை பெற்றுதான் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், டெல்லி எய்ம்ஸ் நிபுணர்கள், ஐ.சி.யூ. சிறப்பு வல்லுனர்கள் என பலரும் இடம்பெற்று இருந்தனர்.

    நிதிஷ்நாயக் தலைமையிலான எய்ம்ஸ் டாக்டர்கள் 3.12.2016 அன்று ஆஸ்பத்திரிக்கு நேரடியாக வந்து பரிசோதனை மேற் கொண்டனர்.

    அவர்களும் ஜெயலலிதாவுக்கு இதயம் தொடர்பான எந்த ஆய்வும் செய்ய தேவையில்லை என்று கூறி இருக்கிறார்கள். 3 சீனியர் டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு இதய ஆஞ்சியோ பரிசோதனை செய்ய பரிந்துரை செய்ததாகவும் ஆணைய வக்கீல் கூறி இருக்கிறார். அது தவறான தகவல்.

    ஒரே ஒரு வெளி டாக்டர் மட்டும்தான் அந்த பரிந்துரையை செய்தார். அதுவும் அவர் முழுமையாக ஆய்வு செய்யாமல் அப்படி கூறி விட்டார்.

    அவரிடம் மற்ற சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரும் ஆஞ்சியோ சிகிச்சை தேவை இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

    லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யவில்லை.

    இதயத்தை பிளந்து செய்யப்படும் ஸ்டெர்னோடாமி சிகிச்சை 15 நிமிடங்களாக செய்யப்படவில்லை என்று டாக்டர் மதன் குமார் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

    ஆனால், அந்த டாக்டர் 15 வினாடி என்பதை 15 நிமிடம் என்று தவறாக சொல்லி விட்டார். பின்னர் அவர் அளித்த சாட்சியத்தில் 15 வினாடி என்பதை திருத்தி கொண்டுள்ளார்.

    அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், எக்மோ கருவி பொருத்தப்பட்டதிலும் சர்வதேச தர நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எந்த தவறும் நடக்கவில்லை.

    அது சம்பந்தமான அனைத்து விவரங்களும் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது, விசாரணையின் கீழ் இருக்கக் கூடிய ஒரு வி‌ஷயமாக இருக்கின்ற நிலையில், ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது ஆதாரம் இல்லாமல் தவறான குற்றச்சாட்டு கூறி இருப்பது சரியல்ல.

    மேலும் சிகிச்சை தொடர்பாக அளிக்கப்பட்ட சாட்சியத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு சரியாக இல்லை. இதனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு மோகன்குமார் கூறியுள்ளார்.

    ஜெயலலிதா மரணத்துக்கு ஆஞ்சியோ இதய சிகிச்சை செய்யாததே காரணம் என்று ஆணைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார். #Jayalalithaa

    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் பின்னணியில் இருந்தவர்கள் என பல்வேறு தரப்பினரையும் அழைத்து ஆணையம் விசாரித்து வருகிறது.

    விசாரணையில் எதிர் தரப்பினராக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், அப்பல்லோ ஆஸ்பத்திரியும் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவ், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் எதிர் தரப்பினராக சேர்க்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததில் சதி இருக்கிறது என்று ஆணையத்தின் வக்கீல் முகமது ஜபருல்லாகான் ஆணையத்திடம் கடந்த 27-ந் தேதி மனுதாக்கல் செய்துள்ளார்.

    அதில் பல்வேறு அதிர்ச்சி கரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் வி‌ஷயத்திலும் சசிகலாவும் மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும் சதி செய்துள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு இதய பாதிப்பு குறித்து ஆஞ்சியோ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். இந்த சிகிச்சை அளிக்கும்படி பல்வேறு ஆஸ்பத்திரிகளை சேர்ந்த 3 சீனியர் டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

    ஆனால், அந்த பரிசோதனையை செய்ய வில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதற்கு இதுதான் முக்கிய காரணம் ஆகும்.



    அவருடைய சிகிச்சையில் சசிகலாவும், அப்பல்லோ நிர்வாகமும் பொறுப்பு உள்ளவர்களாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் இதை செய்யவில்லை. இதற்கான சாட்சியங்கள் உள்ளன.

    ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். ஆனால், 5-ந் தேதிதான் அவர் இறந்து விட்டதாக முறைப்படி அறிவித்து இருக்கிறார்கள்.

    கமி‌ஷனில் சாட்சியம் அளித்த ஒரு டாக்டர் கூறும் போது, மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுவிட்டால் நெஞ்சை பிளந்து அளிக்கப்படும் ஸ்டெர்னோடாமி சிகிச்சை 15 நிமிடமாக நடத்தப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.

    மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுபோன ஒரு நபருக்கு 3 நிமிடத்தில் இந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அது, தானாகவே மூளைச் சாவாக மாறி விடும்.

    ஆனால், 15 நிமிடமாக அந்த சிகிச்சையை அவர்கள் அளிக்காமல் இருந்துள்ளனர். இது, மற்ற டாக்டர்களின் சாட்சியத்திலும் தெரிய வந்துள்ளது.

    அதே போல் எக்மோ கருவி பொருத்தி அளிக்கப்படும் சிகிச்சையும் முறைப்படி செய்யப்படவில்லை.

    ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க ஏன் அழைத்து செல்லவில்லை என்ற வி‌ஷயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஜெயலலிதா அதை விரும்பவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

    மேலும் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றால் இந்திய டாக்டர்களை அவமதித்தது போல் ஆகிவிடும் என்றும் ஜெயலலிதா கூறியதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த வி‌ஷயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நோயாளியை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி சரியான நடவடிக்கை மேற் கொள்ளவில்லை.

    இது சம்பந்தமாக பல்வேறு மருத்துவ வல்லுனர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசித்து இருக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை வி‌ஷயத்தில் சுகாதாரத்துறை செயலாளரும், அப்பல்லோ நிர்வாகத்தினரும் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை.

    சுகாதாரத்துறை செயலாளரை பொறுத்த வரை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் செய்தி தொடர்பாளர் போல் செயல்பட்டுள்ளார்.

    தலைமை செயலாளர் ராமமோகனராவ் தவறான சாட்சியங்களை ஆணையத்திடம் வழங்கி இருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கையை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

    ராமமோகனராவ் ஆணையத்திடம் சாட்சியம் அளிக்கும் போது, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 20 ஆவணங்களை அவரும், சசிகலாவும் அப்போதைய பொறுப்பு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கியதாக கூறி உள்ளனர்.

    ஆனால், தற்போதைய தலைமை செயலாளர் அது போன்ற எந்த ஆவணங்களும் வரவில்லை என்று கூறி இருக்கிறார்.

    எனவே, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் ராமமோகனராவ் ஆகியோரையும் வழக்கில் எதிர் தரப்பினராக சேர்த்து விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, நான் எனது பணி தொடர்பான கேள்விகளுக்கு ஆணையத்திடம் பதில் அளிக்க வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் இதற்கு முன்பு செய்து இருக்கிறேன். இனிமேலும் செய்வேன்.

    ஜனவரி 4-ந் தேதி மீண்டும் ஆஜராக உள்ளேன். அப்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்று தெரிவித்தார்.

    ராமமோகனராவிடம் கேட்ட போது, ஆணைய வக்கீல் தாக்கல் செய்துள்ள மனு பற்றி எனக்கு தெரியாது என்று கூறினார். #Jayalalithaa

    ×