search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியைக்கு பிரசவம்"

    யூடியூப் வீடியோவை பார்த்து வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் ஆசிரியை உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். #SocialNetwork #homebirthattempt
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவரது மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு டிமானி என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார். இயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய கிருத்திகா சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் உணவு உட்கொண்டு வந்தார். அவருக்கு கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் ஆலோசனை கூறி வந்தனர்.



    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீனுக்கு தகவல் தெரிவித்தார். பிரவீன் தனது மனைவி லாவண்யாவுடன் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கிருத்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து யூ-டியூப்பில் சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி? என்று செல்போனில் தெரிந்து கொண்டு அதன்படி கிருத்திகாவுக்கு அவரது கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.

    அப்போது கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து நஞ்சு வெளியேறாமல் அதிக அளவு ரத்தபோக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கிருத்திகாவையும், குழந்தையையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கிருத்திகாவை தகனம் செய்ய மின்மயானத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் சான்றிதழ் இல்லாமல் தகனம் செய்ய முடியாது என்று அறிவித்ததால் கிருத்திகாவின் தந்தை சுப்பிரமணி நல்லூர் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இல்லை என்று கூறியதையடுத்து 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

    கிருத்திகா பெற்றெடுத்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த குழந்தை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, வீட்டில் வைத்து நடத்திய பிரசவம் பெண்ணின் உயிரை பறித்த தகவல் பேஸ்-புக்கில் வேகமாக பரவியது. இதை பார்த்து சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் பிரசவத்தின் போது பலியான ஆசிரியை கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன், அவரது நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் மீது 304ஏ (அஜாக்கிரதையாக இருந்து மரணம் ஏற்படுத்துதல்) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இன்று காலை கார்த்திகேயனை கைது செய்தனர். பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். #SocialNetwork #homebirthattempt


    ×