search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் பாதை"

    பிரபல தொழிற்சங்க தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான அமரர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அரசியல் பயணத்தை அறிந்து கொள்வோம். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    மும்பை:

    கர்நாடக மாநிலம், மங்களூருவில் 3-6-1930 அன்று பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், பள்ளி இறுதியாண்டு கல்விக்கு பின்னர் 1946-ல் பெங்களூருக்கு சென்று கிறிஸ்தவ தேவாலய பாதிரியாருக்கான பயிற்சி கல்லூரியில் இணைந்தார். அங்கு நிலவிய வேற்றுமைகளை பார்த்து அதிருப்தி அடைந்த அவர், 1949-ம் ஆண்டு வேலைதேடி மும்பை நகருக்கு சென்றார்.

    ரெயில்வே துறையில் பணியாற்றியபடி, 1950-1960-ம் ஆண்டுகளுக்கு இடையில் அங்கு சோசலிச தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டு தொழிலாளர்கள் நலன்கருதி பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தி பிரபலமான தொழிற்சங்க தலைவர் என்னும் தகுதிக்கு உயர்ந்தார்.

    1967-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு அசைக்கவே முடியாத சக்தி என அறியப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். பின்னர், அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக உயர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவிக்காலத்தில் 1974-ம் ஆண்டு நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமான போராட்டமாக இன்றளவும் கருதப்படுகிறது.

    1975-ம் ஆண்டு அந்நாள் பிரதமர் இந்திரா காந்தியால் ‘மிசா’ எனப்படும் நெருக்கடி நிலை சட்டம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்து குரல் எழுப்பியதால் போலீசாரின் நடவடிக்கையில் சிக்காமல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். இடையில், பரோடா வெடிகுண்டு வழக்கில் 1976-ம் ஆண்டில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நெருக்கடி நிலை சட்டம் நீக்கப்பட்ட பின்னர் 1977-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள முசாபர்நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மத்திய மந்திரிசபையில் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக பதவி வகித்தபோது இந்தியாவில் இருந்து கொக்கோ கோலா கம்பெனியை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.



    1989-90 ஆண்டுவாக்கில் ரெயில்வேதுறை மந்திரியாகவும்,1998-2004-ம் ஆண்டுவாக்கில் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ராணுவத்துறை மந்திரியாகவும் பதவி வகித்த இவரது பதவிக்காலத்தில்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரும், போக்ரான் அணுகுண்டு பரிசோதனையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    1994-ம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் சமதா கட்சி என்னும் புதிய அரசியல் இயக்கத்தை  தொடங்கினர். 1996-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் இருந்து ஆறு மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும், ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும் என எட்டு மக்களவை உறுப்பினர்கள் கிடைத்தனர்.

    பீகார் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற சமதா கட்சியின் சார்பில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன்  சமதா கட்சி இணைக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார். 2007-ம் ஆண்டில் சமதா கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் சமதா கட்சிக்கு வந்தனர்.

    1967 முதல் 2004 வரை நடைபெற்ற 9 பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற தொழிற்சங்கவாதியான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடைசியாக 2009 ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

    அதன்பின்னர் முதுமைசார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்நிலையில், உடல்நிலை மோசமான நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ்(88) காலமானார். அவரது அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதி எதிர்நீச்சல் நிறைந்த போராட்டக்களமாகவே அமைந்திருந்தது. #GeorgeFernandes  #RIPGeorgeFernandes

    ×