search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் உயதநிதி ஸ்டாலின்"

    • புதுமைப்பெண் திட்டத்தால் இன்றைக்கு உயர்கல்வி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
    • இந்த 22 மாதங்களில் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட இங்கு நேரம் போதாது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் ராயனூரில் இன்று 1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.267 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உழைப்பின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் கரூர் மாவட்டம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி எதை செய்தாலும், எந்த நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்றாலும் அதனை மற்றவர்கள் பார்த்து பிரமிக்கும் அளவுக்கு செய்து காண்பிப்பார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் தனது சட்டமன்ற பணியை கரூர் மாவட்டத்தில் தொடங்கினார்.

    5 முறை முதலமைச்சராக, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக, 80 ஆண்டு காலம் அரசியல் பணியை கலைஞர் முதன் முதலாக கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடங்கினார்.

    சென்றமுறை நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நீங்களும் குளித்தலை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று செந்தில் பாலாஜி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால் அது சின்ன தொகுதியாக இருக்க வேண்டும் என்று கருதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டேன்.

    இருப்பினும், அவர் கூறிய படி கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுத்தந்தார். கரூர் மிகவும் சிறப்பு வாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஒரு வேலையை தொடங்கும்போது கிடைக்கும் உற்சாகம், வெற்றி கரூர் மாவட்டத்தை நம்பர் ஒன்றாக திகழ செய்கிறது.

    மற்ற மாவட்டங்களுக்கு கரூர் மாவட்டம் முன்மாதிரியாக திகழ்கிறது. கரூர் ஒரு தொழில் நகரம். லாரி மற்றும் பேருந்து பாடி கட்டும் தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. கொசுவலை உற்பத்தியில் இந்தியாவிற்கு முன்னோடியாக இருக்கிறது. அந்த வகையில், ரூ.1,800 கோடிக்கு கொசுவலை உற்பத்தி கரூரில் நடைபெறுகிறது. மேலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு போர்வைகள் தயாரித்து இந்தியாவில் பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற போது, வாக்களித்த மக்களுக்கு உழைக்க வேண்டும், வாக்களிக்காத மக்களும் வாக்களிக்கவில்லையே என்று எண்ணும் அளவுக்கு மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கூறினார்.

    அதன்படி எண்ணற்ற திட்டங்களை முதல்வர் கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இலவச மின்சாரம் கேட்டு கிடப்பில் போடப்பட்ட மனுக்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி இந்த 22 மாத ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு அமைச்சர செந்தில்பாலாஜியின் முன்னெடுப்பினால் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    ஒரு லட்சமாவது பயனாளிக்கு சென்னையில் நடந்த விழாவில் நானும், முதல்வரும் அதற்கான உத்தரவினை வழங்கினோம். ஒரு லட்சத்து 50 ஆவது பயனாளிக்கு முதல்வரே இங்கு நேரில் வந்து வழங்கினார்.

    முதலமைச்சர் கொண்டுவந்த மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தில் இந்த 22 மாத ஆட்சியில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் மட்டும் 31 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பஸ்களை பார்த்தாலே ஸ்டாலின் பஸ் வருகிறது என்று தாய்மார்கள் சொல்கிறார்கள்.

    அதேபோன்று, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ஒன்றரை லட்சம் குழந்தைகள் பயனடைந்தார்கள். இப்போது 2 லட்சம் குழந்தைகள் பயனடையும் வகையில் திட்டத்தை முதலமைச்சர் விரிவாக்கம் செய்துள்ளார்.

    ஒரு தந்தையாக இருந்து குழந்தைகள் பசியோடு வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். கல்விக்கும், மருத்துவத்திற்கும் முதல்வர் முன்னுரிமை அளித்து வருகிறார்.

    புதுமைப்பெண் திட்டத்தால் இன்றைக்கு உயர்கல்வி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த 22 மாதங்களில் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட இங்கு நேரம் போதாது. ஏற்கனவே மாயனூரில் கலைஞர் ஆட்சியில் 1 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் அளவுக்கு தடுப்பணை கட்டப்பட்டது.

    தற்போது குளித்தலை மருதூர் மற்றும் நெரூர் ஆகிய இரண்டு இடங்களில் ரூ.1,450 கோடியில் தடுப்பணைகள் கட்ட முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, எப்போதும் உங்களுடன் இருந்து, உங்களுக்கான உழைப்பவர்கள்தான் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. அரசு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சரின் திட்டங்கள் இன்றைக்கு நாடு முழுவதும் பரவி இருக்கிறது. முதல்வரின் திட்டங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்னும் இருக்கக்கூடிய 3 ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் கொடுத்த 100 சதவீத வாக்குறுதிகளையும் அவர் செய்து முடிப்பார். உங்களுக்கு என்ன தேவையோ, எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். ஒரு அண்ணனாக, தம்பியாக, மகனாக, பேரனாக, உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருந்து உழைக்க என்னால் முடிந்த அளவுக்கு உழைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×