search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்"

    • அ.தி.மு.க.வில் மோதல் நீடித்து வந்த நிலையில் டெல்லி பா.ஜனதா தலைமையின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்துக்கா? என்கிற விவாதம் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தது.
    • அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் மூலம் விவாதம் முடிவுக்கு வந்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அங்கீகரிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் 'ஒற்றை தலைமை நாயகன்' என்கிற அடைமொழியுடனேயே போஸ்டர்கள், பேனர்களை அச்சிட்டு வருகிறார்கள். இப்படி கட்சியின் தலைமை பதவியை எட்டிப்பிடித்துள்ள எடப்பாடி பழனிசாமி வசமே அ.தி.மு.க. தலைமை கழகமும் உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை முழுமையாக ஓங்கி இருக்கிறது.

    இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க.வில் மோதல் நீடித்து வந்த நிலையில் டெல்லி பா.ஜனதா தலைமையின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்துக்கா? என்கிற விவாதம் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தது.

    அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் மூலம் இந்த விவாதம் முடிவுக்கு வந்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கே தங்கள் ஆதரவு என்பதை இந்த சந்திப்பின் மூலம் அமித்ஷா உணர்த்தி இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இப்படி அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையை நிலைநாட்டி இருப்பதை தொடர்ந்தும் டெல்லி பா.ஜனதா தலைமையிடத்திலிருந்து அவருக்கே 'கிரீன் சிக்னல்' காட்டப்பட்டிருப்பதையடுத்தும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலர் தங்களது அரசியல் பயணத்தை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

    ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவதற்கு அவர்கள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதொடர்பாக மாவட்ட அளவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்தவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள் என்றும் விரைவில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலை எந்தவித பிரச்சினையுமின்றி எதிர் கொள்வதற்கு வசதியாகவே ஒற்றை தலைமை கோஷத்தை முன் கூட்டியே எழுப்பினோம். தற்போது அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதே கட்சிகள் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணத்துக்கும் தயாராகி வருகிறார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தி அதில் பங்கேற்று பேசுவதற்கும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை முடிவுக்கு வந்து ஒற்றை தலைமையை ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி உற்சாகத்துடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். நிச்சயம் அவரது வேகமான செயல்பாடுகளால் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    இதுபோன்ற சூழலில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் தனது அரசியல் பயணத்தை எப்படி மேற்கொள்ள போகிறார்? என்பதும் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரு பதவிகளுக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு உள்ள அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
    • இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு அனுமதி கோரி அக்கட்சியின் உறுப்பினர்கள் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கு தான் முழு அதிகாரமும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த பதவியை நீக்கிவிட்டு அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    இந்த இரு பதவிகளுக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு உள்ள அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.

    இந்த வழக்கிற்கு அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மனுதாரர்கள் இருவரும் அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் இல்லை. எனவே இந்த வழக்கை தொடருவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை' என்று கூறி இருந்தனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர்கள் இருவரும் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளித்தார்.

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயணன், ராம் குமார் ஆதித்தனும், சுரேன் பழனிசாமியும் அ.தி.மு.க.வில் தற்போது அடிப்படை உறுப்பினர்களாக இல்லை.

    ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள உறுப்பினர் அட்டை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதமே காலாவதியாகிவிட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

    இதையடுத்து தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.

    ×