search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் கண்காணிப்பு"

    கோவை அருகே மளிகை கடை ஒன்றில் 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து குட்கா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கோவை:

    கோவை புலியகுளம் பகுதியில் மளிகை கடை ஒன்றில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

    அதன்பேரில் கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு குட்கா விற்பனைக்காக இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் சுயம்புவிடம் (வயது 36) விசாரணை நடத்தினர்.

    அப்போது கடைக்கு அருகே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விற்பனைக்காக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கிருத்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இது குறித்து சுயம்புவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக கோவையில் உள்ள 55 ஆவின் பாலகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது 14 கடைகளில் இருந்து 12.5 கிலோ கலப்பட டீத்தூள், 15 கிலோ அதிக நிறம் கலக்கப்பட்ட உணவு பொருட்கள், 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர். சோதனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    புலியகுளத்தில் சுயம்பு என்பவரது பெட்டிக்கடையில் இருந்து 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    பெங்களூரில் இருந்து தனியார் பஸ்கள், ரெயில்களில் குட்கா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக புகார் கூறப்படுகிறது. எனவே கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிகாலை நேரத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gutka
    கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Kollidamriver
    திருச்சி:

    கர்நாடக அணைகளில் அதிக அளவில் மழை பெய்யும் காலங்களில் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடந்து திருச்சி வழியாக முக்கொம்பு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கும், கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் கடலுக்கும் செல்கிறது.

    காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து உள்ள காலங்களில் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் காவிரியை விட கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கீழணைக்கு சென்று அங்கிருந்து வடவாறு (வீராணம்), ராஜன் வாய்க்கால் உள்ளிட்டவை நிரம்பி மீதமுள்ளவை கடலில் கலக்கிறது.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அந்த பாலம் பயன்படுத்த முடியாத அளவுக்கு பலவீனம் அடைந்ததால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது.

    இதையடுத்து பழைய கொள்ளிடம் பாலத்தில் குறைவான எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வரத்து காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பழைய கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் இரும்பு பாலத்தில் சிமெண்டு மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, கண்காணிப்பு பொறியாளர் பழனி, உதவி பொறியாளர் வீரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



    நேரம் செல்ல செல்ல தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமானது. இதையடுத்து கொள்ளிடம் பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்தை தடை செய்தனர். அந்த பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது. திருவானைக்காவலில் இருந்து டோல் கேட், உத்தமர் கோவில், பிச்சாண்டார் கோவில், தாளக்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பாலம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Kollidamriver


    ×