search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதானி"

    • மருத்துவமனைகளில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

    புதுடெல்லி:

    ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இரவு பகலாக நடந்த மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒடிசா ரெயில் விபத்தால் நாம் அனைவரும் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பள்ளிக் கல்விக்கான செலவை அதானி குழுமம் ஏற்றுக் கொள்வது என முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிப்பதும், அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு" என குறிப்பிட்டுள்ளார்.

    • ஹிண்டர்பர்க் அறிக்கை காரணமாக அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிந்தன.
    • விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது. இந்திய அரசியலில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    ஹிண்டர்பர்க் அறிக்கை காரணமாக அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிந்தன. அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என செபியும் கூறியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான்.
    • இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:-

    அதானி விவகாரத்தில் ரூ.10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர். பா.ஜனதா எம்.பி.க்கள் 350 பேர் காவி துண்டு போட்டுகிட்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் 39 பேர் கருப்பு சட்டை போட்டு கிட்டு கேள்விகளால் துளைத்தெடுத்தோம்.

    அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதல்-மந்திரிகள் யாரும் பேசவில்லை. இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.

    அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக கூட என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன்.

    • காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
    • புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு துறைமுகம் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    காரைக்கால் துறைமுகத்திற்காக 600 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தந்தது. துறைமுகத்தின் வருவாயில் ரூ.100-க்கு ரூ.2.6 சதவீதம் அரசுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

    மார்க் என்ற தனியார் நிறுவனம் புதுவை அரசுடன் ஒப்பந்தம் செய்து துறைமுகத்தை 2009-ல் தொடங்கியது. கடந்த 14 ஆண்டாக மார்க் நிறுவனம் துறைமுகத்தை நடத்தி வந்தது.

    காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    தனியாருக்கு துறைமுகத்தை வழங்கும்போதே அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் ஈவுத்தொகையை கூடுதலாக பெற வேண்டும் என்றும், அப்பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.

    இந்த விவகாரம் அவ்வப்போது சட்டசபையிலும் எதிரொலித்து வந்தது. இதனிடையே காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படு வதால் அப்பகுதியில் மக்கள் காற்று மாசுபாடால் பாதிக்கப்படுவதாக புகாரும் எழுந்தது.

    மேலும் காரைக்கால் துறைமுகத்தை இறக்குமதி, ஏற்றுமதியை கண்காணிக்க சரியான அமைப்புகள் இல்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. காரைக் கால் துறைமுகம் கடத்தல் கேந்திரமாக மாறிவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதனிடையே காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனம் தொழில் நஷ்டம் காரணமாக நலிவடைந்து விட்டதாக அறிவித்தது. இதனால் துறைமுகத்தை விற்பனை செய்ய தொழில் தாவா தீர்ப்பாயத்தை அணுகியது.

    இந்த தீர்ப்பாயம் மார்க் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடனை ஈடுசெய்யும் வகையில் துறைமுகத்தை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் நடத்துவதற்காக முன்வந்துள்ளது.

    இதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்பட உள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

    புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பகுதியை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட முக்கிய விதிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இந்த விதிமுறைகளோடு புதிய ஒப்பந்தந்தை நிறைவேற்ற தலைமை செயலருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    • ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.
    • இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார்.

    புதுடெல்லி:

    'ஹுருண் இந்தியா' ஆய்வு நிறுவனம், எம்3எம் மனை வணிக நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பணக்காரர்கள், இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    இதில் அகமதாபாத்தை சேர்ந்த 60 வயதான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மார்ச் 15-ந்தேதி நிலவரப்படி ரூ.4.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

    2022-23ம் நிதியாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.

    அதானி நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட தாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    அதேநேரத்தில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.6.77 லட்சம் கோடி ஆகும். இவரது சொத்து மதிப்பும் 20 சதவீதம் சரிவை கண்டு உள்ளது.

    கடந்த 2021-2022ம் நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடத்தில் இருந்தார். இப்போது அவர் அந்த அந்தஸ்தை இழந்து 2-வது இடத்துக்கு வந்து உள்ளார்.

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சீரம் இந்தியா நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா ரூ.2.23 லட்சம் கோடி சொத்துகளுடனும், எச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடார் ரூ.2.14 லட்சம் கோடி சொத்துகளுடனும், தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.1.65 லட்சம் கோடி சொத்துகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் அதானி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 பேரில் இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

    இந்த பட்டியலில் சைரஸ் பூனாவாலா 46-வது இடத் திலும், சிவ் நாடார் 50-வது இடத்திலும், லட்சுமி மிட்டல், எஸ்.பி.ஹிந்துஜா ஆகியோர் 76-வது இடத்திலும் உள்ளனர். திலீப் ஷங்வி 98-வது இடத்திலும், ராதாகிஷன் தமானி 107-வது இடத்திலும், குமார் மங்கலம், உதய் கோட்டக் ஆகியோர் 135-வது இடத்திலும் உள்ளனர்.

    உலக அளவிலான பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்கா 32 சதவீதத்தை கொண்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடந்தது.
    • முன்னதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இதே பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை கண்டித்து பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, கேரள காங்கிரஸ், தேசிய மாநாடு, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ம.தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட 16 கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் அதானி விவகாரம், மத்திய அரசு என்.ஐ.ஏ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பும் போது 16 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இதே பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டம் நடப்பதற்கு முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக விவாதித்தனர்.

    • சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும்.
    • அதானி பிரச்சினையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

    வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும். வதந்திகளைப் பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும் வட இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்குமான முயற்சியாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் காரணம் என அண்ணாமலை பேசி வருகிறார். அதானி பிரச்னையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது.
    • 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியது.

    இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

    அதானி குழும நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிலுவையில் இருந்த கடன்களை அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தின. எனினும், ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின்னான கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது. இத்தொகை, இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான டாடாவின் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகும் எனக் கூறப்படுகிறது.

    ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்து வந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக சுமார் 80 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10- வது இடத்தில் உள்ளார்.

    • சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க நீதிபதிகள் ஏற்க மறுப்பு
    • இந்த விவகாரத்தில் விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து

    புதுடெல்லி:

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்கக் கோரி எம்.எல்.சர்மா, பிரசாந்த் பூஷன், காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்கூர், வழக்கறிஞர் விஷால் திவாரி உள்ளிட்டோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு முன்னதாக மத்திய அரசின் சார்பில், இந்த விவகாரத்தை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க தயாராக இருப்பதாகவும், முதலீட்டாளர்களின் நலனை கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    இதனை நீதிபதிகள் நிராகரித்ததுடன், மனுதாரர்களின் யோசனையை கேட்டது. இந்த விவகாரத்தில், குறிப்பாக இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் உயர் அதிகாரம் படைத்த குழு விசாரிக்க வேண்டும் என மனுதாரர் விஷால் திவாரி தெரிவித்ததையும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அதானி குழுமம் மீதான அறிக்கை குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.

    9 மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு எவ்வித குழுவையும் அமைக்க மாட்டோம் என தெளிவுபடுத்தினர். மேலும், ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று கூறினர்.

    இந்த விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க மாட்டோம். குழுவை நாங்களே ஏற்படுத்துவோம். இந்த விவகாரத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தோல்வி என கருத முடியாது, என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த மனுவை அளித்தார்.
    • வழக்கு மீதான விசாரணை வருகிற 17ம் தேதி இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

    அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

    அதானி குழும மோசடி விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற கூட்டுக் குழு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கின.

    இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய நிதி அமைச்சகத்துக்கும், செபிக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    நேற்று உச்ச நீதிமன்றத்தில் செபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதானி குழும மோசடி புகார் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி குறித்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது.

    உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வை விசாரணை நடத்த கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த மனுவை அளித்தார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வருகிற 17ம் தேதி இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

    • நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என எம்.எல்.ஷர்மா வாதிட்டார்.
    • இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது என நீதிபதிகள் கருத்து

    புதுடெல்லி:

    அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதாக கூறி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

    வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், "அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தொடுத்த தாக்குதலால், அதானி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது, முதலீட்டார்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் பணம் வீணானது. நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் அதிகாரிகளால் எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கில், மத்திய அரசுடன் இந்திய ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உள்ளிட்ட அமைப்புகள் பிரதிவாதிகளாக இணைக்கப்பட்டுள்ளன.

    இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்பு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா வாதிட்டார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி வாதிட்டார்.

    வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது, இது தொடர்பான அக்கறையை நாம் காட்டவேண்டி உள்ளது. எனவே, முதலீட்டாளர்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? என்ற விவரத்தை செபியிடம் கேட்டு, ஆலோசனை பெற்று திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும்' என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டு மனுக்கள் மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

    'நாங்கள் இதில் தலையிட்டு, இது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு வழிமுறை இருக்கிறதா? கொள்கை விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அது அரசாங்கம் தொடர்புடையது. இந்த நடவடிக்கை விஷயத்தில் இந்திய அரசு ஆர்வமாக இருந்தால், ஒட்டுமொத்த நிலைமை மற்றும் ஆய்வு மேற்கொள்ள நீதிபதி உள்பட நிபுணர்கள் குழுவை அமைக்க பரிந்துரைக்கிறோம்' என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

    • அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன.
    • ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. அந்த அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்" என கூறப்பட்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன.

    இந்த சூழ்நிலையில், ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான வாச்டெல்லை அதானி குழுமம் நியமித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

    அதானி குழும பங்குகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை கையாள்வது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக வாட்ச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட இந்த சட்ட நிறுவனம், கார்ப்பரேட் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றது. பெரிய மற்றும் சிக்கலான பரிவர்த்தனைகளை தொடர்ந்து கையாளுகிறது.

    ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது என்றும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன என்றும் அதானி குழுமம் கூறியது. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×