search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youngman murder case"

    • பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • கொலை செய்யப்பட்ட பேச்சிராஜாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பேச்சிராஜா (வயது 26). கட்டிட தொழிலாளி.

    நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். நெல்லை-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் பேச்சிராஜாவை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

    இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பழிக்குப்பழியாக கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட பேச்சிராஜாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும், குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

    இந்த நிலையில் மானூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜவேலு(30), சுதர்சிங்(30), தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்த ஹரி நாராயணன்(20) ஆகிய 3 பேரும் தச்சநல்லூர் போலீசில் சரண் அடைந்தனர்.

    சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாதுரை, சரண் அடைந்த 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார். முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருக்கு 3 மகன்கள். இதில் 3-வது மகன் மாசான மூர்த்தி தூத்துக்குடியில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு பொங்கலையொட்டி ஊருக்கு வந்தபோது அவரை 10 பேர் கும்பல் கடத்திச்சென்று கொலை செய்தது. இந்த கொலை சம்பவத்தில் பேச்சிராஜாவும் சேர்க்கப்பட்டு இருந்தார். தற்போது சரண் அடைந்த வர்களில் ஒருவரான ராஜவேலு, மாசானமூர்த்தியின் நெருங்கிய நண்பர். லாரி டிரைவரான இவர், தனது நண்பனை கொலை செய்தவர்களில் யாராவது ஒருவரையேனும் கொலை செய்துவிட வேண்டும் என்று ஆதங்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    வாடகைக்கு வீடு

    இதற்காக தனது உறவினரான கல்லூரி மாணவர் ஹரி நாராயணன் மற்றும் நண்பர் சுதர்சிங் ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்கள் 3 பேரும் பாளை பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

    அங்கிருந்து கொண்டு 3 பேரும் தினமும் தச்சநல்லூர் பகுதிக்கு வந்து நோட்டமிட்டுள்ளனர். தினமும் காலை பேச்சிராஜா வேலைக்கு செல்லும் நேரத்தை அறிந்து அவர்கள், கொலை செய்தது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் இவர்கள் 3 பேருக்கு மட்டும் தான் தொடர்பா? அல்லது வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தச்சநல்லூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×