search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wildlife"

    • போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம்.
    • மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் மழை பெய்யாமல், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவில் பனி கொட்டிவிடும். இதனால், அனைத்து செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து போய்விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடும் வெயில் நிலவும்.

    இந்த சமயங்களில் பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து போய்விடும்.

    அதேபோல், நீரோடைகளில் முற்றிலும் தண்ணீர் குறைந்து வறண்டு போய் காட்சியளிக்கும். இதனால், போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, பந்திப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர் உள்ள பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துவிடும்.

    தற்போது நீலகிரியில் மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி போன்ற பகுதிகளில் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அதேபோல், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் ஓடுகிறது. இதனால், விலங்குகள் மீண்டும் திரும்ப தொடங்கியுள்ளன.

    இதனால், ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் சாலையோரங்களில் காட்டு யானைகள், காட்டு மாடுகள், மான்கள், நீலகிரி லங்கூர் குரங்குகள், மயில் உள்ளிட்ட சில பறவைகள் சாலையோரத்திலேயே சுற்றித் திரிகின்றன.

    சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் வலம் வரும் விலங்குகளை வாகனங்களில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் இந்த வன விலங்குகளை கண்டு உற்சாகமடைகின்றன.

    மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது.

    • உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
    • வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது.

    இந்த வனச்சரகங்களில் ஆண்டு தோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    அந்த வகையில் கடந்த 23-ந்தேதி உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி நேற்று நிறைவடைந்தது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்றது.உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வன சகரங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

    அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட்டது.மேலும் யானைலத்தி, காட்டெருமைசாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரி மந்தி, சிங்கவால்குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. இறுதி நாளான இன்று கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த கணக்கெடுப்பு பணியில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் மேற்பார்வையில் வனச்சரகர்கள் சிவக்குமார் (உடுமலை), சுரேஷ் (அமராவதி), மகேஸ் (கொழுமம்), முருகேசன் (வந்தரவு) தலைமையிலான வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புகாவலர்கள் ஈடுபட்டனர்.

    • தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
    • பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார ங்களில், அனைத்து பகுதிகளிலும் காட்டுப்பன்றி களால் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். வன எல்லை மட்டுமல்லாது, வெகு தொலைவிலுள்ள கிராம ங்களிலும் காட்டுப்பன்றிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது.

    நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், மா, தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. எண்ணிக்கை அதிகரிப்பால், விவசாயி களும் காட்டுப்ப ன்றிகள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் விளைநிலங்க ளுக்கும், கிராம இணைப்பு ரோடுகளில் செல்லவும் விவசாயிகள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுகாவிலும் பல 100 சதுர கி.மீ., பரப்பளவில் காட்டுப்பன்றிகள் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- காட்டுப்பன்றிகளால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது. வரப்பு பயிர்களை அழித்தல், விளைபொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்பு களை சேதப்படுத்துதல் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.வனத்து றையினர் இப்பிரச்சினைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதிக்கி ன்றனர். பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.சமவெளிப்பகுதியில் மட்டும் தங்கி பெருகும் காட்டுப்ப ன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.இதற்கான கருத்துருவை வனத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளுக்கு முன் உடுமலை பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய சூழலில் அனைத்து விவசாயிகளும் ஒருங்கி ணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    •  வனத்துறை அலுவலர்களுக்கான வனத் தீ தடுப்பு, வன உயிரினங்களை காப்பது, தீ வருமுன் காப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் வன பகுதியில் ஏற்படும் தீயினை எவ்வாறு அணைப்பது, தீ ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி பகுதியில்  வனத்துறை அலுவலர்களுக்கான வனத் தீ தடுப்பு, வன உயிரினங்களை காப்பது, தீ வருமுன் காப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் திலிப் தலைமை தாங்கினார். தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் வனச்சரக அலுவலர் இன்பசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த முகாமில் வன பகுதியில் ஏற்படும் தீயினை எவ்வாறு அணைப்பது, தீ ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.

    இதில், கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் வனசரக அலுவலர் சிவகுமார், பெரும்பள்ளம் வனசரக அலுவலர் குமேரசன், பேரிச்சம் வனசரக அலுவலர் சுரேஷ்குமார், பழனி வனசரக அலுவலர் பழனிக்குமார் , மன்னவனூர் வனசரக அலுவலர் ஞான சேகரன் மற்றும் வனவர் ராமசாமி, விவேகானந்தன், பூவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வனகாப்பாளர், வன காவலர்கள் , வேட்டை தடுப்பு காவலர்கள், சூழல் சுற்றுலா காவலர்கள் என ஏராளமான வனத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வனவிலங்குகளை படம்பிடித்த 11-ம் வகுப்பு மாணவன் இப்ராஹிம் முதல் பரிசு பெற்றார்.
    • மாறுவேடப் போட்டியில் யூகேஜி மாணவி அக்ஷயாதுர்கா முதல் பரிசு பெற்றார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளா் ராம்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியா் கார்த்திக் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வன விலங்குகள் பாது காப்பு, உயிரியல் பன்மயம் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் மாறு வேடப்போட்டி, ஓவிய ப்போட்டி, பாட்டுப்போட்டி, போட்டோஷாப், பேஷியல் பெயின்டிங் போன்ற போட்டிகளும், ஆசிரியா்கள், பெற்றோர்களுக்கு தனிநடிப்பு, ஞாபகத்திறன் போட்டிகளும் நடத்தப்ப ட்டது.

    போட்டியில் சிறப்பாக வனவிலங்குகளை படம்பிடித்த 11-ம் வகுப்பு மாணவன் இப்ராஹிம் முதல் பரிசு பெற்றார். வனவிலங்கு களையும் காடுகளையும் அழித்தால் உண்டாகும் விளைவுகளை சிறப்பாக பேஷியல் பெயிண்டிங் மூலம் உணா்த்திய 12-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம்ஆகாஷ் குழுவினர் முதல் பரிசு பெற்றனா். மாறுவேடப் போட்டியில் முயல் வேடமணிந்த யூகேஜி மாணவி அக்ஷயாதுர்கா முதல் பரிசு பெற்றார். ஞபாகத்திறன் போட்டியில் பெற்றோர் தேவி முதல் பரிசு பெற்றார். தனி நடிப்பு போட்டியில் ஆசிரியைகள் சம்ஷியாபேகம், அன்பரசி குழு முதல் பரிசு பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்கள், பெற்றோர், ஆசிரியா்களுக்கு தாளாளா் ராம்மோகன் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். ஆசிரியை அன்பரசி நன்றி கூறினார்.

    • வனஉயிரினங்களை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வனக்காவலர்கள் குழுவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-அரியலூர் சாலையில் சித்தளி வனக்காப்புக்காடு பகுதிக்கு அருகே சிலர் வன உயிரின வேட்ைடயில் ஈடுபட்டு வருவதாக பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், பெரம்பலூர் வனச்சரகர் பழனிகுமரன் தலைமையில், வனவர் குமார், வனகாப்பாளர்கள் ரோஜா, அன்பரசு, வனக்காவலர் சவுந்தர்யா ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி வன உயிரின வேட்ைடயில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், வன உயிரின வேட்ைடயில்ஈடுபட்ட 3 பேரும் குன்னம் தாலுகா ஒகளுரைச்சேர்ந்த ராமசாமி (22), சாமிநாதன் (60), ராமலிங்கம் (70) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பேரிடமும் இருந்து வேட்டையாடப்பட்ட வன உயிரினங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து 3 பேர் மீதும் வன உயிரின காப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு, 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஆண்டுதோறும் இந்த சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும்.
    • நரிகள், குதிரை, குரங்குகள் முயல்கள், பன்றிகள் கூட்டம் கூட்டமாக சராணலயத்தில் காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பசுமைமாறா வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2000-க்கும் மேற்பட்ட வெளிமான் மற்றும் புள்ளிமான், 500-க்கும் மேற்பட்ட குரங்குகள், குதிரைகள், நரி, முயல், மயில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்கு சரணாலயத்தில் விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 இயற்கையான குளங்க–ளும் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும். அப்பொழுது செயற்கையாக கட்டபட்டுள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் மழை பெய்ததால் தண்ணீர் தட்டுப்பாடு வரவில்லை.

    இதனால் காட்டு விட்டு மான்கள் வெளியேறவில்லை.உணவும் தண்ணீரும் போதுமான அளவு கிடைத்ததால் மான்கள் நன்றாக செழித்து வளர்ந்து காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இது தவிர நரிகள், குதிரை, குரங்குகள் முயல்கள், பன்றிகள் கூட்டம் கூட்டமாக சராணலயத்தில் காணப்படுகிறது.

    இதனால் சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு பார்ப்பதற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது .இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வனத்துறையின் சார்பில் வார விடுமுறை நாட்களில் மேம்பாட்டு குழுவின் சார்பில் உணவகம் அமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது. வனவிலங்குகளை சுற்றி பார்ப்பதற்கு சைக்கிள், மினி வேன், வழிகாட்டி பைனாகுலார் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வனவிலங்கு காண காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை உகந்த நேரம் என கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.

    • நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர்.
    • வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கார்த்திக் (வயது24). இவரிடம் வனவிலங்குகள் வேட்டையாட கூடிய நாட்டு வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து நேற்றிரவு கார்த்திக் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த கார்த்திக்கை போலீசார் பிடித்து, வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    அவரிடம் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கார்த்திக் மீது வனத்துறையில் ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது.

    கடையம் அருகே ஊருக்குள் புகுந்த வன உயிரினங்களை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி லதா என்பவர் வீட்டிற்குள் அரிய வகை உயிரினமான உடும்பு குட்டி ஒன்று பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனப் பணியாளர்கள் அங்கு சென்று உடும்பை மீட்டு ஆம்பூர் பீட் வனப்பகுதிக்குள் விட்டனர். நடவடிக்கை எடுத்த கடையம் வனத்துறையினரை பொதுமக்களும் வன ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.

    கடையம் வனச்சரகத்தில் உட்பட்ட மாதாபுரம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக கடையம் வனச்சரக அலுவலர் பொறுப்பு உதவி வனப்பாதுகாவலர் ராதைக்கு கிடைத்தது. இதையடுத்து வனப் பணியாளர்ள் சம்பவ இடத்திற்கு சென்று நல்ல பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
    பரப்பலாறு அணையை தூர்வாராத காரணத்தினால் கழிவுகள் சுமார் 30 அடி உயரம் வரை உள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும்.

    தற்போது அணையில் 62 அடி தண்ணீர் உள்ளது. வரத்து இல்லை. சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகியவற்றின் குடிநீருக்காக 3 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது,

    இதன் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய ஆறுகுளங்கள் பாசன வசதி பெறுகிறது.

    பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது.

    இந்தாண்டு போதியளவு தென்மேற்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 6 குளங்களும் நிரம்பாமல் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் கவலையடைந்துள்ளனர். இப்பகுதியில் ஒருசில ஊர்களைத் தவிர பிற ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

    பரப்பலாறு அணையை தூர்வாராத காரணத்தினால் வண்டல் மண் மற்றும் கழிவுகள் சுமார் 30 அடி உயரம் வரை உள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட தொட்டிகளில் நீரை நிரப்பினால் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி ஊருக்குள் புகுவதை தடுக்கலாம் என மலைப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

    கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனவிலங்குகளை கண்காணிக்க ஆளில்லாத குட்டி விமானம் கோவை வந்தது. அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து இதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இதில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள், மலையடிவார பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை தடுக்க அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைந்த பகுதி வழியாக காட்டு யானைகள் அகழியை கடந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுகின்றன.

    அவற்றை கண்காணித்து மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வந்தாலும், சில நேரங்களில் யானை- மனித மோதல் நடந்து வருகிறது. இதனால் மலையடிவார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தாலும், அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும்போது, அவைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டதா அல்லது அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் வனப்பகுதிக்குள் எந்த இடங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    எனவே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்துவதற்காகவும், வனவிலங்குகளை கண்காணிப்பதற்காகவும் ஆளில்லாத குட்டி விமானம் வேண்டும் என்று வனத்துறை சார்பில் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. தற்போது அதற்கான அனுமதி அளித்து, ஆளில்லாத குட்டி விமானமும் கோவை வந்துள்ளது.

    இதை இயக்க அதிகாரிகள் யாரை நியமிப்பது? என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அதை பயன்படுத்து வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் அந்த ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவைக்கு கொடுக்கப்பட்டு உள்ள ஆளில்லாத குட்டி விமானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. வீடியோ பதிவு செய்வதுடன், புகைப்படமும் எடுக்கும். அதுபோன்று அதில் தேனீக்கள் போன்று சத்தம் எழுப்பும் வசதியும் உள்ளது. பெரும்பாலும் தேனீக்களின் சத்தம் கேட்டதும் காட்டு யானைகள் ஓடிவிடும்.

    வனப்பகுதிக்கு மேல் இந்த குட்டி விமானத்தை இயக்கி, கண்காணிக்கும்போது, வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக யாராவது நடமாடுகிறார்களா? என்பதையும் கண்காணிக்க முடியும். அத்துடன் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த வகையான வனவிலங்குகள் இருக்கின்றது என்பது குறித்தும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்க பயிற்சி அளித்த பின்னர், அதன் பயன்பாடு குறித்து பரிசோதனை செய்யப்படும். இந்த ஆளில்லாத குட்டி விமானம் வித்தியாசமானதாக, எடை அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே வனப்பகுதியை விட்டு வெளியே வந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த மிகவும் உதவியாக இருக்கும். அதுபோன்று அந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதா? அல்லது வன எல்லையில்தான் நிற்கிறதா? என்பது குறித்தும் அறிய முடியும்.

    மேலும் இதை வனப்பகுதிக்கு மேல் இயக்கும்போது, வனப்பகுதிக்குள் காயத்துடன் ஏதாவது வனவிலங்குகள் சுற்றுகிறதா? என்பதையும் உடனடியாக கண்டறிய முடியும். எந்தப்பகுதியில் வனவிலங்குகளின் தொந்தரவு இருக்கிறதோ அங்கு உடனடியாக ஆளில்லாத குட்டி விமானத்தை எடுத்துச்சென்று கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்
    ×