search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "west delhi constituency"

    அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ தனக்கு ஆசையும் இல்லை, ஆர்வமும் இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் கூறினார். #LSPolls #BJP #VirenderSehwag
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலங்களை களம் இறக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்களை போட்டியிட வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக்கை பா.ஜ.க. சார்பில் போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக பா.ஜ.க. பிரதிநிதிகள் அவரை சந்தித்துப் பேசினார்கள்.

    “மேற்கு டெல்லி தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம்” என்று ஷேவாக்கிடம் பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். மேற்கு டெல்லி தொகுதியில் தற்போது பா.ஜ.க. எம்.பி.யாக பர்வேஷ்வர்மா உள்ளார். ஷேவாக் தேர்தலில் போட்டியிட முன்வந்தால் அந்த தொகுதியை விட்டுத்தர தயார் என்று அவர் கூறியிருந்தார்.

    ஆனால் பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்க கிரிக்கெட் வீரர் ஷேவாக் மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ எனக்கு ஆசையும் இல்லை, ஆர்வமும் இல்லை” என்றார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் ஷேவாக்கை தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சி நடந்தது. அப்போதும் ஷேவாக் போட்டியிட மறுத்துவிட்டார். மீண்டும் அவர் பா.ஜ.க.வின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை போட்டியிட வைக்க முயற்சி நடந்து வருகிறது. கவுதம் காம்பீர் கடந்த டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.

    அப்போது கிரிக்கெட் உலகுக்கு அவர் செய்த சேவைகளை பாராட்டி பிரதமர் மோடி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் ஆதரவாளராக காம்பீர் மாறினார்.

    அவர் தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடக்கும் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் காம்பீர் பங்கேற்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ஏப்ரல் முதல் வாரம் வெளியிட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். #BJP #VirenderSehwag
    ×