search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walking exercise"

    • நடைப்பயிற்சி என்பது உடலை சீக்கிரம் சோர்வடையச் செய்யாத சிறந்த உடற்பயிற்சியாகும்.
    • காலையில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தாலே சுமார் 400 கலோரிகளை எரித்துவிடலாம்.

    காலையில் எழுந்தவுடன் நினைவுக்கு வருவதும், செய்ய வேண்டிய முதல் வேலையும் நடைப்பயிற்சியாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் நடைப்பயிற்சியை விரும்புவதில்லை. மற்ற உடற்பயிற்சிகளை போல் கூடுதல் முயற்சி மேற்கொள்ளாமலேயே அதிக கலோரிகளை எரிப்பதில் நடைப்பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் அதிகாலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வது பல்வேறு வகைகளில் பலன் தரும். அவை பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

    உடல் ஆற்றல் அதிகரிக்கும்:

    நடைப்பயிற்சி என்பது உடலை சீக்கிரம் சோர்வடையச் செய்யாத சிறந்த உடற்பயிற்சியாகும். மேலும் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்யும். ஏனென்றால் உடற்பயிற்சியின்போது உடல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால், நிலையான ஆற்றல் தேவைப்படும். எனவே செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், ஆற்றல் அளவையும் அதிகரிக்கும். வீட்டிற்குள் 10 நிமிடங்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பது நடைப்பயிற்சி ஆகி விடாது. சரியான நடைப்பயிற்சி என்பது பூங்காவில் அல்லது வீட்டிற்கு வெளியே தெருவில் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் நடந்து செல்வதாகும். தூக்கம் வராமல் இருப்பவர்கள் ஒரு கப் காபி குடிப்பதை விட, படிக்கட்டுகளில் 10 நிமிடம் நடப்பது அதிக ஆற்றலைத் தரும் என்பது ஆய்வில் தெரியவந் துள்ளது.

    மனநிலையை மேம்படுத்தும்:

    தொடர்ந்து வேலை செய்வதும், அதே வழக்கத்தை பின்பற்றுவதும் மனச்சோர்வுக்கு ஆளாக்கும். காலையில் எழுந்ததும் நடப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மனநிலையையும் மேம்படுத்தும். ஏனென்றால், நடைப்பயிற்சி ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் இயங்க வைக்கும். உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கும். அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவும். இது நேர்மறையான மனநிலையை பேணுவதற்கு வழிவகுக்கும்.

    சுயமரியாதையை மேம்படுத்துவது, பதற்றத்தை குறைப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, மனச்சோர்வை கட்டுப்படுத்துவது, நேர்மறை எண்ணத்தை உருவாக்குவது, மனச்சோர்வின் அறிகுறிகளை போக்குவது, மன நல பிரச்சினைகளை தீர்ப்பது என உடற்பயிற்சிக்கும், மன நலனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் மன நல பிரச்சினைகளை அனுபவிப்பவர்கள் தினமும் காலையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

    எடை இழப்புக்கு உதவும்:

    காலையில் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில் நடைப்பயிற்சி கலோரிகளை குறைக்க உதவுகிறது. காலையில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தாலே சுமார் 400 கலோரிகளை எரித்துவிடலாம்.

    இது நடையின் வேகத்தைப் பொறுத்தது. மேலும் ஒவ்வொரு நபரின் ஆரோக்கியத்தை பொறுத்தும் மாறுபடும். வயிறு வெறுமையாக இருப்பதாலும், ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக உடலில் உள்ள கொழுப்புகளை உடல் கரைப்பதாலும், காலையில் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

    உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கும்:

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்க காலை நேர நடைப்பயிற்சி சிறந்தது. இது பல்வேறு வைரஸ் நோய்கள், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து விலகி இருக்க துணை புரியும். சுவாச உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, தினமும் 30 நிமிடம் நடக்க ஆரம்பித்தால், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கலாம்.

    உடல் செயல்பாடு:

    காலையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடற் பயிற்சியின் பெரும்பகுதியை நிறைவு செய்துவிடலாம். காலை வேளையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் நோய்கள் வராமல் தடுக்கலாம். இதய பிரச் சினைகள் ஏற்படும் அபாயம் குறையும். வாரத்துக்கு குறைந்தது 300 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது. வாரத்தில் 7 நாட்களில் குறைந்தது 5 நாட்களாவது காலையில் நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

    தசைகளை பலப்படுத்தும்:

    தசைகள் நடைப்பயிற்சி மூலம் பலமடைகின்றன. ஏனெனில் நடைப்பயிற்சி உடலின் அனைத்து முக்கிய தசைகளையும் வேலை செய்ய வைக்கிறது. அதன் மூலம் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நடைப்பயிற்சியின்போது சீரான வேகத்தில் உற்சாகமாக நடக்கலாம். படிக்கட்டுகளில் ஏறலாம் அல்லது சாய்ந்த மேற்பரப்பில் நடந்து பழகலாம்.

    தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்:

    காலையில் நடைப்பயிற்சி செய்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். தேசிய உடலியல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், காலை நேர நடைப்பயிற்சிக்கு பிறகு இரவில் நன்றாக தூங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டவர்களுக்கும் காலை நேர உடற்பயிற்சி சிறந்த பலனை கொடுத்திருக்கிறது.

    நடைப்பயிற்சிக்கு காலை நேரம்தான் சிறந்தது. ஏனென்றால் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தசைகள் சோர்வு மற்றும் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்குகிறது.

    • நடைப்பயிற்சியில் சற்று வித்தியாசங்களை மேற்கொண்டால், பலவிதமான பலன்கள் கிடைக்கும்.
    • நடைப்பயிற்சி என்பது, இலக்கை அடைய முன்னோக்கி வேகமாக நடப்பதுதான்.

    நடைப்பயிற்சியின் நன்மைகள் பல. அனைவருக்கும் தெரிந்த, வழக்கமான நடைப்பயிற்சி என்பது, இலக்கை அடைய முன்னோக்கி வேகமாக நடப்பதுதான். ஆனால், நடைப்பயிற்சியில் சற்று வித்தியாசங்களை மேற்கொண்டால், பலவிதமான பலன்கள் கிடைக்கும். இதோ சில நடையின் வகைகள்:

    பின்னோக்கி நடத்தல்: முன்னோக்கி நடப்பது எளிமையானது. ஆனால், கால்களைப் பின்னால் வைத்து பின்னோக்கி நடக்கும் முறை சற்று சிரமமானது. இதில் பல நன்மைகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் சமநிலை மேம்படும். வேகமாகக் கையை வீசி நடக்காமல், நிதானப்போக்கு கிடைக்கும். தசைகள், மூட்டு, கணுக்கால் வலுவடையும். தொடைக்குப் பின்னால் உள்ள தசைநார்கள் சீராக இயங்க உதவுவதால், முதுகு வலி குறையும். மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். இவ்வாறு 15 நிமிடங்கள் நடக்கலாம். நரம்புக் கோளாறு உள்ளவர்கள், நடப்பதில் சிரமம் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த நடைப்பயிற்சியைத் தவிர்க்கலாம்.

    மெதுவான நடைப்பயிற்சி: மெதுவான நடைப்பயிற்சி, உடலை மட்டுமில்லாமல் மனதையும் லேசாக்கும். இதில், செல்லப்பிராணியுடன் நடப்பது, சுற்றியுள்ள இயற்கையை ரசித்தபடி நடப்பது ஆகியவை அடங்கும். இந்த நடைப்பயிற்சி அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கும். இது முழங்கால் காயங்கள் மற்றும் வலி இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதுபோன்று நடக்கும் போது, மன அழுத்தம் குறையும்.

    பவர் வாக்கிங்: இது வேகமான நடைப் பயிற்சியின் மேம்பட்ட நிலை. கண்களை முன்னோக்கி, தோள்களை பின்புறம் தள்ளி, தலை நிமிர்ந்து மற்றும் வயிற்றை உள்ளிழுத்து நடக்கும் பயிற்சிமுறை. இதில், கைகளை 90 டிகிரிக்கு வளைத்து, எதிரெதிர் கைகள் மற்றும் கால்களை முன்னோக்கிச் செல்லும் வகையில் வீசி நடக்க வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் உடல் எடை, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு, கொழுப்பு ஆகியவை குறையும். உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

    'சி' அல்லது கிரிப் நடைப்பயிற்சி:

    இரு கால்களின் விரல்கள் ஒட்டியபடி, குதிகால்கள் எதிர் திசையில் சற்று விரிந்து இருக்கும் வகையில், சி போன்ற அமைப்பில் வைக்க வேண்டும். இப்போது, இடது குதிகாலில் அழுத்தம் கொடுத்து, இடது பக்கமும், வலது காலின் விரல்களில் அழுத்தம் கொடுத்து, வலது பக்கவாட்டில் திருப்ப வேண்டும். பின் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வகை நடைப்பயிற்சி நடன அசைவுகளைக் கொண்டது. தசைகளை வலுப்படுத்தவும், இறுக்கமான தசைகளைத் தளர்த்தவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், இதயத்தை மேம்படுத்தவும் உதவும். இது உடலின் சீரமைப்பிலும் கவனம் செலுத்தும்.

    'நார்டிக்' நடைப்பயிற்சி: இந்த நடைப்பயிற்சியில், உடலை முன்னோக்கித் தள்ள ஊன்றுகோல் போன்ற குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் தொடைத் தசைகள், கால்கள், எலும்புகள், மூட்டுகள் வலிமை அடைகின்றன. இப்பயிற்சியின் மூலம் உடல் எடை குறையும். இதயம் மற்றும் சுவாச உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். இது மன அழுத்தத்தை குறைக்கும் எளிய முறையாகும்.

    • நடைப்பயிற்சியின்போது வேகத்தை அதிகரிப்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
    • சமதள பரப்பில் நடப்பதை விட சற்று உயரமான பகுதியை நோக்கி நடப்பது கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும்.

    உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகம் சேர்வது உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும். பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். அப்படி உடலில் சேரும் கொழுப்பை எரிப்பதற்கு நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நடப்பது கலோரிகளை எரித்து கொழுப்பை கட்டுப்படுத்துவதோடு உடல் எடையை குறைக்கவும் உதவும்.

    நடையின் வேகத்தை அதிகரிப்பது

    நடைப்பயிற்சியின்போது வேகத்தை அதிகரிப்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நிதானமாக நடப்பதை விட வேகமாக நடக்கும்போது அதிக கலோரிகளை எரிக்க முடியும். இது ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரண நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை விட ஓட்டப்பந்தய வீரர்கள் உடல் எடை குறைவாக இருப்பதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

    உயரமான பகுதியில் நடப்பது

    சமதள பரப்பில் நடப்பதை விட சற்று உயரமான பகுதியை நோக்கி நடப்பது கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும் வழிவகை செய்யும். மலைப்பாங்கான பகுதிகளுக்கு 'டிரக்கிங்' செய்யலாம். தாழ்வான பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு செல்லும் சாலைகளில் நடந்து பயிற்சி செய்யலாம். அப்படி உயரமான பகுதிகளை நோக்கி நடப்பது கூடுதல் பலன் தரும்.

    குறுகிய கால நடைப்பயிற்சி செய்வது

    நீண்ட நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்லதுதான் என்றாலும் உடல் எடையை சீராக பராமரிக்க விரும்புபவர்கள் அடிக்கடி குறுகிய கால நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் நடக்கலாம். தினமும் ஒரே நேரத்தில் நடைப்பயிற்சி செய்யாமல் மூன்று அல்லது நான்கு முறை சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்து வரலாம். அப்படி குறுகிய காலத்தில் மேற்கொள்ளும் மிதமான நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    10 ஆயிரம் அடிகள் நடப்பது

    தினமும் 10 ஆயிரம் அடிகள் நடப்பது உடல் எடை இழப்புக்கு வித்திடும். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை குறைக்கவும் முடியும். இருப்பினும் அதிக தூரம் நடப்பது உடலுக்கு சோர்வை ஏற்படுத்தினால் அதனை தவிர்த்துவிடுவதுதான் நல்லது.

    வேகத்தை அதிகரித்து குறைத்தபடி நடப்பது

    நடைப்பயிற்சிக்கு முன்னோட்டமாக 'வார்ம் அப்' எனப்படும் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதுவும் நடைப்பயிற்சியை போன்றதுதான். நடைப்பயிற்சியாக கருதாமல் எப்போதும் போல் சாதாரணமாக 10 முதல் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். பின்பு 15 முதல் 20 விநாடிகள் நடையின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் வேகமாக ஓடக்கூடாது. வேகமாக நடந்துவிட்டு பின்பு சாதாரண நடைப்பயிற்சிக்கு திரும்ப வேண்டும். இப்படி வேகத்தை கூட்டி, குறைத்து நடைப்பயிற்சி செய்வதும் கலோரிகளை எரிக்க உதவும்.

    • சிறிது நேரமாவது நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை வீட்டிலும் செய்வது நல்லது.
    • உடற்பயிற்சி செய்வோம், நோய்கள் வராமல் தடுப்போம்.

    நாம் அணியும் தானியங்கி கைக்கடிகாரம் தானாக இயங்கினாலும், அதன் தொடர் இயக்கத்திற்கு ஓர் இயக்கு விசை வேண்டும். நமது உடல் அசைவில் இருந்து அந்த விசையை அது எடுத்துக்கொள்கிறது. இல்லை என்றால் அது இயங்காமல் நின்றுவிடும். நமது உடலும் அப்படித்தான். அதற்கு விசை தேவைப்படுகிறது. அதற்குத்தான் உடற்பயிற்சி.

    தாத்தா உடற்பயிற்சி செய்தாரா?

    அப்படி என்றால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் காலத்தில் 'ஜிம்' இருந்ததா? அவர்கள் உடற்பயிற்சிகள் செய்தார்களா என்ற கேள்விகள் எழலாம். அதற்கு இல்லை என்றே பதிலும் சொல்லிவிடலாம்.

    ஆனால் அப்போது பாசுமதி அரிசியும், பாலும் பாக்கெட்டுகளில் கிடைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

    அவர்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் உழைப்பு ஓர் அங்கமாக இருந்தது.

    தாத்தா நிலம் உழுதார். நெல் விளைவித்தார். பசு வளர்த்தார். பால் கறந்தார். தினந்தோறும் தேவைக்கு நெடுந்தூரம் நடந்தார். பாட்டி நெல் குத்தினார். ஆட்டு உரல், அம்மிக்கல் அரைத்தார். நீர் இறைத்தார்.

    இன்று நமது வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதே! தொழில்நுட்பம் வளர வளர, எந்திரங்களும் பெருக பெருக உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். அடுத்த தெருவில் இருக்கும் கடையில் மெழுகுவர்த்தி வாங்குவதற்குக்கூட நமது பையன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்கிறான்.

    மன அழுத்தம்

    நாமோ இருந்த இடத்தில் இருந்து கொண்டே அத்தனை வேலைப்பளுவையும் மூளையில் அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். இதனால் மன அழுத்தம். புதுப்புது நோய்களும் நம்மை தொற்றிக்கொள்கின்றன.

    ஒரு காலத்தில் சர்க்கரை நோயை பணக்கார நோய் என்று பெருமையாக கிராமங்களில் பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டதால் அந்த நோய் வந்ததை அவர்கள் அறியவில்லை. இன்று உணர்கிறார்கள். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிறார்கள். ஆனால் அதை அனைவரும் கடைப் பிடிக்கிறார்களா? இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி இவர்கள் கீழே என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.

    உடற்பயிற்சி செய்வோம்

    நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என்பது பொதுவாக சர்க்கரை நோய் வந்தவர்கள்தான் செய்கின்றனர். அது தவறு. நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை எல்லா வயதினரும் முறைப்படி கடைப்பிடித்தால் எந்த நோயும் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்களாக உள்ளனர். இளம் தலைமுறையினர் எந்திர மயமான வாழ்க்கை வாழ்வதால் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சிறிது நேரமாவது நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை வீட்டிலும் செய்வது நல்லது. இப்போது எல்லாம் வீட்டில் பெடலிங் சைக்கிள் உள்ளிட்ட உடற்பயிற்சி கருவி இருப்பதால் அனைவரும் உடற்பயிற்சி செய்வது நல்லது. 'உடற்பயிற்சி செய்வோம், நோய்கள் வராமல் தடுப்போம்' என்ற குறிக்கோளுடன் செயல்படுவது நல்லது' .

    'உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து டாக்டர்களும், உடல்நல நிபுணர்களும் வலியுறுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நடைப்பயிற்சியால் பலன் இருப்பதையும் அறிகிறோம். வீட்டில் பெற்றோர்களும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய அறிவுறுத்துகின்றனர். இதற்காக ஸ்கிப்பிங் கயிறு, உடலியக்கத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய 'ஸ்மார்ட் வாட்ச்' போன்றவையும் வாங்கி ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் இரவு, பகல் என்று மாறி, மாறி பணி நேரம் வருவதால் நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் நாளைப் பார்த்து கொள்ளலாம் என்று நாட்கள் தள்ளிக்கொண்டே போகிறது.

    'உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை இல்லத்தரசிகளுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன செய்வது, குடும்பத்தில் கணவர், குழந்தைகளை கவனிக்க வேண்டியது இருப்பதால் இவற்றை முறையாக செய்ய முடியவில்லை. இளைஞர்கள் கைகளில் 24 மணி நேரமும் செல்போன் இருப்பதால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி குறித்த ஆர்வமே இல்லை. பல பள்ளி, கல்லூரிகளில் விளயைாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. குறிப்பாக சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு ஊக்கம் தருவதில்லை. மைதானங்களும் குறைவு, பூங்காக்களும் தொலைவில் இருக்கின்றன. இதற்கு ஏற்றாற்போல், இளைஞர்களுக்கும் மதுவில் நாட்டம் அதிகமாகி விட்டதால் எப்படி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மீது ஆர்வம் வரும்? தற்போது குழந்தைகளுக்கே நீரிழிவு நோய் வருவதால் அனைத்து தரப்பினரும் நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வும் அளிக்கப்பட வேண்டும்.

    சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 20 முதல் 36 வயது வரை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் செல்போன் பயன்படுத்துவதாக தெரியவந்து உள்ளது. இவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியால் ஏற்படும் பலன்கள் குறித்து முழுமையாக அறியாமல் உள்ளனர். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் டாக்டர்கள் கூறியதற்கு ஏற்ப உயிருக்கு பயந்து நடைப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பாடப்புத்தகங்களிலும் இதுகுறித்து தகவல்களை இடம் பெற செய்ய வேண்டும்.

    'இளைய தலைமுறையினருக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சியில் ஆர்வம் இல்லாமல் செல்போனே கதி என்று கிடக்கின்றனர். முதியவர்கள் அதுவும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள்தான் அதிகம் பேர் நடைப்பயிற்சிக்கு வருகின்றனர். அதுபோல் இல்லாமல் நடைப்பயிற்சி, உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் குறித்து பூங்காவில் விழிப்புணர்வு பலகைகள் வைப்பதன் மூலம் இளைஞர்களும் இதில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

    புதிய, புதிய நோய்கள் அவ்வப்போது வந்து செல்வதால், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. குறிப்பாக ஒரு சில இளைஞர்கள் துரித உணவுகளை எப்போதும் உட்கொள்வது மற்றும் மது அருந்துவது உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்களில் அடிமையாகி கிடக்கின்றனர். இவர்களை சரியான பாதையில் வழிநடத்த ஆள் இல்லாததால் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஆர்வம் காண்பிப்பதில்லை. நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைத்து தரப்பு இளைஞர்களும் முன்வர வேண்டும்.

    • உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியம்.
    • தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் எலும்புகள் உறுதியாகும்.

    நடைப்பயிற்சி என்பது நம்முடைய தினசரி வாழ்க்கையில் எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று. உடல் எடையை குறைப்பதற்காக தான் நடைப்பயிற்சி என்ற கருத்துகள் மாறி, உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிற புரிதலுக்கு வந்துவிட்டோம். இப்போது எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும், வேகமாக நடக்க வேண்டுமா, மெதுவாக நடக்க வேண்டுமா போன்ற பல சந்தேகங்கள் நடைப்பயிற்சி குறித்து இருக்கின்றன.

    10,000 ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி

    ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் தூரம் நடைப்பயிற்சி செய்வது நிறைய ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக சமீபத்தில் நிறைய ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்கவும் கட்டுப்பாட்டிலும் வைக்க நினைப்பவர்கள் 10,000 ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அப்படி நடக்கும்போது நம்முடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்.

    மனதை உற்சாகப்படுத்தும்

    ஆரம்ப நாட்களில் தினமும் 10000 ஸ்டெப்ஸ் தூரம் நடப்பது கொஞ்சம் சிரமமானதாக தோன்றலாம். ஆனால் நடக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்முடைய மனதுக்கு உத்வேகத்தைக் கொடுத்தும்.

    அந்த உற்சாகத்திலேயே அடுத்தடுத்த நாட்கள் இன்னும் விரைவாக நடக்கத் தொடங்கலாம். ஒருநாள் நீங்கள் சோர்வாக உணர்ந்தாலும் உங்களுடைய மனசே உங்களை நடப்பதற்கு உசுப்பி விடும்.

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

    தினசரி உடற்பயிற்சிக்ள செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போது நம்முடைய ரத்தத்தில் ஆக்சிஜனேற்றப் பண்புகள் அதிகரிக்கச் செய்யும். தசைகளுக்கும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.

    இதயத்திற்கு ஆக்சிஜனும் ரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். அதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    நுரையீரலை வலுப்படுத்தும்

    தினமும் 10,000 ஸ்டெப்ஸ் தூரம் நடைப்பயிற்சி செய்வது நம்முடைய நுரையீரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த உதவும்.

    நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவும் அடர்த்தியும் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சுவாசிப்பது எளிதாகும். இதனால் இயல்பாகவே உடலின் இயல்திறன்கள் அதிகரிக்கும்.

    கவனச் சிதறலை குறைக்கும்

    நம்முடைய உடல் செயல்பாடுகள் அதிகரிக்கும் போது, உடல் சுறுசுறுப்படையும். கவனச் சிதறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சினையும் சரியாக ஆரம்பிக்கும்.

    10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தூரம் வரை நடக்கும்போது நம்முடைய மூளைக்கு செல்லும் நரம்புகள் சுறுசுறுப்படையும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைத்து நினைவுத் திறனை மேம்படுத்த உதவும். மூளை ஆக்டிவ்வாக செயல்படும்.

    எலும்புகளை உறுதியாக்கும்

    தினசரி உடற்பயிற்சி குறிப்பாக நடைப்பயிற்சி, ஜாகிங் உள்ளிட்டவை நம்முடைய எலும்புகளுக்கு கூடுதலாக ஒருவித அழுத்தம் கொடுக்கும். அப்படி கொடுப்பதன் மூலம் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்.

    தினசரி 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொண்டால் எலும்புகள் உறுதியாகி ஆஸ்டிரியோபொராசிஸ் போன்ற பிரச்சினைகள் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கும்.

    நீரிழிவை கட்டுப்படுத்தும்

    நம்முடைய உடல் சுறுசுறுப்பாக இருக்கும்போது, உடற்பயிற்சிகளை செய்யும்போது தசைகளுக்கு அதிகப்படியான அளவு குளுக்கோஸ் தேவைப்படும்.

    ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை உறிஞ்சி தசைகளுக்கு ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவை வராமல் தடுக்கவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்யும்.

    ரத்த அழுத்தத்தை குறைக்கும்

    தினசரி உடற்பயிற்சி செய்வதின் மூலம் நம்முடைய உடல் இலகுவாக இருக்கும். இதனால் கார்டிசோல் ஹர்மோன் உற்பத்தி குறைந்து மன அழுத்தம் வராமல் தடுக்க முடியும்.

    குறிப்பாக 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரைக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்முடைய உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.

    உடல் எடையை குறைக்கும்

    உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். நிறைய பேர் நடைப்பயிற்சி செய்தும் எடை குறையவில்லை. என்று கூறுவார்கள். அதற்கு காரணம் எவ்வளவு வேகத்தில் நடக்கிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை பொறுத்தது.

    நீண்ட தூரம் நடக்கும்போது தான் அதிகப்படியான கலோரிகளை எரிக்க முடியும். அதனால் வேகமாக உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க விரும்பினால் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    • அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன.
    • கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.

    பொதுவாகவே நடைப்பயிற்சி பல்வேறு பலன்களைத் தரும் என்றாலும் குறிப்பிட்ட வகை மேற்பரப்புகளில் நடப்பது சில சிறப்பு நன்மைகளைத் தரும். வெற்றுக் கால்களில் மணலில் நடப்பதும் அத்தகைய சிறப்புப் பலன்களைத் தருகிறது.

    காலணி அணியாமல் வெறும் கால்களால் நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் பல. அவற்றில் முக்கியமான சில நன்மைகள்:

    காலணி போடுவதால் பெருமளவில் பயன்படுத்தப்படாத பாத தசைகள் வெறும் கால்களில் நடக்கும் போது நன்கு இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாதம், கணுக்கால் மற்றும் ஆடுசதைகளும் பலம் பெறுகின்றன.

    வெறும் கால்களால் நடக்கும் போது தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்குவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.

    காலணி அணியாமல் வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அழுத்த அளவு சீராகிறது. வெறும் கால்களில் நடக்கும் போது நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

    காலணிகளைப் போட்டு நடப்பதை விட வெறும் கால்களில் மணலில் நடக்க கூடுதலான ஆற்றல் தேவை. மண்ணில் கால் பதிக்கும் போது பாதங்கள் புதைவதால், கால் தசைகளின் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. இவ்வாறு நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.

    சாதாரண தரையில் நடப்பதை விட மணலில் நடக்கும் போது, குறிப்பாக, வெற்றுக் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான திறனுடன் உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

    மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது. பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.

    வெறும் கால்களில் மணலில் நடப்பதால், பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

    நாம் நடக்கும், ஓடும் முறையில் இருக்கும் தவறு (wrong posture) வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது சரி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.

    • நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள்.
    • கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

    • சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால், கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே, முதுகை வளைக்காமல், நடக்கும்போதும் ஓடும்போதும் நேராக இருங்கள். முதுகின் இயல்பான தன்மையைப் பின்பற்றுங்கள்.

    • வயிற்றை உள்ளிழுத்தபடி பயிற்சியில் ஈடுபடுங்கள். கால்கள் நடப்பதற்கு ஏற்ப நம் உடலை பேலன்ஸ் செய்யும் வகையில் கைகள் அசைகின்றன. இதனால் வேகமாக நடக்கலாம். கைகள் அசைக்காமல் நடக்கும்போது, அது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, தாராளமாகக் கைகளை வீசி நடைபோடுங்கள்.

    வாக்கிங்... ஜாகிங்...

    • சம தளத்தில் பயிற்சியில் ஈடுபடுங்கள். கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

    • ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்யாமல், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

    • நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதேபோல முடிக்கும்போது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பயிற்சியை முடியுங்கள்.

    • ஆண்களை விட, பெண்கள் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது.
    • 35 வயதைத் தாண்டிய பெண்கள், கண்டிப்பாக ஜாகிங் செய்ய வேண்டும்.

    உடல் பயிற்சிக்காக ஓடுபவர்கள், ஓடும் விதத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஓடும் தூரத்தைப் பார்க்கக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடும்போது சோர்வு, வலி ஏற்படும். இதனால் பயிற்சியில் ஈடுபடுவதற்கான மனநிலை பாதிக்கப்படும். எனவே, பயிற்சிக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்

    • ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உடலை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

    • இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதே போதுமானது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு ஓடுவது நல்லது.

    • நடைப்பயிற்சியில், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பருத்தி மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

    • சிந்தடிக் ஆடைகளை அணிந்து ஓடுவதால் வியர்வை நம் உடலின் மேற்பரப்பில் தேங்கும். உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன், உடல் வெப்பமடைவதை இது தவிர்க்கும்.

    • சாலை ஓரத்தில் பயிற்சியில் ஈடுபடுபவர், ஒளிரும் தன்மைகொண்ட ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

    • காலுக்குப் பொருத்தமான, எடை குறைந்த காலணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. மிகவும் இறுக்கமான காலணி அணிந்துகொண்டு நடைப்பயிற்சி செய்வது வலியை ஏற்படுத்தும்.

    • புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இரண்டு நிமிடம் ஓட்டம், ஒரு நிமிடம் நடைப்பயிற்சி என்று மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும். இதனால், இதயத்துக்கு அதிக சிரமம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

    ஜாகிங் பயன்கள்

    ஆண்களை விட, பெண்கள் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. 35 வயதைத் தாண்டிய பெண்கள், கண்டிப்பாக ஜாகிங் செய்ய வேண்டும். தேவை இல்லாத கொழுப்புகள் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். நாள் முழுக்கத் துடிப்புடன் செயல்பட முடியும். உயர் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரையின் அளவு குறையும். எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன் தசைகள் வலுவாகும்.

    ஓடுவதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல் முறையாக ஓடவில்லை என்றால் பாதிப்புகளும் வரும். ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு 'ரன்னர்ஸ் நீ' (runners knee) என்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எடுத்த எடுப்பிலேயே மிகக் கடுமையாக ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இது ஏற்படுகிறது. இதனால், மூட்டில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து வலி ஏற்படும். ஆரம்பத்தில் இந்த வலியை உணர முடியாது. மாடிப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போதும் இந்தப் பாதிப்பை உணரலாம். எனவே, அதிக ஆர்வத்தில் கால்களுக்கு அதிக பளுவைக் கொடுக்கக் கூடாது.

    • ஓடும் முறைகளிலேயே, சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
    • ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங்... மூன்றுக்குமான வித்தியாசங்களை தெரிந்து கொள்வோமா...?

    உடற்பயிற்சிக்காக சிலர் நடக்கிறார்கள். சிலர் ஓடுகிறார்கள். வாக்கிங் மற்றும் ஜாக்கிங் இவை இரண்டிற்கும் நமக்கு வித்தியாசம் தெரியும். ஆனால் ஓடும் முறைகளிலேயே, சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங்... இப்படி மூன்று பெயர்களில் அழைக்கிறார்கள். இவை மூன்றுக்குமான வித்தியாசங்களை தெரிந்து கொள்வோமா...?

    ஜாக்கிங் : ஜாக்கிங் என்பது வேக நடை. இதில் ஓடுவதற்கு பதிலாக வேகமாக நடக்கிறோம். மற்றவற்றை ஒப்பிடும்போது, இது குறைவான ஆற்றல் கொண்ட உடற்பயிற்சி. எப்பொழுது நீங்கள் ஜாக்கிங் செல்கிறீர்களோ அப்பொழுது உங்களது வேக அளவு ஒரு மைல் தூரத்திற்கு 10 நிமிடம் என்ற கணக்கில் இருக்கும். உங்களது வேகம் அதை விட அதிகமானால், அது 'ரன்னிங்' பயிற்சியாகிவிடும். அதனால் மிதமான வேகத்தை பராமரிக்க வேண்டும். மேலும் ஜாக்கிங் செய்யும்போது நீங்கள் சீராக சுவாசிப்பதும் அவசியம். அப்போதுதான், இதயத்துடிப்பு சாதாரணமாக இருக்கும். அதிக தொலைவிற்கு ஜாக்கிங் செய்ய உதவும். உடலில் கார்டிசால் அளவை ஜாக்கிங் குறைக்கும். மேலும் இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்ததாகும்.

    ரன்னிங் : இது ஓட்டப்பயிற்சி. உங்கள் உடலின் இயல்பான வேகத்தில் ஓடுவதுதான் ரன்னிங். இது ஜாக்கிங்கை விட இருமடங்கு ஆற்றல் கொண்ட உடற்பயிற்சி. அதனால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். ஆனால் ஜாக்கிங்கைவிட, ரன்னிங் பயிற்சிக்கு அதிக ஆற்றலும், வெகுநாள் பயிற்சியும் அவசியம். உங்களது கால் களின் உறுதிக்கு ரன்னிங் உதவியாக இருக்கும். மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அமையும்.

    * ஸ்பிரின்டிங் : தன் இயல்பான ஓட்டத்திறனைவிட, சற்று வேகமாக ஓடுவதுதான் ஸ்பிரின்டிங். இதில் தனது வழக்கமான ஓட்ட வேகத்தை விட அதிகபட்ச வேகத்தை சீராக பராமரிக்க வேண்டும். மேலும் ஸ்பிரின்டிங்கில் செயல்பட அதிக ஆற்றல் தேவைப்படும். இது குறைந்த தூரத்தை வேகமாக கடக்க உதவும். இந்த உடற்பயிற்சியானது அதிகபட்ச கலோரிகளை எரிக்கவும், நுரையீரலின் செயல்பாட்டை அதிகப் படுத்தவும் உதவும். ஸ்பிரின்டிங் இளைஞர்களின் எடை குறைப்பு முயற்சியை விரைவாக செயல்படுத்த சிறந்ததாகும்.

    • நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் நலத்திற்கு அவசியமானது.
    • நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் சிறிது தூரம் நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் நலத்திற்கு அவசியமானது. நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    சமீபத்திய ஆய்வு முடிவின்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். முதுமையை தள்ளிப்போடும். திடீர் இறப்பு அபாயத்தை தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவு ஜமா இன்டர்னல் மெடிசின் மற்றும் ஜமா நியூராலஜி இதழில் வெளியிடப்பட்டது.

    40 முதல் 79 வயதுக்குட்பட்ட 78 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் புற்றுநோய், டிமென்ஷியா உள்ளிட்ட எந்தவொரு நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள். அவர்கள் அனைவரும் தினமும் 10 ஆயிரம் அடி தூரம் நடக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வேகமாக நடப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

    தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் போர்ஜா டெல் போசோ க்ரூஸ், ''ஒரு நாளைக்கு 3,800 அடிகள் நடப்பது கூட டிமென்ஷியா அபாயத்தை 25 சதவிகிதம் குறைக்க உதவும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பதன் மூலம் 8 முதல் 11 சதவீதம் வரை அகால மரணம் அடையும் அபாயத்தை குறைக்கலாம் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • முட்டி வலியைக் குறைக்கிறது.
    • இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ள உதவுகிறது.

    பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான சில:

    உடலின் சமநிலை மேம்படுகிறது.

    முன்னால் நடக்கும் போது அதிகமாகப் பயன்படுத்தப்படாத தசைகள் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும் போது பயன்படுத்தப்படுகின்றன. Rectus femoris மற்றும் vastus medialis ஆகிய தொடை தசைகள் முன்னால் நடப்பதை விட பின்னால் நடக்கும் போது கூடுதலாக இயக்கப் பெறுகிறது என்று ஆய்வு ஒன்று அறிவிக்கிறது. மேலும் கணுக்கால் தசைகளிலும் அதிக இயக்கம் இருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

    உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

    ஆற்றலை அதிகரிக்கிறது.

    இருதய நலனை மேம்படுத்துகிறது.

    வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

    முன்னோக்கி நடப்பதன் மூலம் எரிக்கும் கலோரிகளை விட அதிகக் கலோரிகளை பின்னோக்கிய நடைப்பயிற்சி எரிக்கிறது.

    முட்டி வலியைக் குறைக்கிறது.

    அடி முதுகு வலியைப் போக்குகிறது.

    இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ள உதவுகிறது.

    மூளையின் ஆற்றலை மேம்படுத்துகிறது. அறிவுத்திறனை வளர்ப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இக்கட்டான சூழலில் பின்னோக்கி நடத்தல் சூழ்நிலையில் தெளிவைப் பெறவும் இக்கட்டிலிருந்து விடுபட வழி கண்டுபிடிக்கவும் உதவுவதாக ஆய்வு அறிவிக்கிறது.

    மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

    • பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சி.
    • 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமமானது.

    தினமும் ஒரே விதமாக நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது

    பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெரும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரும். சிந்தனை திறனை மேம்படுத்தும். மனதில் நல்ல யோசனைகள் உதிர்க்க உதவும். பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும்.

    பின்னோக்கி நடைபயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைபயிற்சி மேற்க்கொள்வது நல்லது. விரைவில் காயங்கள் குணமாகும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ளுவதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடை பயில்வது பயனளிக்கும்.

    எலும்புகளும், தசைகளும் வழு பெறுவதற்கு பின்னோக்கி நடப்பது நல்லது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். வீட்டிலேயே பின்னோக்கி நடைபயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் டிரெட்மில் பயன்படுத்தலாம். அதில் சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும் அமையும். முதலில் டிரெட்மில்லில் மெதுவாக நடக்க தொடங்கி பின்னர் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

    நடைப்பயிற்சிக்கான பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் செய்யும் போது சவால் பல மடங்கு கூடுதலாக இருக்கும். பலன்களும் கூட. ஏனெனில் வீட்டு மொட்டை மாடியில் நாம் வேறு யாரையும் கவனிக்க வேண்டியதில்லை. சாலையில் பயிலும் போது சக நடைப்பயிற்சியாளர்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பயிலும் போது co-ordination நன்கு அதிகரிக்கிறது. தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

    ×