search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vice chairman"

    காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்திற்கு எதிராக நிதி ஆயோக் துணைத் தலைவர் பேசியது தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #NitiAayog #RajivKumar
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் (நியாய்) மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டம் இடம்பெற்றிருந்தது.

    இந்த திட்டத்தை மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் விமர்சனம் செய்தார். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று கூறிய அவர், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நிலாவை தருவேன் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கும் என்றும் டுவிட்டர் மூலம் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

    காங்கிரசால் முன்மொழியப்பட்ட இந்த வருமான உத்தரவாத திட்டம் பொருளாதார சோதனை, நிதி ஒழுங்குமுறை சோதனை மற்றும் நிறைவேற்று சோதனையில் தோல்வி அடைந்த திட்டம் என்றும், இதனை செயல்படுத்தினால் நிதி கட்டமைப்பு சீர்குலையும் என்றும் குறிப்பிடிருந்தார்.

    அரசு அதிகாரி இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜீவ் குமாரிடம், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அதன்பேரில் தேர்தல் ஆணையத்திற்கு ராஜீவ் குமார் விளக்க கடிதம் அனுப்பினார். அதில், பொருளாதார வல்லுநர் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்ததாகவும், அரசு அமைப்பின் சார்பில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.



    ஆனால், அவரது விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்ததுடன் அவரது கருத்துக்கு கடும் அதிருப்தியையும் தெரிவித்தது. இதுதொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “தாங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. அரசு அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாக இருக்கவேண்டும். தாங்கள் கூறிய கருத்து தேர்தல் விதிகளை மீறிய செயல் ஆகும். எதிர்காலத்தில் இதுபோன்று பேசாமல் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.” என கூறியுள்ளது. #LokSabhaElections2019 #NitiAayog #RajivKumar
     
    ×