search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Rice"

    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
    • இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - ஒரு கப்,

    பெரிய வெங்காயம் - 2,

    தக்காளி - 4,

    பூண்டு - 4 பல்,

    பச்சைமிளகாய் - 4,

    பட்டை - 2 துண்டு,

    கிராம்பு - 2,

    முந்திரி - 20

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    ஏலக்காய் - 2,

    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,

    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது.

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

    தக்காளியைத் தனியாகவும், பூண்டு - பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர், தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து வந்ததும் வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தக்காளி பிரியாணி ரெடி.

    • கோதுமை சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று எளிய முறையில் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை சேமியா - 250 கிராம்,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    தக்காளி - ஒன்று ,

    பீன்ஸ் - 3,

    கேரட் - ஒன்று,

    பிரிஞ்சி இலை - ஒன்று,

    பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,

    காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),

    உருளைக்கிழங்கு - ஒன்று,

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,

    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.

    உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

    வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.

    • மாட்டிறைச்சியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • மாட்டிறைச்சியை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்: 

    பாசுமதி அரிசி - 1 கிலோ, 

    பீப் (மாட்டிறைச்சி) - 1 கிலோ, 

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, 

    வெங்காயம் - 500 கிராம், 

    பழுத்த தக்காளி - 500 கிராம், 

    பச்சை மிளகாய் - 5 

    கொத்தமல்லி, புதினா - தலா 1 கொத்து, 

    எண்ணெய் - 200 மில்லி, 

    நெய் - 50 மில்லி, 

    எலுமிச்சை -அரை பழம் 

    பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2, 

    பிரியாணி இலை - 2, 

    உப்பு தூள் - தேவையான அளவு 

    செய்முறை: 

    அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.

    பீப் (மாட்டிறைச்சி)  கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைசேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

    வெங்காயம் நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

    பிறகு புதினா, தயிர் சேர்க்கவேண்டும். 

    அடுத்து தக்காளி, கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். 

    அடுத்து உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து பீப் (மாட்டிறைச்சி) சேர்த்து வேக விட வேண்டும்.

    பீப் (மாட்டிறைச்சி) வெந்து கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும். 

    பீப் (மாட்டிறைச்சி)  அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். 

    ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவேண்டும். 

    தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின்மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும். 

    பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். 

    இப்போது சுவையான ஆம்பூர் பீப் (மாட்டிறைச்சி) பிரியாணி ரெடி.

    • குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப சூப்பரான ரெசிபி இது.

    தேவையான பொருட்கள் :

    தக்காளி விழுது (பியுரி) - 1/2 கப்

    அரிசி - 3/4 கப்

    சீரகம் - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

    கேரட் - 2

    பீன்ஸ் - 5 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீன்ஸ், கேரட்டை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெயை விட்டு சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

    வதங்கியதும் தாக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட்டு ஊற வைத்த அரிசியையும் சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி போட்டு 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம் ரெடி.

    • கத்தரிக்காயில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும்.
    • இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ,

    சின்ன வெங்காயம் - ஒரு கப்,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    புளித்தண்ணீர் - 2 கப்,

    தக்காளிச் சாறு - கால் கப்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம்- சிறிதளவு

    அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5,

    தனியா - ஒரு டீஸ்பூன்,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்.

    செய்முறை :

    * சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

    * பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

    * வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    * வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் போடு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    * புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா தேங்காய் பால் புலாவ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சேமியா - 200 கிராம்,

    நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1/4 கப்,

    பச்சைப்பட்டாணி - 1/4 கப்,

    வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    பச்சைமிளகாய் - 2,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

    தேங்காய்ப்பால் - 1 கப்,

    கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

    தாளிக்க...

    பட்டை - 1 துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2,

    கடல்பாசி - சிறிது,

    நெய், எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

    இதில் 1 சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய், சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி தண்ணீரை வடிய விடவும்.

    அடிகனமான கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கடல்பாசி, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் பச்சைமிளகாய், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    பின் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து, குழம்பு பதமாக வரும்போது சேமியா சேர்த்து கிளறி, மூடி சேமியாக உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான சேமியா தேங்காய் பால் புலாவ் ரெடி.

    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • கீரையில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் : 

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    வெந்தயக்கீரை- ஒரு கப்,

    வெங்காயம் - 2,

    தக்காளி - 1,

    உருளைக்கிழங்கு - 2,

    பச்சை மிளகாய் - 3,

    பிரிஞ்சி இலை - 1,

    இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை: 

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை தாளித்த பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    இப்போது சூப்பரான கீரை பிரியாணி ரெடி.

    இந்த பிரியாணி செய்ய எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.

    • காலிஃப்ளவரில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் : 

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்,

    வெங்காயம் - 2,

    தக்காளி - 2,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கார்ன்ஃப்ளார் - கால் கப்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,

    பட்டை - ஒரு துண்டு,

    ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை: 

    அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கொதிக்கும் நீரில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்கவும்.

    காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய்-விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவரைப்போட்டு பொரித்தெடுக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    அடுத்து அதில் நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி ரெடி.

    • கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
    • சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள் :

    சீரக சம்பா அரிசி - 4 கப்

    மட்டன் - அரை கிலோ

    இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்

    பெரிய வெங்காயம் - 4

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 4

    மிளகாய் தூள் 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

    தேங்காய் - ஒரு மூடி

    தயிர் - அரை கப்

    லெமன் - 1

    புதினா - ஒரு கட்டு

    கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு

    நெய் - அரை கப்

    எண்ணெய் - அரை கப்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கிராம்பு - 3

    பட்டை - 3 சிறிய துண்டு

    ஏலக்காய் - 3

    பிரிஞ்சி இலை - ஒன்று

    சோம்பு - ஒரு ஸ்பூன்

    செய்முறை :

    * மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.

    * குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

    * இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    * ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

    * பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.

    * சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.

    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    பாஸ்மதி ரைஸ் - 1/2 கிலோ,

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    தக்காளி - 4,

    பட்டாணி - ஒரு கைப்பிடி,

    வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி

    தேங்காய் பால் - 1 கப்,

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    சமையல் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    பட்டை - 2,

    கிராம்பு - 4,

    சோம்பு - 1/2 டீஸ்பூன்,

    ஏலக்காய் - 2,

    அண்ணாச்சி பூ - 1,

    மராத்தி மொக்கு - 4,

    பிரியாணி இலை - 3,

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் பட்டாணியையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    பச்சை பட்டாணியாக இருந்தால் புலாவ் செய்வதற்கு ஒரு மணிநேரம் முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் ஊற வைத்தால் போதுமானது. பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையை முழுதாக அப்படியே சேர்க்க வேண்டும்.

    கீரை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, லேசாக உப்பு போட்டு வதக்க வேண்டும்.

    இவைகள் அனைத்தும் நன்கு சுருள வதங்கி வந்ததும், பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் இதில் தேங்காய் பால் சேர்த்து உள்ளதால், ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்தால் போதும். உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடி வைத்து இரண்டே விசில் விட்டால் போதும், அற்புதமான வாசனையில், ஆரோக்கியமான வெந்தயக்கீரை பச்சை பட்டாணி புலாவ் ரெடி ஆகி இருக்கும்.

    இதற்கு காரசாரமான சைடிஷ் அல்லது துவையல் வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

    • குழந்தைகளுக்கு இந்த புலாவ் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 20 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்

    வெங்காயம் - 2

    பச்சைமிளகாய் - 5

    தக்காளி - 2

    பீன்ஸ் - 50 கிராம்

    கேரட் - 50 கிராம்

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தாளிக்க :

    பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு

    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெறும் வாணலியில் சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து துருவிய கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் முக்கால் பாகம் வதங்கியவுடன் தேவையான அளவு உப்புடன், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து மசாலா பச்சை வாசனை போனடவுன் 4 கப் தண்ணீர் விடவும்.

    தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.

    சேமியா வெந்தது பொல பொல வென்று வந்ததும் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் புலாவ் ரெடி.

    • குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும்.
    • இன்று வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பென்னே பாஸ்தா - 200 கிராம்

    குடைமிளகாய் - 1

    கேரட், பீன்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    கொத்தமல்லி - அரை கட்டு

    புதினா - அரை கட்டு

    தயிர் - 2 கப்

    உப்பு - தேவைக்கு

    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

    தாளிக்க…

    எண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 2 டீஸ்பூன்

    பட்டை - 2

    கிராம்பு - 2

    பிரிஞ்சி இலை - 2.

    செய்முறை :

    குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு அரை பாகம் வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.

    மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

    இப்போது சூப்பரான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி ரெடி.

    சிப்ஸ், தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    ×