search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vandalur zoo"

    • வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
    • விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பூங்காவை சுற்றி பார்த்து அங்குள்ள அரிய வகை மிருகங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    சராசரியாக தினமும் 2500 முதல் 3000 பேர் வரை செல்கிறார்கள். வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் செல்கிறார்கள்.

    602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 42 வகை மிருகங்கள் மாமிச உண்ணிகள் ஆகும்.

    இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில் சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.

    பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இனி இந்த கட்டணம் ரூ.200 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர பூங்காவுக்குள் குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிவர கட்டணம் ரூ.1550. இந்த கட்டண உயர்வின் மூலம் பூங்காவை மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.

    இந்த பூங்காவில் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் விலங்குகளின் உணவுக்காக செலவிடப்படுகிறது. பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது.

    விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் காட்டு கழுதைகள், ஒட்டகசிவிங்கி, வரிக்கு திரைகள் ஆகியவையும் அதிகமாக இடம் பெறும்.

    புதுடெல்லி உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.110 ஆகவும், மைசூரு உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.60 ஆகவும் உள்ளது.

    வண்டலூரில் கட்டணம் ரூ.200ஆக உயர்த்தி இருப்பது மிகவும் அதிகம் என்கிறார்கள். இந்த கட்டண உயர்வால் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பூங்காவுக்கு பொழுதுபோக்க சென்றால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார்கள்.

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது.
    • வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் சிங்கம் சபாரி திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பூங்காவில் சிங்கம் சபாரி, மான் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இதற்கிடையே சிங்கம், மான் சபாரி விரைவில் திறக்கப்படும் நடவடிக்கைக்காக இதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை இந்த மாத இறுதியில் பூங்காவுக்கு வர உள்ளது.

    எனவே விரைவில் வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் சபாரியில் பார்வையாளர்கள் செல்லலாம். மேலும் பூங்காவுக்கு கூடுதலாக 10 பேட்டரி வாகனங்களும் வாங்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சபாரி செல்வதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. விரைவில் பூங்காவில் சிங்கம் சபாரி தொடங்கப்படும்' என்றார்.

    • வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது லயன்சபாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் ஏற்கனவே பெங்களூருவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சேரு என்ற ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு இணையாக விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் 3 ஜோடி நெருப்புக்கோழிகளுக்கு பதிலாக லக்னோவில் உள்ள பூங்காவில் இருந்து உமா என்ற பெண் சிங்கம் வரவழைக்கப்பட்டது. 45 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அவை ஒன்றாக சேர விடுவிக்கப்பட்டன.

    ஆனால் இந்த சிங்கங்கள் ஒன்று சேர்வதில் சிக்கல் நீடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இயற்கையான சூழலுக்காக சிங்கங்களை லயன்சபாரி உள்ள இடத்தில் பூங்கா ஊழியர்கள் விடுவித்து உள்ளனர். அவை அங்குள்ள அடைப்புக்குள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • உயிரியல் பூங்காவில் தற்போது 10 சிங்கங்கள் உள்ளன.
    • சிங்கம் சபாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 10 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் இங்கு சிங்கம் சபாரியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    சிங்கம் சபாரிக்கான வாகனங்களை புதுப்பித்தல், சிங்கங்கள் உலவும் பகுதியை சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலி மற்றும் இரும்பு கதவுகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிந்துவிட்டன. இதையடுத்து இன்னும் 2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சபாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    • கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
    • பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.

    இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
    • கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் 25 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்தனர்.

    கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த மாதம் (மே) முழுவதும் செவ்வாய்கிழமை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நீர்சத்து அதிகம் உள்ள பழங்கள் உள்ளிட்டவை அதிகம் வழங்கப்படுகிறது.

    யானைகளுக்கு ஷவர் குளியில் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளன. யானைகள் ஷவரில் ஆனந்த குளியல் போடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பறவைகளுக்கு கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    மேலும் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

    மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் சூட்டைத் தணிக்க கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் அல்வா போன்று விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள் பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி ஜன்னல் கோணி கட்டப்பட்டு அவைகளுக்கும் கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அதேபோன்று சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டாமிருகத்திற்கு ஷவர் குளியலுடன் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் அமைத்துள்ளனர்.

    அதேபோல் நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர்.

    அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப் பொலிவுடன் திறக்கப்பட்ட உணவகங்கள், நிழற்குடைகள் என்று பார்வையாளர்களுக்கும் கோடை காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளை உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.

    • வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.
    • வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர்.

    வண்டலூர்:

    சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த ஒரு ஆண் பார்வையாளர் திடீரென தனது கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கூண்டுக்குள் இருந்த வெள்ளைப்புலி மீது வீசினார். இதை பார்த்த பூங்கா ஊழியர் உடனடியாக புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபரை கையால் தாக்கி மடக்கி பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    இதனையடுத்து வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி மீது பார்வையாளர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை வீசும் காட்சி மற்றும் தண்ணீர் பாட்டில் வீசிய நபரை பூங்கா ஊழியர் தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • கொரோனா தொற்று காரணமாக வண்டலூர் பூங்காவில் 2021-ம் ஆண்டு சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி நிறுத்தப்பட்டது.
    • கோடை விடுமுறைதான் வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கியமான சுற்றுலா சீசன் ஆகும்.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் மிருகங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள், வண்டியில் சவாரியாக சென்று காட்டில் உலவும் சிங்கங்களை அருகில் இருந்தபடியே பார்ப்பது வழக்கம்.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வண்டலூர் பூங்காவில் 2021-ம் ஆண்டு சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா தொற்று பரவலின் போது 2021-22 கால கட்டத்தில் பல மிருகங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தன. 2021-ம் ஆண்டு 4 சிங்கங் கள், 3 புலிகள், ஒரு சிறுத்தை ஆகியவை இறந்தன.

    2022-ம் ஆண்டு ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு சிறுத்தை உள்ளிட்ட 4 விலங்குகள் இறந்தன. இவற்றில் 2 சிங்கங்கள் மிகவும் ஆரோக்கியமான சிங்கங்கள் ஆகும்.

    இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது.

    இந்நிலையில் வண்ட லூர் உயிரியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிங்கம் சவாரி மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்று பார்வையாளர்கள் எதிர்பாார்த்து காத்திருந்தனர். இதையடுத்து பொது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வண்லூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சவாரி கோடை விடுமுறையின் போது தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைதான் வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கியமான சுற்றுலா சீசன் ஆகும். எனவே சிங்கம் சவாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • வண்டலூர் பூங்காவில் தற்போது 9 சிங்கங்கள் மட்டுமே உள்ளது.
    • குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்காக பணிகள் நடந்து வந்தது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, மனித குரங்கு உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து செல்கிறார்கள். வார விடுமுறை நாட்களில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பார்வையாளர்கள் வருவது வழக்கம்.

    வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்து வரும் விலங்குகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதன்படி விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மற்ற மாநிலங்களில் இருந்து விலங்குகள் இங்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக இங்கிருந்து மற்ற பூங்காவுக்கு தேவையான விலங்குகள் அல்லது பறவைகளை கொடுப்பது வழக்கம்.

    வண்டலூர் பூங்காவில் தற்போது 9 சிங்கங்கள் மட்டுமே உள்ளது. அதில் ஒரு வயதான சிங்கம் மருத்துவ பராமரிப்பில் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது 2 சிங்கங்கள் இறந்தன. இதனால் பூங்காவில் உள்ள ஆண், பெண் சிங்கங்கள் விகிதம் குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தது.

    இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள மற்ற உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஆசிய சிங்கங்களை விலங்குகள் பரிமாற்றத்தில் பெற திட்டமிடப்பட்டது.

    இதற்காக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்காக பணிகள் நடந்து வந்தது. இதனால் குஜாரத்தில் இருந்து ஆசிய சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய சிங்கங்களை வழங்க குஜாராத் பூங்கா தற்போது மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு சிங்கங்களை பெற அடுத்தகட்ட நடவடிக்கையாக ஐதராபாத் மற்றும் திருப்பதி உயிரியல் பூங்காவை நாடி உள்ளனர். விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு இமாலயா கரடியும், மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிறு கரடியும் வர உள்ளது. மேலும் வண்டலூர் பூங்காவுக்கு செஞ்சியில் மீட்கப்பட்ட ஒரு கரடி வர உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
    • புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.

    வண்டலூர்:

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு அதிக அளவில் சென்று வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பழவேற்காடு பகுதியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலா இடமாக வண்டலூர் பூங்கா உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் வண்டலூர் பூங்காவில் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கடந்த 4 நாட்களில் வண்டலூர் பூங்காவை 1 லட்சம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். நேற்று மட்டும் 31 ஆயிரம் பேர் குவிந்து இருந்தனர்.

    இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாகும். பார்வையாளர்களின் வருகையினை முன்னிட்டு பூங்காவின் நேரம் நீட்டிக்கப்பட்டது.

    கூடுதல் நுழைவுச் சீட்டு வழங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கூடுதல் உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்த அடையாளக் குறியீடுகள் செய்யப்பட்டது. கூடுதல் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல மாற்று வழி அமைக்கப்பட்டது.

    பூங்கா நிர்வாகம் செய்த பொங்கல் ஏற்பாடுகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் பூங்காவின் திரை தொகுப்பு திரையிடல், தாவர உண்ணிகளுக்கு உணவு வழங்குதல், யானை குளியல் மற்றும் புகைப்படம் எடுக்குமிடம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. பூங்காவில் 3 கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து சி.சி.டி.வி. கண்காணிப்பு, வனத்துறை அலுவலர்கள் காவல் துறையுடன் இணைந்து பூங்கா ரோந்து பணி போன்றவற்றின் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    பூங்காவிற்கு பொங்கல் பண்டிகை நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.

    14-ந்தேதி 7,630 பேர், 15-ந்தேதி- 17,762 பேர், 16-ந்தேதி 34,183 பேர், 17-ந்தேதி, 31,440 பேர் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சுமார் 9 ஆயிரம் பேர் வந்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர். இந்தியருக்கு ரூ.40-ம், வெளிநாட்டவருக்கு ரூ.600-ம் தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக வசூலித்தது.

    • இன்று பார்வையாளர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம்.

    வண்டலூர் :

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 17 ஆயிரம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    நேற்று மாட்டுப்பொங்கல் தினத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதியான கோயம்பேடு, கிண்டி, அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, செங்குன்றம், செங்கல்பட்டு, மாமல்லபுரம் காஞ்சீபுரம், மதுராந்தகம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வருகை தந்தனர்.

    பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பூங்காவில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூங்கா நிர்வாகம் செய்திருந்தது.

    பொங்கல், மாட்டு பொங்கல் ஆகிய 2 தினங்களில் மட்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 47 ஆயிரம் பேர் சுற்றி பார்த்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவை 30 ஆயிரம் பேர் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    வண்டலூர் பூங்காவுக்கு கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்களால் வண்டலூர் பூங்கா மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும், காணும் பொங்கல் அன்று பூங்காவுக்கு வருகை வரும் பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    காணும் பொங்கல் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம். பூங்காவில் உள்ள இந்திய காட்டுமாடு, காண்டாமிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான் போன்ற தாவர வகை விலங்குகளுக்கு காலை 11 மணிக்கு மேல் உணவளிக்கும் காட்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

    அதேபோல் பூங்காவில் உள்ள யானைகள் சவரில் குளிக்கும் காட்சிகளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், பின்னர் 3 மணி முதல் 4 மணி வரையும் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். பூங்காவின் செயல்பாடுகளை விவரிக்கும் ஆவணப்படம் மற்றும் பூங்கா விலங்குகளின் திரை தொகுப்புகள் 2 பெரிய எல்.இ.டி. திரையில் திரையிடப்படுகிறது.

    குடும்பமாக வரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள், நண்பர்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு புகைப்பட கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு பூங்காவுக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் பூங்கா நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் சென்னை புறநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×