search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi thiruvizha"

    • வரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
    • திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோசமிட்டு கள்ளழகரை வரவேற்றனர்.

    பரமக்குடி பகுதி எமனேசுவரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான வரதராஜப் பெருமாள் கோவிலில் 221-வது பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 30-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 1-ந் தேதி தேரோட்டமும், 2-ந் தேதி இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.

    இதையடுத்து வைகாசி பவுர்ணமி வசந்த உற்சவ விழா தொடங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோசமிட்டு கள்ளழகரை வரவேற்றனர்.

    பின்பு காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி அனுமார் கோதண்ட ராமசாமி கோவில், பெரிய கடை பஜார், வழியாக சுந்தரராஜப் பெருமாள் கோவில் முன்பு வந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை வைகை ஆற்றில் சப்பரத்தில் அமர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு வண்டியூர் மண்டகப் படியை வந்தடைந்தார். திருவிழா ஏற்பாடுகளை எமனேசுவரம் சவுராஷ்ட்ரா சபை நிர்வாகிகள் செய்தனர்.

    • மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர்.
    • வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    அறுபடைவீடுகளில் முதற்படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் 2-ந்தேதி விசாக விழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது.

    இதனையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் தயாராக இருந்த தங்க குதிரையில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து தங்க குதிரையில் அமர்ந்தபடி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு சன்னதி தெருவழியாக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.

    மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர். காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒவ்வொரு மண்டகப்படியாக முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 100 மண்டகப்படியிலும் முருகப்பெருமானுக்கு பல்வேறு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை, மகாதீப, தூப ஆராதனை நடந்தது.

    கோவிலில் இருந்து மொட்டையரசு திடலுக்கு தங்கக்குதிரையில் வந்த முருகப்பெருமான், வாசனை கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பூப்பல்லக்கில் தன் இருப்பிடம் திரும்பினார். மொட்டையரசு திடலில் இருந்து கோவில் வரை வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    • ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார்.
    • திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது.

    ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். வெயில் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு திருடன் அவரிடம் இருந்த பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு விரட்டினான்.

    வெயிலில் மிகவும் சிரமப்பட்டு அவர் நடந்து சென்றார். அதைப்பார்த்த திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. கிழிந்துபோன செருப்பு மற்றும் ஒரு பழைய குடையை கொடுத்தான். பின் அவன் தன் வழியே திரும்பியபோது ஒரு புலி அவனைத் அடித்து கொன்றது.

    அப்போது எமதூதர்கள் அந்த வேடனின் உயிரைக் கொண்டு போக வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எமதூதர்களைத் தடுத்து, இந்த வேடன் வைகாசி மாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்கிறான். அதனால் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகிவிட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அந்த திருடனின் உயிரைக்கொண்டு சென்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்தது வைகாசி மாத தானம். எனவே தானம் செய்யுங்கள்.

    • வைகாசி மாத பிரம்மோற்சவ விழாக்களில் கலந்து கொண்டு வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்!
    • தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில்,

    திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதி கோவில்,

    ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வாருக்குப் பிரம்மோற்சவம்),

    மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர்,

    மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயன பெருமாள்,

    திருநாராயணபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,

    காஞ்சி ஸ்ரீவைகுண்ட பெருமாள்,

    சென்னை அமைந்தகரை ஸ்ரீபிரசன்ன வரதராஜர்,

    மதுரை ஸ்ரீகூடலழகர்,

    மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,

    திருநள்ளாறு ஸ்ரீதர்பரண்யேஸ்வரர்,

    பட்டீஸ்வரம் ஸ்ரீதேணுபுரீஸ்வரர்,

    திருக்கண்ணங்குடி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்,

    திருப்பனையூர் ஸ்ரீசவுந்தரேஸ்வரர்,

    கஞ்சனூர் ஸ்ரீஅக்னி புரீஸ்வரர்,

    கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர்,

    திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி,

    மயிலாடு துறை ஸ்ரீமயூரநாதர்,

    திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர்,

    பொள்ளாச்சி ஸ்ரீசுப்ரமணியர்,

    சென்னை வடபழனி ஸ்ரீதண்டாயுதபாணி,

    சென்னை ஸ்ரீகாளிகாம்பாாள்

    ஆகிய கோவில்களில் வைகாசி மாதத்தில் உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.

    • உத்+சவம். இதில், சவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும்.
    • பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு... தீர்த்தவாரி.

    கோவில்களில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் முக்கியமான விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். மற்ற விழாக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், உற்சவம் என்பதே, உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான விழாவாகும்.

    உத்+சவம். இதில், சவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதை பிரசவம் என்கிறோம். அதேபோல், எல்லாம் வல்ல பரம்ருபொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறையில் மூல மூர்த்தமாக எழுந்தருளியுள்ளது. அப்படி, மூல மூர்த்தமாக இருக்கிற இறைவனை உற்சவரின் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து, உலக நன்மைக்காக, கோவிலில் இருந்து சுவாமி வீதியுலா வருகிற வைபவமே, உற்சவம்!

    உற்சவங்கள், ஒரேயொரு நாளிலும் முடியும். அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கும். எனினும், பெரும்பாலான ஆலயங்களில், 9 நாட்கள் நடைபெறும் உற்சவமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த ஒன்பது நாள் உற்சவத்தை, சவுக்கியம் என்று குறிப்பிடுவர்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு... தீர்த்தவாரி. அந்த நாளில், புண்ணிய நதிகள் அனைத்தையும் தீர்த்தங்களாக ஆவாஹனம் செய்து, அனைத்து ஜீவராசிகளையும் அஸ்த்ர தேவரில் எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, நாம் தீர்த்த நிலையில் நீராடி கரைக்கு வரும்போது, மிகச் சிலிர்ப்புடன் இறையனுபூதி கிடைக்கும் என்கிறார் மணிவாசகப் பெருமான்.

    வைகாசி மாத பிரம்மோற்சவ விழாக்களில் கலந்து கொண்டு வழிபட... இயற்கைச் சீற்றங்கள் குறையும், பசுமை கொழிக்கும். உலகில் அமைதி நிலவும், குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும், சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

    • வைகாசி தேர்த்திருவிழா 6-ந்தேதி நடைபெற உள்ளது.
    • தேரை கோவிலில் இருந்து கடைவீதியில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்தனர்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி தேர்த்திருவிழா காவல்துறை குடும்பத்தார் சார்பில் வருகிற 6-ந்தேதி காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக தேரை கோவிலில் இருந்து கடைவீதியில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. கோவில் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகளை செய்தார்.

    இதில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், ஆச்சாரியார்கள் கண்ணன், ரவி, கோவில் பணியாளர் பூபதி, அர்ச்சகர் சண்முகவேல் ஆகியோர் முகூர்த்தக்காலை நட்டனர். இதில் கோவில் செயல் அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் கவிதா, வசந்த், போலீசார் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர்.
    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல் நிகழ்ச்சியும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு வாகன பவனியும், மதியம் 1 மணிக்கு உச்சிப்படிப்பும், சிறப்பு பணிவிடையும், அன்னதானமும் நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரி கினற்றங்கரையில் 5 முறை சுற்றியபடி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார்.

    நள்ளிரவு 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வடக்கு வாசலில் தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து 5-ந்தேதி அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு, மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    • பக்தர்கள் எழும்பிய அரோகரா கோஷம் மலையில் எதிரொலித்தது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பூக்குழி இறங்கினார்கள்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும்.

    இந்த திருவிழா 10 நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    வைகாசி விசாகமான நேற்று விழாவின் சிகர நாள் ஆகும். இதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க அங்கிருந்து சண்முகப் பெருமான் புறப்பட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். பாலாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.

    இதனையடுத்து அதிகாலை 5.45 மணியில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த பால் கொண்டு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    இதனையொட்டி மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக, சாரை, சாரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து கோவிலில் குவிந்தனர்.

    பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, மற்றும் பறவை காவடி என விதவிதமான காவடிகளுடன் வந்தும், 10 அடி, 15 அடி, 25 அடி நீளமுள்ள அலகு குத்தி வந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.. அப்போது பக்தர்கள் எழும்பிய அரோகரா கோஷம் மலையில் எதிரொலித்தது.

    திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே அக்னி வார்த்து பூக்குழி தயாராக இருந்தது.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள வெயிலு உகந்த அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பூக்குழி இறங்கினார்கள். பின்னர் அவர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் சென்று பாலாபிஷேகம் செய்து சண்முகப் பெருமானை வழிபட்டனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலைப் பொறுத்தவரை மலையை குடைந்து கருவறை அமைந்து இருப்பதால் இங்கு விக்ரங்களுக்கு அபிஷேகம் இல்லை. அதேசமயம் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி செவ்வாய்க்கிழமை தோறும் பெரும்பாலான பக்தர்கள் வேலுக்கு பாலாபிஷேகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்திருவிழா நாளில் சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறுவது தனி சிறப்பாகும்.

    விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை 5.45 மணியில் இருந்து மதியம் 3.45 வரை இடைவிடாது 10 மணிநேரம் சண்முக பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 2 மணிநேரம் பாலாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது

    • முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.
    • சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும்.

    விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்- சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றில் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

    சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால் தான் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தின் பிரதான தேவதை முருகப்பெருமான் ஆவார். விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் இருவராவர் ஒருவர் இந்திரன். மற்றொருவர் அக்னி.

    இவர்கள் சகல மங்களங்களையும் அளிப்பவர்களாக தமது இருதிருக்கரங்களில் வரதம் மற்றும் அபய முத்திரை ஏந்தி அருள்புரிகிறார்கள். அக்னி சிவப்பு நிற மேனி கொண்டவர். இந்திரனோ தகதகக்கும் தங்கத் திருமேனி உடையவர்.

    விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் மற்றும் விசுவை என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

    இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காஞ்சி மகா பெரியவர் அவதரித்தது வைகாசி மாதமே!
    • வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாக கொண்டாடப்படுகிறது.

    1. வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    2. வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

    3. வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

    4. வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    5. காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி மாதமே!

    6. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலா மணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    7. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    8. இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

    9. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    10. மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத "அமுத சுரபி" என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது. இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

    11. ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

    12. தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

    13. முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது. சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப் பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது.

    14. பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    15. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    16. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    17. திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

    18. பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    19. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    20. கன்னியாகுமரி அம்மனுக்கு 'ஆராட்டு விழா' இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    21. திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடை பெற்று வருகிறது.

    22. ராம-ராவண யுத்தத்தின்போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும், அது காட்டிய நன்மை, தீமைளையும் மனதில் கொண்டே ராமன் போரிட்டு ராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.

    23. ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது.

    24. திருச்சி அருகில் 'ஐயர் மலை' என்று வழங்கப்படும் வாட்போக்கி ரத்னாசலேஸ்வரர் (ரத்னகிரி) கோவில் கல்வெட்டில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கியதை குறிப்பிடுகிறது.

    25. இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • நாளை விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது.
    • 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. 10-ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலையில் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
    • பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகவிழாவையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி இன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஏராளமான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    வைகாசி விசாகத்தையொட்டி இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

    இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. மேலும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிதம்பர சுவாமிகள் சிறிய கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னை மற்றும் உள்ளூர் வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. இதில் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காவடி எடுத்து வந்தனர். சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடைபெற்றன.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவில் அடி வாரத்தில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி விளக்கேற்றி வழிபட்டனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள 8-ம் படை முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் இன்று சிறப்பு பூஜை நடை பெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து தரிசனம் செய்தனர்.

    பாரிமுனை ராசப்பா செட்டி தெருவில் அமைந்துள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இன்று அதிகாலை முதல் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இன்று மாலையில் பூக்கடை பகுதியில் உள்ள தெருக்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    கீழ்க்கட்டளை பெரிய தெரு போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×