search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN Cancer Agency"

    உலகம் முழுவதும் இந்த ஆண்டு 1 கோடியே 81 லட்சம் பேருக்கு புதிதாக புற்று நோய் ஏற்படும் என்றும் 96 லட்சம் பேர் உயிர் இழப்பார்கள் என்றும் ஐ.நா.ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Cancer #UN
    பாரீஸ்:

    புற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்தபடி உள்ளது. மற்ற நோய்களை போல் புற்று நோய்க்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதன் காரணமாக புற்று நோய் பரவலாக எல்லா நாடுகளிலும் அதிகமாகி வருகிறது. இது சம்பந்தமாக ஐ.நா. அமைப்பின் சர்வதேச புற்று நோய் ஆய்வு மையம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.

    அதில், 2018-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 1 கோடியே 81 லட்சம் பேருக்கு புதிதாக புற்று நோய் ஏற்படும் என்று கணித்துள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் 96 லட்சம் பேர் புற்று நோய்க்கு உயிர் இழப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு 1 கோடியே 41 லட்சம் பேர் புதிதாக புற்று நோய்க்கு ஆளானார்கள். ஆண்டுக்கு 82 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.

    ஆனால், இப்போது அதைவிட அதிகமாக நோய் பாதிப்பும், உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.

    இது சம்பந்தமாக அந்த மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் வில்டு கூறும் போது, உலகம் முழுவதும் புற்று நோய் அதிகரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

    இதை தடுப்பது உலகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என்று கூறினார்.

    முறையான தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுப்பதாலும், நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதாலும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


    மக்கள் தொகை வளர்ச்சி, வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, சுகாதாரமற்ற வாழ்க்கை, வாழ்க்கை முறையில் ஆபத்தான மாற்றங்களை உருவாக்கியது போன்ற காரணங்களால் தான் புற்று நோயின் தாக்கம் அதிகரிப்பதாகவும் கூறி உள்ளனர்.

    ஆண்களில் 5-ல் ஒருவருக்கும், பெண்களில் 6-ல் ஒருவருக்கும் வாழ்நாளில் எந்த நேரத்திலும் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21-ம் நூற்றாண்டில் புற்று நோய் காரணமாகத்தான் உலகத்தில் அதிக உயிர் இழப்புகள் ஏற்படும் என்று கணித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    12-க்கும் மேற்பட்ட புற்று நோய் வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொரு நாட்டில் நிலவும் சமூக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட வகை புற்று நோய்கள் அந்த நாட்டு மக்களை தாக்குகின்றன.

    ஆசிய நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகுகிறவர்களும், உயிர் இழப்பவர்களும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    உலகில் நுரையீரல் புற்று நோயால் அதிக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. மொத்த புற்றுநோய் உயிர் இழப்பில் கால் சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயால் உயிர் இழக்கின்றனர்.

    பெண்களை பொறுத்த வரை 15 சதவீதம் பேர் மார்பக புற்று நோயாலும், 13.8 சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயாலும், 9.5 சதவீதம் பேர் பெருங்குடல் புற்று நோயாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

    டென்மார்க், நெதர்லாந்து, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட 28 நாடுகளில் புற்று நோய்க்கு பெண்கள் உயிர் இழப்பது அதிகமாக உள்ளது. #Cancer #UN

    ×