search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Ministers"

    பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் வழங்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #AnbumaniRamadoss #HIVBlood
    கோவை:

    கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு -அவினாசி திட்டம் 3500 கோடியில் திட்டமிட்டு தற்போது 1500 கோடியாக குறைத்து மாற்று வழியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது சாத்தியமில்லை.

    உயர் மின்னழுத்த கோபுரங்களுக்காக 13 மாவட்ட விவசாயிகள் போராடி வருகிறார்கள். கேரளாவை போல் நிலத்தடியில் கொண்டு செல்லலாம். விவசாயிகளை அழித்து இத்திட்டம் எங்களுக்கு தேவையில்லை.

    விவசாயிகளை அரசு ஏளனமாக பார்க்கிறது. குறைந்த பட்சம் அவர்களிடம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும்.

    மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தால் முல்லை பெரியார், பரம்பிகுளம் ஆகியவை கேரள மாநிலத்திற்கு செல்லும். இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பு தரும். அதனை அனைத்து கட்சிகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.

    மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். சட்டமன்றம் ஜனவரி முதல் வாரம் கூட இருக்கிறது.

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதி என சட்டம் இயற்றி ஜனாதிபதியிடம் கையெழுத்து பெற வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வரவில்லை. 500 கோடி கொடுத்துள்ளது போதவில்லை.

    அவர்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க மறு சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும்.

    என்.எல்.சியில் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது தேவையில்லை. அந்த நிறுவனமே தேவையில்லை. நிலத்தடி நீர் அந்த மாவட்டத்தில் 800 அடியாக குறைந்து விட்டது.

    மக்களுக்கு வேலையில்லாமல் அவர்களுக்கு மட்டும் 3000 கோடி லாபம் வருகிறது. எனவே என்.எல். சி. விரிவாக்கத்தை தடை செய்ய வேண்டும். அந்த பகுதி பாலைவனமாகி விடக்கூடாது.


    ஒரு மருத்துவராக நான் கூற விரும்புவது எச்.ஐ..வி ரத்தம் வழங்கியது மிகப்பெரிய தவறு. அதனை ஏற்க முடியாது. அதற்கு துறை அமைச்சரும் அதிகாரிகளும் தான் பொறுப்பு.

    தமிழக சுகாதார துறை சரியான முறையில் செயல்படவில்லை. இதற்கு பொறுப்பேற்று அமைச்சர்களும் அதிகாரிகளும் பதவி விலக வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகின்றது. தமிழக அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. எனவே மூத்த வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும்.

    டாஸ்மாக் பிரச்சனைக்கு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்படி வாதிடவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு அல்லது குஜராத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss #HIVBlood

    டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் இன்று மத்திய மந்திரிகளை சந்திக்க உள்ளனர். அப்போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிகிறது. #BJP #ADMK #ParliamentElection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி உருவாகியுள்ளது.

    இந்த அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    பலம் வாய்ந்த கூட்டணியாக பார்க்கப்படும் இந்த அணியை எதிர்கொள்ள பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தயாராகி வருகின்றன. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுடன், தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. நெருங்கிய நட்புடனேயே உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டது.

    நாடு முழுவதும் வீசிய மோடி அலையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனி ஆளாக களம் இறங்கிய ஜெயலலிதா 37 தொகுதிகளில் வெற்றியை ருசித்தார். ஆனால் இப்போது அது போன்ற சூழல் இல்லை. கடந்த தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றதைபோல இந்த முறை அ.தி.மு.க.வால் கண்டிப்பாக வெல்ல முடியாது என்கிற நிலையே உள்ளது. இதனால் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. வில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் சேர்வதற்கு பாரதிய ஜனதாவே பக்க பலமாக இருந்தது. ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்திலேயே பா.ஜனதா இந்த முயற்சியை மேற்கொண்டது. இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது என்றே கூறலாம்.

    கடந்த தேர்தலிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா விரும்பியது. ஆனால் அவரோ யாரும் வேண்டாம் என்று தனியாக நின்றார். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி, எப்போதும் அ.தி.மு.க. மீது தனி பாசம் கொண்ட கட்சியாகவே இருந்து வந் துள்ளது.

    பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த அணியை சமாளிக்க தங்களோடு ஒருமித்த கருத்தோடு இருக்கும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

    அதன்படி தமிழகத்திலும் கூட்டணி அமைப்பதில் அக்கட்சி தீவிரமாகி உள்ளது. இதற்காக அ.தி.மு.க.வுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற தொடங்கியுள்ளது.

    தமிழக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி இருவரும் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி ஆகியோரை இருவரும் இன்று சந்தித்து பேசுகிறார்கள்.

    இந்த சந்திப்பின்போது, தமிழக திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவது தொடர்பாக இருவரும் பேச உள்ளனர். அதே நேரத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார். ஜனவரி மாத இறுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பிரதமர் மோடியின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதற்குள் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க 2 கட்சி நிர்வாகிகளும் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் பிரதமர் மோடி புத்தாண்டில் தமிழகம் வரும்போது பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #BJP #ADMK #ParliamentElection
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி இருக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #TNMinisters #EdappadiPalaniswami
    சென்னை:

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16-ந்தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் வழியாக கரையை கடந்தது.

    மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறைக்காற்று வீசியதால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கடுமையான பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான தென்னை மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் இடிந்தும் சேதம் அடைந்தும் மக்களை கடுமையாக பாதிப்பு அடையச் செய்துள்ளது. இதனால் நிவாரண முகாம்களிலேயே மக்கள் தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.

    போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக சாய்ந்து விழுந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்களை நட்டும், நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்தில் சேதம் அடைந்த மின்சார வயர்களுக்கு பதில் புதிய வயர்களை மாற்றியும் மின் இணைப்பு வழங்கினார்கள். இதனால் குடிநீர் பிரச்சனையை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.

    நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது மீண்டும் பலத்த மழை பெய்ததால் பணிகள் பாதிக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் மழையால் சேரும் சக்தியுமாக மாறியதால் தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கே மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருகிறது.

    தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதமாக பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    மத்தியக் குழுவும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளதால் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


    பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    புயலால் பாதிக்கப்பட்ட 2.15 லட்சம் குடும்பங்கள் 415 முகாம்களில் தொடர்ந்து தங்கிஉள்ளனர். இவர்கள் சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது.

    மேலும் 6 லட்சம் குடும்பங்களுக்கு உடனடியாக மண்எண்ணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்எண்ணை விநியோகம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக குடும்பம் ஒன்றுக்கு 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படுகிறது.

    இதற்காக தற்போதைக்கு 1,075 கி.லிட்டர் மண்எண்ணை தேவைப்படுகிறது. தொடர்ந்து மண்எண்ணை விநியோகம் செய்து கூடுதலாக 1,675 கி.லிட்டர் தேவைப்படுவதால் உடனடியாக ஒதுக்கீடு செய்ய உதவுமாறு சேத பகுதிகளை பார்வையிட்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தமிழக உணவு அமைச்சர் காமராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    புயலால் சேதம் அடைந்த தென்னை மற்றும் பயிர்கள் பற்றி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சாய்ந்து விழுந்த தென்னைகளை அகற்றியதும் அந்த இடத்தில் புதிய கன்றுகளை நட தமிழக வேளாண்மைத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் போதுமான தென்னங்கன்றுகள் இல்லை என்றால் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது புயல் பாதித்த மாவட்டங்களில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் அனைத்துத் துறையைச் சேர்ந்த அலுவலர்களும், ஊழியர்களும் 8,000 பேர் முகாமிட்டு நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்து இங்குள்ள அலுவலக பணிகளை முடித்து விட்டு மீண்டும் நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

    இந்த வாரத்துக்குள் நிவாரணப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அமைச்சர்களை தொடர்ந்து அங்கேயே பணி முடியும் வரை தங்கியிருந்து கவனிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் அமைச்சர்கள், அவர்களது உதவியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் டெல்டா மாவட்டங்களிலேயே தங்கி உள்ளனர்.

    நிவாரணப் பணிகள் பற்றி மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் கூறும்போது, பணிகள் முழு வீச்சில் நடை பெறுகிறது. மக்களின் அன்றாட இயல்புநிலை திரும்பி வருகிறது. தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. என்றாலும் முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப இன்னும் 10 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.

    அடுத்த வாரம் புயல் நிவாரணப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் நிவாரண பணிகளின் முன்னேற்றம், இன்னும் மேற்கொள்ள வேண்டும். தேவையான நடவடிக்கைகள், உதவிகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதன் பிறகே அமைச்சர்களும், அதிகாரிகளும் சென்னை திரும்புவார்கள். அதுவரை டெல்டா மாவட்டங்களில் தங்கி இருப்பார்கள் என்று தெரிய வருகிறது. #GajaCyclone #TNMinisters #EdappadiPalaniswami
    முட்டை, பருப்பு கொள்முதல் செய்ததில் ரூ.2,400 கோடி ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #mkstalin #tnministers #corruption
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2,400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வருமானவரித்துறை சோதனைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. சத்துணவுத்திட்டத்தை உண்மையிலேயே சத்து உள்ள திட்டமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கருணாநிதி ஆட்சியிலிருந்த போது முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதுமட்டுமல்ல, தி.மு.க. ஆட்சி இருந்தவரை பள்ளிகளில் முட்டை வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாகவும் முறையாகவும் நேர்மையுடனும் செயல்படுத்தப்பட்டது.

    முட்டை வழங்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமானவரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

    லஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நடைபெற்று தமிழகமே வெட்கித்தலை குனிந்து நிற்கிறது. இந்த ரகசியங்கள் அனைத்தும் அரசின் மூத்த அதிகாரிகளின் ஆதரவு மற்றும் துணையின்றி முட்டை நிறுவனத்திற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மூத்த அதிகாரிகளோடு கைகோர்த்து அமைச்சர்களும் இதற்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

    அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும், அவர்களுக்கு வேண்டிய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் வருமானவரித்துறையின் நம்பகத்தன்மை மீது மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் உருவாகும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கி விட்டது. ஊழல் ஒழிப்பில் பா.ஜ.க. அரசின் இரட்டை வேடம் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் சோதனைகளில் வெளியாகி நடுநிலையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.

    ஆகவே, பள்ளிக்குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழலையும் மூடி மறைக்கவோ அல்லது அ.தி.மு.க. அமைச்சர்களை எப்படியாவது தப்பிக்க வைக்கவோ மத்திய பா.ஜ.க. அரசு எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

    2,400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அப்பாவிகள் மீது எதற்கு எடுத்தாலும் தேசத்துரோக வழக்குப் போடும் அ.தி.மு.க. அரசு, தனியார் முட்டை நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்று கொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழலை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை மாற்றம் செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. மீது குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யாமல் விசாரணை நடத்தும் அதிகாரிகளை தொடர்ந்து மாற்றம் செய்வது உண்மை குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி. மாறுதல்களை உடனே ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #tnministers #corruption
    அமைச்சர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டி விடுவதாக மு.க.ஸ்டாலினை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மறைமுகமாக குற்றம்சாட்டினார். #ADMK #ThambiDurai #MKStalin
    கரூர்:

    கரூர் புலியூர் பகுதியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் எந்த அளவுக்கு பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். அதனுடைய பாதிப்பை பற்றி அதிகமாக சொன்னால் தான் மத்திய அரசின் உதவி கிடைக்கும். அதை விடுத்து இதில் அரசியல் செய்தால் எப்படி உதவி கிடைக்கும்.

    இது இயற்கை சீற்றம். இந்த துயர நிகழ்வை சரி செய்ய வரும்போது எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். கஜாவால் என்னுடைய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லா இடத்திற்கும் போய் வந்து கொண்டிருக்கிறேன். மக்கள் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை சொல்கிறார்கள்.

    கேரளாவில் சமீபத்தில் பெரும் மழை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது பாராளுமன்றத்தில் எதிர்கட்சியை சேர்ந்த எந்த காங்கிரஸ் எம்.பி.க்களும் கேரள கம்யூனிஸ்டு அரசை குறை சொல்லவில்லை. அதில் அரசியல் செய்யாமல் மத்திய அரசிடம் நிதியுதவி மட்டுமே கேட்டனர்.

    இங்கு நிவாரண பணிகள் துரிதமாக நடக்கிறது. என்ன செய்யவில்லை என்று சொல்லுங்கள். அதைவிடுத்து சரியாக செய்யவில்லை என பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது. கஜா புயல் நிவாரண பணிகளை தேர்தல் களமாக பார்க்கக்கூடாது.

    மணப்பாறை பகுதியில் நான் செல்லும்போது அதற்கு முன்பாகவே எதிர் கட்சிக்காரரர்கள் திட்டமிட்டு மக்களை தூண்டிவிட்டு மறியல் செய்தார்கள். இந்த அரசு செயல்படவில்லை என கூறுவதற்கு வேண்டும் என்றே எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது வரலாறு காணாத பாதிப்பு. பாதிப்பை பற்றி எடுத்து சொல்லுங்கள். இல்லையெனில் மத்திய அரசு ஒன்றும் பாதிப்பு இல்லை என்று போய்விடும்.



    மு.க. ஸ்டாலின் முதலில் பாராட்டினார். இப்போது தூண்டி விடுகிறார். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். நாங்கள் யாரையும் கண்டிக்கும் நிலையில் இல்லை. நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து நிதி உதவி கேட்கிறார். நானும் உடன் செல்கிறேன். பெட்டிச்சாவி அவர்களிடம் உள்ளது. அவர்கள் தான் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்களுக்கு எதிராக யார் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்ற கேள்விக்கு, பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது யார்? என கேட்டு, மீண்டும் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார். #ADMK #ThambiDurai #MKStalin
    குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம்பெறாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

    மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடி ரூபாய்க்கு மேல் மாமூல் பெற்றதற்கான “குட்கா டைரி” கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது.


    அ.தி.மு.க. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்படியொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்கா கம்பெனியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், இந்த ஊழலின் “பிதாமகன்களாக” திகழ்ந்து, ஊரை ஏமாற்றி உலாவரும் உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது, விசாரணை திணறித் திசை மாறுகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

    குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

    குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

    ஆகவே, குட்கா மாமூல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம் பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்கா விற்பனை “மாமூல்” விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. மதிக்க வேண்டும்.

    அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத விசாரணை கோரி தி.மு.க.வின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிட நேரிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #Gutkha
    பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தரக்குறைவாக பேசக்கூடாது என்று ஜிராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #gramakrishnan #tnministers

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி ஆலம்பாறையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் போலீசாரும், கம்யூனிஸ்டு நிர்வாகிகளை அவதூறாக பேசியும், தாக்கவும் செய்துள்ளனர். அவர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கழுவன்திட்டையில் வருகிற 29-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தமிழக அரசு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்களை மூடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அரசு பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது. தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் பேரில் மூடப்பட்டு உள்ளது. தற்போது அங்கு நீதிபதிகள் குழு ஆய்வு நடந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்கக் கூடாது.

    குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு மாநில அரசை சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது.


    ஜி.எஸ்.டி. மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தரக்குறைவாக பேசக்கூடாது.

    மாநில அரசின் மின்சார தேவைக்கும் உற்பத்திக்கும் நிறைய இடைவெளி உள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் அவசியம் என்பதை ஏற்க முடியாது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை கோர்ட்டு விடுவித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் கவர்னர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. நீர் நிலைகள் அனைவருக்கும் பொதுவானது. மதத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் தாமிரபரணி நதியில் புஷ்கர விழா நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நெல்லை மற்றும் குமரியில் மதசார்புடன் நடத்த இருக்கும் புஷ்கர விழாவை அனுமதிக்க கூடாது.

    அவதூறாக பேசினார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதே விவகாரத்தில் புகார் கூறப்பட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எடுபிடி அரசாக இருக்கிறது.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக மக்கள் உரிமைக்காக போராடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

    விவசாய நிலங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என்று போராடிய எங்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். தமிழிசையை அவதூறாக பேசி விட்டார் என்று மாணவி சோபியா மீது வழக்கு போட்டனர். தமிழக அரசு இப்படித்தான் செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #gramakrishnan #tnministers

    தமிழக அமைச்சர்கள் பேசும் வார்த்தைகள் அரசியல் விமர்சனத்துக்குட்பட்டவை. எனவே அவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். #ponradhakrishnan #tnministers

    மதுரை:

    மதுரையில் இன்று நடந்த பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் இல்ல விழாவில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதார் கார்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதன் வாயிலாக சாதாரண மக்களும் ஆதார் கார்டு மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மீதான பழியும் நீங்கியுள்ளது.

    தமிழக அமைச்சர்கள் பேசும் வார்த்தைகள் அரசியல் விமர்சனத்துக்குட்பட்டவை. எனவே அவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.


    பாராளுமன்ற தேர்தலில் முன்பைவிட 350 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாரதீய ஜனதா முடிவு செய்யும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்பது தான் பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #tnministers

    மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார். #Kumaraswamy #MekedatuDam
    பெங்களூரு:

    காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் உள்ளன.

    இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய பங்கை சரியாக திறந்து விடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    மழை அதிகமாக பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

    இந்த அணையை 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் கட்ட உள்ளனர். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரியதாக இருக்கும்.

    பெரிய அணையான கிருஷ்ணராஜசாகரில் 45 டி.எம்.சி. தேக்கப்படுகிறது. மேகதாது அணையை 67 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் வகையில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால் மேகதாது ஆணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுவிடும் என்று தமிழகம் அச்சத்தில் உள்ளது. ஏற்கனவே உள்ள அணைகளில் இருந்தே சரியாக தண்ணீர் திறப்பது இல்லை. புதிய அணை கட்டினால் வருகிற தண்ணீரும் நின்றுவிடும் என்ற பயம் தமிழகத்தில் இருக்கிறது.

    இதன் காரணமாக மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. கட்டுமான பணிகளை நடத்த முடியாமல் கர்நாடகா உள்ளது.



    தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணை இன்று நிரம்புகிறது. சுமார் 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்படும். மேட்டூருக்கு பிறகு காவிரியில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு அணை இல்லை. இதனால் பெருமளவு தண்ணீர் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. அணை நிரம்ப போகிறது. கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து தண்ணீர் செல்லும் பவானி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இரு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அதிக அளவில் இருக்கும் என்பதால் அந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது வீணாகும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு மேகதாது ஆணை பொருத்தமாக இருக்கும். அவ்வாறு அணை கட்டினால் அதில் தண்ணீர் தேக்கி வைத்து கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பெங்களூருக்கு அனுப்ப முடியும். மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்திற்கும் தேவைப்படும் காலங்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கும் வசதியாக இருக்கும். எனவே இதற்கு தமிழகம் அனுமதிக்க வேண்டும்.

    இதற்காக நான் சென்னை சென்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளேன். மேலும் விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவேன். காவிரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கு இதுதான் ஒரே வழி. இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

    மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு எந்த நேரத்தில் தண்ணீர் வழங்கும் பிக்சட் டெபாசிட் போல இங்கு தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். இப்போது தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 85 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

    இயற்கை இன்னும் கை கொடுத்தால் அதிக தண்ணீரை திறந்து விடுவோம். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும். மேகதாது அணை மூலம் இன்னும் தமிழக விவசாயிகளுக்கு அதிகமாக எங்களால் உதவ முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #MekedatuDam
    ×