search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Registration Office"

    ராயபுரம் மற்றும் திருவண்ணாமலை பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். #vigilanceraid

    ராயபுரம்:

    ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரப்பதிவு, திருமண பதிவு மற்றும் கம்பெனி பதிவு ஆகியவற்றுக்காக தினமும் மக்கள் கூட்டம் அலை மோதும்.

    இதனால் இந்த அலவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. கந்தசாமி தலைமையில் 20 பேர் கொண்ட போலீசார் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்களை வெளியில் செல்லவிடாமல் அலுவலகத்தை பூட்டி சோதனை நடத்தினார்கள்.

    பீரோ, மேஜை என ஒவ்வொரு இடத்திலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    மாலையில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்தது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றவர்கள் இரவுவரை வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு பொதுமக்களை மட்டும் அலுவலகத்தில் இருந்து போலீசார் வெளியே அனுப்பினார்கள்.

    இச்சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

     


    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை, பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகம், உழவர் சந்தை என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

    பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் போலீசார் அலுவலகத்திற்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பத்திரப்பதிவு இணை பதிவாளர் உள்பட அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் பத்திரம் பதிவுக்காக வந்தவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களை அப்படியே உள்ளேயே வைத்து கதவை பூட்டிக் கொண்டு விசாரணை நடத்தினர்.

    மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நீலகண்டன் பணியாற்றி வருகிறார். இவர், டாஸ்மாக் பார்களில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். மாலையில் இருந்து இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.

    அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

    மேலும் டிரைவர் சுரேஷ் மற்றும் மதுவிலக்கு போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி போலீசார் எடுத்து சென்றனர். #vigilanceraid

    ×