search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu fishermen"

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர். #Fishermen

    ஆலந்தூர்:

    கடந்த ஆகஸ்டு மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுதலையான 16 பேரும் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள். அவர்களை விமான நிலையத்தில் மீனவ சங்கத்தினர் வரவேற்றனர். #Fishermen

    எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. #FisherMen #TNFisherMen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 28-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர்.

    மறுநாள் அதிகாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 2 விசைப் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.



    அதே நாளில் எல்லை தாண்டி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களையும் அவர்கள் வந்த படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட 17 தமிழக மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜுட்சன் முன்பு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 17 தமிழக மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து 17 மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 3 படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 23-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  #FisherMen #TNFisherMen
    மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கையின் கொடூர சட்டப்பிடியில் சிக்கியுள்ள 8 தமிழக மீனவர்களை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி திரேஷ்புரம், மாப்பிள்ளையூரணி, சுனாமிநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் இந்த கொடூர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் 26 லட்சம் அபராத தொகை அல்லது 3 மாதம் சிறை என தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    மீனவ சமுதாய மக்களின் வாழ்வில் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய மத்திய - மாநில அரசுகள், தங்கள் கடமையில் இருந்து முற்றிலும் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    இந்த சட்டம் இலங்கையால் அமல்படுத்தப்பட்டபோதே இது முழுக்க முழுக்க தமிழக மீனவர்களை குறிவைக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தோம். ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசோ இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இது பெரும் பாதகத்தை தற்போது தமிழக மீனவர்கள் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது.



    மீனவர்கள் பிரச்சினையில் இந்த மெத்தனப் போக்கை பழனிசாமியின் அரசு தொடர்ந்து கடைப்பிடிக்குமேயானால், அது மீனவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

    தங்கள் சுயநலனிற்காக மட்டுமே மத்திய அரசோடு நட்புறவுகொள்ளும் இந்த துரோக ஆட்சியாளர்கள், தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்களையும், மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசின் இக்கொடூர சட்ட பிடியில் இருந்து அவர்களை காப்பாற்றிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran
    இலங்கை காரை நகர் துறைமுகத்தில் உள்ள 107 தமிழக படகுகளில் 20 மட்டும் தான் மீட்கும் நிலையில் இருந்ததாக அதிகாரிகளும் மீனவர்களும் தெரிவித்துள்ளனர். #tamilnadufisherman
    ராமேசுவரம்:

    107 படகுகளில் 20 மட்டுமே மீட்கும் நிலையில் உள்ளதாக இலங்கை சென்ற மீனவ அதிகாரிகள், மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள், இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை மீட்டுத்தர வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து இலங்கை அரசின் அறிவுறுத்தலின் படி 184 விசைப்படகுகளை விடுவித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த படகுகளை இந்தியா கொண்டு வருவது குறித்தும் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சென்ற இந்த குழு நேற்று இலங்கையில் காரை நகர் துறைமுகம் சென்றது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 107 தமிழக படகுகளை ஆய்வு செய்தனர்.

    அங்கிருந்த படகுகளில் 20 மட்டும் தான் மீட்கும் நிலையில் இருந்ததை கண்டு அதிகாரிகளும் மீனவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று காங்கேசன் துறைமுகம், கிராஞ்சி, மன்னார் மற்றும் கல்பட்டி ஆகிய துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள 77 படகுகளை தமிழக குழு ஆய்வு செய்கிறது. #tamilnadufisherman
    கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை குவிக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர். #Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை அவர்களை சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க இலங்கை அரசு கடும் சட்டங்களை இயற்றி உள்ளது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக மீனவர்கள் உயிர் பயத்துடனேயே தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அதிக அளவில் ரோந்து பணியில் இருந்தனர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.

    ஆனாலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனர். இதனால் சிறை பிடிக்கப்படுவோமோ என்று அஞ்சிய ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு ஏமாற்றத்துடன் பாதியிலேயே கரை திரும்பினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது டீசல் விலை உயர்ந்த நிலையிலும் கடன் வாங்கி கொண்டு மீன்பிடிக்க செல்கிறோம். ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போது டீசலுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.

    ஆனாலும் மீன் பிடிக்கவிடாமல் இலங்கை கடற் படையினர் அச்சுறுத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தை சீர்குலைக்கவே இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.

    இந்த முறை கடலுக்கு செல்லும்போது சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படை குவிக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற சுமார் 21 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கும் உடனடி நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.



    ஈரான் நாட்டில் தனியாரின் விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற தமிழக மீனவர்களை கடத்தல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பயந்த நிலையில் இருந்த மீனவர்கள் தாங்கள் நாடு திரும்பினால் போதும் என்ற சூழலில் தங்களது குடும்பத்தினரோடு தொடர்புகொண்டு நடந்த பிரச்சினைகளை கூறியுள்ளனர். எனவே, மத்திய பா.ஜ.க. அரசு ஈரான் நாட்டோடு உடனடியாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மீனவர்கள் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தையும், பாஸ்போர்ட்டையும் ஈரான் நாட்டிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். இதற்கு, தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan
    ஓமனில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவித்தது.
    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமம், புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி சேவியர். இவருக்கு சொந்தமான ‘கவின் பிறைட்’ என்ற மீன்பிடி விசைப்படகில் அவருடன் சேர்த்து 10 மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது இயற்கை சீற்றத்தினால் விசைப்படகு இழுத்து செல்லப்பட்டு, ஓமன் கடல்பகுதிக்கு சென்றது. இதையடுத்து விசைப்படகையும், அதில் இருந்த 10 தமிழக மீனவர்களையும் ஓமன் கடற்படையினர் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி சிறைப்பிடித்தனர். கடற்படையினரிடம் தமிழக மீனவர்கள் இயற்கை சீற்றத்தினால் இந்த பக்கம் வந்துவிட்டோம் என்று விளக்கமாக எடுத்துச்சொல்லியும் அவர்களை விடவில்லை.

    இந்த நிலையில் மீனவர்கள் குடும்பத்தினரிடன் வேண்டுகோளுக்கிணங்க, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி, மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதர், தொழிலாளர் நல அதிகாரி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    அதன் அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஓமனில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவிக்கிறது. #tamilnews
    அரபிக்கடலில் உருவாகும் மேகுனு எனும் புதிய புயலால் தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    நாகர்கோவில்:

    அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘சாகர்’ என்று பெயரிடப்பட்டது.

    இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு இந்திய ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த ‘சாகர்’ புயல் இந்தியாவுக்குள் நுழையாமல் எதிர் திசையில் சென்று ஏமன் மற்றும் சோமாலியாவுக்கு மத்தியில் உள்ள ஏடன் வளைகுடாவில் மையம் கொண்டது. அதன் பிறகு கடந்த 19-ந்தேதி சோமாலியாவில் புயல் கரையை கடந்தது.

    சாகர் புயல் காரணமாக இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற சூழ்நிலை மறைவதற்குள் மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது.

    அரபிக்கடலில் சாகர் புயல் உருவான அதே இடத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் பின்னர் அது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மேலும் இந்த புயல் தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி சென்று கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய புயலுக்கு மாலத்தீவு நாட்டின் சார்பில் ‘மேகுனு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    ‘மேகுனு’ புயலால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அதே சமயம் அரபிக்கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகம், கர்நாடகா, மராட்டிய மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் வருகிற 23-ந்தேதி வரை தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். அதே சமயம் இந்த புயலால் தமிழகத்திற்கு மழை வாய்ப்புகள் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் தெற்கு இலங்கை அருகிலும் வட தமிழகத்தின் உள் பகுதியிலும் இரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தின் உள்பகுதியிலும் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.#tamilnews
    ×