search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surrey Game"

    விராட் கோலி அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுவதற்காக சர்ரே கவுன்டி போட்டியை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #IREvIND #viratKohli
    இந்திய வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். இந்த தொடர் முடிந்த பின்னர், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் (ஜூன் 14-ந்தேதி தொடங்குகிறது) விளையாடுகிறது. இந்த டெஸ்ட் முடிந்த பின்னர் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. இதற்கு முன் அயர்லாந்துடன் ஜூன் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை இரண்டு டி20 போட்டியில் விளையாடுகிறது.

    2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது இந்தியா 1-3 எனத்தொடரை இழந்தது. இந்த தொடரின்போது விராட் கோலி மிகவும் மோசமாக விளையாடினார். ஐந்து போட்டியில் கோலியின் சராசரி 13.4 ஆகும்.

    இதனால் தற்போதைய டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இங்கிலாந்து தொடருக்கு முன்பு கவுன்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார். இதற்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை புறக்கணித்தார். ஜூன் மாதம் முழுவதும் விளையாடும் வகையில் சர்ரே அணி விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது.

    இதனால் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் ஜூன் 27 மற்றும் 29-ந்தேதி டி20-யில் விராட் கோலி பங்கேற்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அயர்லாந்தக்கு எதிராக டி20 அணியில் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான் சிக்கலை ஏற்படுத்தியது.



    அயர்லாந்துக்கு எதிரான தொடர் நடைபெறும் அதே நாளில் சர்ரே அணி 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை யார்க்‌ஷைர் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதனால் விராட் கோலி எதில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் சர்ரே போட்டியை அவர் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சர்ரே அணி ஜூன் 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஹம்ப்ஷைர் அணியையும், ஜூன் 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை சோமர்செட் அணியையும், ஜூன் 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை யார்க்‌ஷைர் அணியையும் எதிர்கொள்கிறது. அயர்லாந்து போட்டியில் விளையாடினால் கோலி யார்க்‌ஷைர் போட்டியை புறக்கணிக்க வாய்ப்புள்ளது. மற்ற இரண்டு போட்டிகளில் விளையாடுவார்.
    ×