search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunil Chhetri"

    எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள். ஆனால், இந்திய அணி விளையாடும் போட்டியை நேரில் பார்க்க வாருங்கள் என கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். #SunilChhetri
    மும்பை:

    கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கோலோச்சி வருவதாலோ என்னவோ, மற்ற விளையாட்டுகளான கால்பந்து, ஆக்கி ஆகிய போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மோகம் குறைவே. இந்திய கிரிக்கெட் அணியில் சிறிய ஒரு விவகாரம் என்றாலும் பெரிதாக பேசப்படும் நிலையில், இந்திய கால்பந்து அணி என்ன செய்து வருகின்றது என்பது கூட பலருக்கு தெரியாத ஒன்றே. இதனை தேடவும் யாரும் விரும்புவது இல்லை.

    இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பல பகுதிகளில் கால்பந்து பிரதான விளையாட்டாக இருந்தாலும், அவர்கள் விரும்பி பார்ப்பது ஐரோப்பிய கிளப் ஆட்டங்களே. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என சர்வதேச வீரர்களுக்குதான் இங்கு ரசிகர்கள் அதிகம். அதில், தவறு இல்லை என்றாலும் ஐரோப்பிய கால்பந்தை சிலாகிப்பவர்கள் இந்திய அணியை கண்டுகொள்வதில்லை.

    பிபா தரவரிசையில் தற்போது 97-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. 97-வது இடம்தான என சாதாரமாக கடந்து செல்ல வேண்டாம். 130-வது இடத்தில் இருந்து இந்தியா 100-க்குள் வந்துள்ளது. தற்போது கேப்டனாக இருக்கும் சுனில் சேத்ரியின் தலைமையில் இந்த முன்னேற்றம் சாத்தியமானது.



    தற்போது நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும்.

    துயரம் என்னவென்றால் அவரது இந்த சாதனையை மைதானத்தில் இருந்து பார்த்தது வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே. இதனால், மிகுந்த வருத்தமடைந்த சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 

    ஐரோப்பிய கால்பந்து கிளப் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள். ஒத்துக்கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை. ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயணக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்.

    இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை

    என்று தனது உருக்கமான கோரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். சுனில் சேத்ரியின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆதரவு அளித்துள்ளார். இந்திய கால்பந்து அணி வரும் 4-ம் தேதி கென்யாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
    ×