search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suffer"

    ராமநாதபுரம் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பனைக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். கிராமத்தில் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுரு கூறியதாவது:-

    மருத்துவ குழுவினர் பனைக்குளம் கிராமத்தில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். என்ன காய்ச்சல் என்பது பற்றி ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
    லக்னோ:

    சட்டங்களை தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும், இதுதொடர்பாக ஆதரவு திரட்ட இம்மாதம் 23-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக எம்.பி ஹரிநாராயன் ராஜ்பர் பேசுகையில், ‘மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளது. பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

    மற்றொரு எம்.பி.யான அன்சுயல் வர்மா கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளேன். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-யில் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

    கணவன் மற்றும் அவருடைய உறவினர்களால் பெண்கள் வரதட்சணை போன்ற கொடுமைப்படுத்தப்படுதல் இப்பிரிவில் அடங்குகிறது. இந்த சட்டப்பிரிவு ஆண்களை இலக்காக்க தவறாக பயன்படுத்தப்படுகிறது. 1998 முதல் 2015-ம் ஆண்டு வரையில் இதுபோன்ற விவகாராங்களில் தவறாக 27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்’ என தெரிவித்துள்ளார். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மாணவர்கள் காயம் அடைந்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    தடியடியில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த ஒவ்வொருவரும் போலீசார் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளனர். இது தொடர்பாக காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மடத்தூரை சேர்ந்த வியாபாரி சால்ராஜ் கூறியதாவது:-

    அமைதியான முறையில் போராட சென்ற எங்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நான் கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அதன்பிறகு இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். என்னால் எழுந்து நிற்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரத்திற்கு செல்ல முடியாத நிலையில் நான் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி அருகே உள்ள திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் செல்வம் (47) கூறியதாவது:-

    நான் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்தேன். ஊரில் நடந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, அங்கு வந்த போலீசார் துப்பாக்கியால் எங்கள் மீது சுட்டனர். இதில் என்னுடைய வலது இடுப்பு பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நான் துடித்துக் கொண்டு இருந்தேன்.

    அப்போது, அங்கு வந்த போலீசார் என் மீது ஏறி மிதித்து சென்றனர். அந்த வழியாக வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நான் மீன்பிடி தொழிலுக்கு சென்று தான் எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். தற்போது, காயம் அடைந்ததால் 6 மாதம் மீன்பிடிக்க செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் எனது குடும்பம் அவதிப்பட்டு வருகிறது. எனது மகன் ஸ்டார்வின் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளான். அவனை கல்லூரியில் சேர்ப்பதற்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் தவித்துக் கொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகராஜ் (31) என்பவர் கூறுகையில், ‘‘ போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு இருந்து அருகில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி ஓடினேன். அப்படி இருந்தும் என்னை போலீசார் விரட்டி வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டனர். இதனால் எனது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது’’ என்றார்.

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தடியடி சம்பவத்தில் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த இசக்கி (35) என்ற கட்டிட தொழிலாளி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து இசக்கி கூறுகையில், ‘‘ நானும், எனது 15 வயது மகனும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம். அப்போது, போலீசார் சரமாரியாக துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினார்கள். அந்த சமயத்தில் என்னையும், எனது மகனையும் சூழ்ந்து போலீசார் தடியால் தாக்கினார்கள். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தோம். எனது மகன் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளான். தடியடியில் அவன் காயம் அடைந்துள்ளதால், அவனை 11-ம் வகுப்பில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தடியடியில் காயம் அடைந்ததால் என்னாலும் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதள சேவை முற்றிலும் முடங்கியதால் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    போராட்டக்காரர்கள் ஊர்வலமாக புறப்பட்டது முதல் போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூடு, கல்வீச்சு, பலியானவர்களின் புகைப்படம் என பல்வேறு விபரங்கள் உடனுக்குடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவியது.

    போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசு மற்றும் போலீசாருக்கு எதிரான பதிவுகளையும் ஏராளமானோர் பதிவிட்டனர். இதனால் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவியது.

    போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இதன் தாக்கத்தை போலீசார் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    இதையடுத்து வன்முறை பரவாமல் இருப்பதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு (27-ந் தேதி வரை) இணையதள சேவையை நிறுத்தி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணி முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது.

    ஆனால் தொலைபேசி சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் மற்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேச முடிகிறது.

    இணையதள சேவை முடங்கியதால் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை சமூக வலை தளங்களில் பதிவிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest
    ×