search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st sebastian"

    மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த பழமை வாய்ந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
    மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா மற்றும் பங்கு நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பழமை வாய்ந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி காண்போம்.

    புனித தோமையார் வழியாக திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கன்னியாகுமரி வில்லுக்குறி அருகில் உள்ள மாடத்தட்டுவிளை ஊரில் தங்கியதாகவும், இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் என்றும் மாடத்தட்டுவிளை ஆலயத்தில் உள்ள விளக்குத்தூண் அதன் தொன்மைக்கு சான்றாக கூறப்படுகிறது.

    இந்த கல் விளக்குத்தூண் 15-2-1371-ல் கோவில் வகைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கல்த்தூண் இப்போதைய ஆலயத்தின் வடமேற்கு ஓரத்தில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துகள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. ஆகவே, இங்கு சுமார் 652 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.

    கி.பி.1,603-ல் இயேசு சபை குருக்களால் போர்ச்சுக்கீசியர் ஆதரவில் களிமண்ணால் ஆன முதல் ஆலயம் நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டாறுக்கு அடுத்தபடியாக மாடத்தட்டுவிளையில் அமைக்கப்பட்டது. அன்று முதல் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கு தளத்தின் கீழ் கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்பட தொடங்கியது. கி.பி. 1,644-ல் உரோமை இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை ஆந்திரேயாஸ் லோப்பன் கோட்டாறு பங்குதளத்தில் அடங்கியுள்ள கிளை பங்குகள் பற்றிய புள்ளி விவரம் அனுப்பியுள்ளார்.

    அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்ற செய்தியை தருகிறார். வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறை மாவட்டமாக செயல்பட தொடங்கியதும் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கில் இருந்து கி.பி.1853 மார்ச்-15 ம் நாள் முதல் காரங்காடு பங்கின் கிளை பங்கானது.

    பின்னர் கி.பி. 1918 நவம்பர் 10-ம் நாள் காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தின் உள் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் திருவுருவ சிலை ரோமாபுரியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்திலிருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடும் ஒட்டிய நிலையிலும் அமைந்துள்ளது,

    இதன் சிறப்புக்குரியதாகும். கி.பி. 1923-ம் ஆண்டு ஜனவரி 2-ம் நாள் புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து சிறிய எலும்பு துண்டை கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அருளிக்கமாக மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி பக்தர்களின் வணக்கத்திற்கு வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் தேதிபடி திருநாளான ஜனவரி 20-ந் தேதியும், இவ்வாலயத்தின் 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித செபஸ்தியாரின் திரு பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.
    வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் ஆலயத்தின் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று காலை 6 மணிக்கு நினைவு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.15 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தேர் கூடம், மாதா கெபி, புதுப்பிக்கப்பட்ட கொடிமரம் ஆகியவை அர்ச்சிப்பு நடக்கிறது. தொடர்ந்து மேல்பாலை பங்குத்தந்தை அந்தோணி எம்.முத்து தலைமைதாங்கி திருவிழா கொடியை ஏற்றிவைக்கிறார். இரவு 8.30 மணிக்கு அன்பியங்கள் வளர்ச்சி சங்க பொதுக்கூட்டம், 9 மணிக்கு புனித அந்தோணியார் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு பொதுக்கூட்டம், திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    3-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல் நடைபெறுகிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    7-ம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, 9-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    அதைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு ஆராதனையில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் பவுலோஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை, 10-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு புனித செபஸ்தியார் தின முதல் திருவிழா திருப்பலி, 8.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெறோம் தாஸ் தலைமைதாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். பகல் 1 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை சகாய அருள் தேவ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள், அருட்பணி பேரவை துணைத்தலைவர் பயஸ் சேவியர், செயலாளர் மரிய நான்சி, துணை செயலாளர் பாபியோன் ராஜ், பொருளாளர் எட்வின் சேவியர் செல்வன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.
    ×