search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை"

    • ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன
    • எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஈரான் இஸ்ரேல் இடையே போர் ஏற்படும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஈரான் அணுசக்தி நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த இந்த சைபர் தாக்குதலால் ஈரான்  அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரான் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதித்துறை நிர்வாகங்களையும், அணுசக்தி, எரிசக்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முடயங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த தாக்குதல் குறித்து பேசிய ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி, ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன. முக்கியமாக  ஈரான் அணுசக்தி மையங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம், துறைமுகங்கள் என அனைத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

     

    முன்னதாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

     

    இந்நிலையில் தற்போது ஈரான் அரசு நிர்வாகங்கள் மீதே நடந்துள்ள இந்த சைபர் தாக்குதல் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

    • காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை மையமாக கொண்டு, இன்று வரை இந்த நடைமுறையை கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
    • காமனூர் கிராமம் ‘காந்தி கிராமம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    கொப்பல்:

    கொப்பல் மாவட்டத்தில் காமனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 600 வீடுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஓட்டல் கூட இந்த கிராமத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

    அதாவது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபான விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போனது. மேலும் மக்கள் நிம்மதி இழந்து தவித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து இனி கிராமத்தில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுத்தனர். மேலும் கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். அன்றைய தினம் முதல் இன்று வரை இந்த கிராமத்தில் மதுபாட்டிலோ, புகையிலை பொருட்களோ விற்பனை செய்யப்படவில்லை.

    காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை மையமாக கொண்டு, இன்று வரை இந்த நடைமுறையை கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் காமனூர் கிராமம் 'காந்தி கிராமம்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. கிராம மக்களின் இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருவதுடன், இதேபோல மற்ற கிராமங்களும் மாற வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?
    • ரூ.20 ஆயிரம் வரை செலுத்தி விளையாடும் வகையில் திருத்தம்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் புதிய பரிந்துரைகளை செய்துள்ளது.

    ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

    ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? சிறுவர்-சிறுமிகளை அதில் இருந்து எப்படி மீட்டெடுக்கலாம்? என்பது போன்ற ஆலோசனைகள் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    நள்ளிரவு 12 மணி முதல் அதிகாரி 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கலாம். ஒரு நாளைக்கு 4 மணி நேரத் துக்கு மேல் விளையாட அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயி ரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே செலுத்தி விளையாடும் வகையில் திருத்தங்களை செய்யலாம்.

    சுமார் 1½ லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலர் தங்களது பெற்றோர்களின் செல்போன்களையே ஆன்லைன் விளையாட்டுக்காக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

    இப்படி குறிப்பிட்ட நேரம் தான் விளையாட முடியும் என்பதை கொண்டு வந்து விட்டால் நிச்சயமாக ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிகமாக நேரத்தை செலவழிப்பது குறையும்.

    சீனா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருப்பது போன்று விளையாடும் நேரம் மற்றும் பணப்பரிமாற்ற தகவல்களை செல்போன்களுக்கு அனுப்பும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தாலும் பணம் கட்டாமல் பொழுதுபோக்காக விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என்று ஆன்லைன் விளையாட்டு தடுப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • அரசு பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஊக்கப்படுத்தலாம், இனி வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள், தனியார் நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது. துறையின் அனுமதி இல்லாமல் யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், சுற்றறிக்கைகளை கூட சரியாக தயாரிக்க தெரியாத சிஇஓக்கள் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். இனி வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த தடை விதித்துள்ளது.

    • குட்கா, பான் மசாலாவில் நிகோடின் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
    • புகையிலை அடிப்படையிலான பொருட்களுக்கு குஜராத் அரசு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்தது.

    அகமதாபாத்:

    குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத் அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், குஜராத்தில் நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்க, விற்பனை செய்ய ஓராண்டுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது.

    குட்கா, பான் மசாலாவில் நிகோடின் இருப்பது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே குடிமக்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை செப்டம்பர் 13-ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • அனில் அம்பானிக்கு தடை மட்டுமின்றி ரூ.25 கோடி அபராதமும் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.

    மும்பை:

    பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்தத் தடையை விதித்துள்ளது.

    நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது.

    அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உள்பட 24 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுக்கு செபி தடை விதித்துள்ளது.

    அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள செபி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதித்துள்ளது.

    அத்துடன், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 6 மாதத்துக்கு தடை விதித்துள்ள செபி, அந்நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

    • தொடர்ச்சியாக 3 முறை பிரமோத் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைத்தார்.
    • ஆகஸ்ட் 23 ஆம் தேதி பாரீசில் தொடங்க உள்ள பாராலிம்பிக்சில் பிரமோத் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது

    ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த பாரா ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற இந்திய பாட்மிட்டான் வீரர் பிரமோத் பகத்துக்கு சர்வதேச பாட்மிட்டன் சம்மேளனம் 18 மாத தடை விதித்துள்ளது. இதன்படி அடுத்த 18 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளில் பிரமோத் பங்கேற்க முடியாது. எனவே விரைவில் தொடங்க உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பிரமோத் இழந்துள்ளார்.

     

    12 மாதங்களில் தொடர்ச்சியாக 3 முறை பிரமோத் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைத்தார். இதனால் அவர் ஊக்கமருந்து தடை விதிகளை மீறியதை உறுதி செய்து விளையட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் ஊக்க மருந்து தடுப்புப்பிரிவு அதிகாரிகள் [Court of Arbitration of Sport (CAS) Anti-Doping Division] உறுதி செய்தனர்.

    ஆனால் இதை எதிர்த்து அன்றைய தினம் பிரமோத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ஆம் தேதி நிராகரித்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்த 18 மாத தடையானது சர்வதேச பாட்மிட்டன் சமேலானதால் விடிக்கப்பட்டுள்ளது.

    எனவே வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பாரீசில் தொடங்க உள்ள பாராலிம்பிக்சில் பிரமோத் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் பிரமோத் பகத் தங்கம் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஒகேனக்கல் பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
    • கரையோரங்களில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

    ஒகேனக்கல்:

    ஆடி, புரட்டாசி, தை ஆகிய தமிழ் மாதங்களில் வரும் மகளாய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஐதீகம். மேலும் நாம் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் நம்பிக்கையும் உண்டு .

    அதன்படி ஆடி அமாவாசை இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விடுவர்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக உள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் வாகனம் மடம் சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்படுகிறது.

    மேலும் பஸ்சில் தர்ப்பணம் கொடுக்க வரும் மக்களை கரையோர பகுதிகளான சத்திரம், நாகர்கோவில், முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

    இதன் காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே கரையோரங்களில் பூஜை செய்து வழிபட்டனர். இதனால் ஒகேனக்கல் ஆடி அமாவாசை என்று வெறிச்சோடி காணப்பட்டது. 

    • கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
    • போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குடகு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சிவமொக்கா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் துங்கா மற்றும் பத்ரா அணைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. துங்கா மற்றும் பத்ரா ஆறுகள் சங்கமிக்கும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அதுபோல் கபிலா ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் மைசூரு-நஞ்சன்கூடு இடையேயான சாலைகள் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. இதனால் மைசூரு-நஞ்சன்கூடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கபிலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பசவேஸ்வரா கோவில், லிங்கபட்டர குடி, காசி விஸ்வநாதசுவாமி கோவில், சாமுண்டீஸ்வரி கோவில், அய்யப்பசாமி கோவில், தத்தாத்ரேயாசாமி கோவில், பரசுராமா கோவில் உள்ளிட்ட கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா ஆனேகுந்தி அருகே சொல்லாப்புரா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவமொக்கா-சிருங்கேரி, மங்களூரு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழையால் வருகிற 15-ந் தேதி வரை சிக்கமகளூரு மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று கலெக்டர் மீனா நாகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    ஹாசன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்த சிராடி மலைப்பாதை வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று மதியம் மீண்டும் சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓடும் நேத்ராவதி ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடுகிறது. நேத்ராவதி ஆறு, அரபிக்கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரம் பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் காவிரி ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் குஷால்நகர் சாய் படாவனே, குவெம்பு படாவனே, பசப்பா படாவனே, கந்ததகோட்டே உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    இதனால் அங்குள்ள வீடுகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். துபாரே மற்றும் ஹாரங்கி யானைகள் முகாம்கள் நேற்று மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    தொடர் கனமழையால் துங்கபத்ரா அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    இந்த அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் துங்கபத்ரா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனால் ஆற்றின் கரையில் அமைந்துள்ள விஜயநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட புராதன நகரமான ஹம்பியில் 12 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மூழ்கி உள்ளன. 

    • எவ்வளவு மது அருந்தினாலும் சப்பென இருப்பதாக ஆதங்கம்.
    • உண்மையான சரக்கா? போலி சரக்கா? என்று பலர் புலம்பல்.

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா, பீர் என பலவகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ட்ரோபிகானா வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, ஓல்டு சீக்ரெட் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகியவற்றை வாங்கி குடிக்கும்போது போதை உடனே ஏறுவதில்லை என்றும் எவ்வளவு மது அருந்தினாலும் 'சப்பென' இருப்பதாக பலர் ஆதங்கப்பட்டனர்.

    இது உண்மையான சரக்கா? அல்லது போலி சரக்கா? என்றும் பலர் புலம்ப தொடங்கினார்கள். இதுபற்றிய தகவல் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. அவர்களும் இந்த 3 வித மதுபானங்களின் தரத்தை ஆய்வு கூடத்தில் பரிசோதித்து பார்த்தனர்.

    அதில் 3 வித மதுபானத்திலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பீர் வகைகளுக்கு ஆயுள் காலம் 6 மாதம். ஆனால் போதை தரக்கூடிய மது வகைகளுக்கு ஆயுள் காலம் கிடையாது.

    ஆனால் மதுவில் ஆல்கஹால் அளவு 42.84 சதவீதம் இருக்க வேண்டும். அதைவிட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் அதை கடைகளில் விற்க கூடாது.

    இந்த நிலையில் வீரன் ஸ்பெஷல் பிராந்தி (பேட்ச் எண் 082/2024) வி.எஸ்.ஓ.பி. ட்ரோபிகானா (பேட்ச் எண். 013/2020), ஓல்டு சீக்ரெட் பிராந்தி (பேட்ச் எண். 837/2018) ஆகியவை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அந்த மது பாட்டில்களை மது பிரியர்களுக்கு விற்க வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் கடைக்காரர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

    அது மட்டுமின்றி இந்த மது வகைகள் விற்பனைக்கு உகந்தது அல்ல என்பதால் கடைகளில் இருப்பு இருந்தால் அதை மதுபான கிடங்குக்கு திரும்ப ஒப்படைக்குமாறு கடைக்காரர்களை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஆனாலும் பல கடைகளில் அதற்குள் மது பாட்டில்களை விற்பனை செய்துவிட்டனர். சில கடைகளில் மீதம் உள்ள மது பாட்டில்களை திரும்பப் பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கடை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    • மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு படேல் தடை விதித்தார்
    • பிரதமர் வாஜ் பாய் தலைமையிலான பாஜக அரசு ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்கவில்லை

    அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

     

     

    சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1966 வாக்கில் பசுக்கொலைகளுக்கு போராடுகிறோம் என்று வெகுஜன ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு திரட்டி போராட்டம் நடந்தத் துவங்கியது. இதன் உச்சமாக பாராளுமன்றத்தில் பசுக்கொலைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார். இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினோடு நெருங்கிய தொடர்புடைய பாஜக ஆட்சி அமைந்த போதும் பிரதமர் வாஜ் பாய் ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்காத நிலையில் தற்போது 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மோடி மீது ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தியில்  இருப்பது  சமீப காலமாக பொது வெளியில் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. இந்த விரிசலை சரி செய்யவே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்த உபகாரத்தை மோடி செய்து கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் தடையை நீக்கியதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கதசிகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த தடை நீக்கம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    ×