search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94931"

    தி.மு.கவிடம் இருந்து அழைப்பு வரும் போது நகர்ப்புற தேர்தலில் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது குறித்து பேசி முடிவு செய்வோம்.

    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் ஆணையம் செய்து தயாராக உள்ளது.

    தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை கட்சி தொண்டர்களிடம் பெற்று வருகிறது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெற்று உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். விடுதலை சிறுத்தை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படவில்லை.

     

    திமுக

    தி.மு.கவுடன் விரைவில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து பேசுவோம். விடுதலை சிறுத்தைக்கு வாய்ப்புள்ள இடங்களை தி.மு.கவிடம் கேட்டு பெறுவோம். தி.மு.கவிடம் இருந்து அழைப்பு வரும் போது நகர்ப்புற தேர்தலில் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது குறித்து பேசி முடிவு செய்வோம்.

    சமூக வலைதளங்களில் பிரபாகரன் பற்றி அவதூறு பரப்புகிற கருத்தை அரசு கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.அரசியல் சாசனம் நேற்று கொண்டாடப்பட்டது.

    அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அதிகாரத்தில் உள்ள சனாதன சக்திகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உறுதி ஏற்க வேண்டும். அவர்கள் மதரீதியாகவும் ஜாதிரீதியாகவும் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்.

    2024-க்குள் அனைத்து சமூக நீதி அமைப்புகளும் இணைந்து அவர்களை வெளியேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... சென்னை விமான நிலையத்தில் சோதனையை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியது 'அம்மா உணவகம்' என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள், படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

    நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில் அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. 

    ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படவேண்டும். 

    எனவே, இதில் முதல்வர் உடனடியாக தலையிட்டு புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்  'அம்மா உணவகம்' என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம்  கூறி உள்ளார்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக ரூ.1324.25 கோடியில் புதிய நலத்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
    கோவை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்கள், முடிவுற்ற பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக இன்று மதியம் கோவை வந்தார்.

    சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி மைதானத்துக்கு சென்றார். விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை அவர் காரில் வரும் வழிகளில் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    பின்னர்
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் நடைபெறும் வ.உ.சி. மைதானத்திற்கு சென்றார்.

    அங்கு அவர், பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.587.91 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 70 பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கோவை மாவட்டத்தில் ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் பல அரசு துறைகளின் சார்பில் ரூ.646.61 கோடியில் 25,123 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக ரூ.1324.25 கோடியில் புதிய நலத்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க.வினர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவை வ.உ.சி மைதானத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் மைதானத்தில் போடப்பட்டுள்ள பந்தலில் அமர்ந்திருந்தனர்.

    மைதானத்தில் பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

    முதல்- அமைச்சர் வருகையையொட்டி கோவையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மேடை அருகே துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மாநகரில் உள்ள காந்திபுரம் பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், முக்கிய கடைவீதிகள், விமான நிலையம் முதல் விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் வரை உள்ள அவினாசி சாலையின் இருபுறமும் போலீசார் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாராது பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருப்பூர் செல்கிறார்.

    மாலை 5 மணியளவில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். விழாவில், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவுற்ற பணிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டு கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை கொடிசியாவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். அதனை முடித்து கொண்டு நாளை மதியம் தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.


    பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான அம்மா குடிநீரின் உற்பத்தியை தி.மு.க. அரசு முழுமையாகவே நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகள் கிடைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை தொடங்க உத்தரவிட்டார்.

    “ஆடத்தெரியாத ஒருவர் கூடம் கோணல்” என்று சொல்வது போல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தெரியாத இந்த அரசு, நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்டு வருகிறது.

    அம்மா சிமெண்ட் விற்பனைக்கு மூடு விழா செய்துவிட்டு, பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன், வலிமை சிமெண்ட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது இந்த தி.மு.க. அரசு.

    அம்மா குடிநீர்

    பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான அம்மா குடிநீரின் உற்பத்தியை முழுமையாகவே நிறுத்திவிட்டது இந்த தி.மு.க. அரசு.

    அம்மா மினி கிளினிக் மற்றும் அம்மா நடமாடும் மருத்துவமனைகளுக்கு மூடு விழா செய்துவிட்டு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அம்மாவின் அரசு கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு இல்லம் தேடி மருத்துவம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது இந்த அரசு.

    ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், பருப்பு, காய்கறி, சிமெண்ட் போன்ற மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது அம்மாவின் அரசு, மாநில விலை நிலைப்படுத்தும் நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்று வந்ததை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    ஆனால் இந்த தி.மு.க. அரசு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், அம்மாவின் அரசு ஏற்கனவே மக்களுக்கு நிறைவேற்றிய பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா செய்த நிலையில் இப்போது நிதிச் சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களையும் மூட முடிவு செய்துவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன.

    தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் இரண்டு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் என்ன செய்கின்றன? அரசுக்கு என்னென்ன ஆலோசனைகள் வழங்கின? என்று தெரியவில்லை.

    மக்கள் நல அரசு என்றால் மக்களின் நலனைக் காக்கும் அரசு. ஆனால் இந்த அரசோ மக்களின் நலத்திட்டங்களைப் பறிக்கும் அரசாக உள்ளது. நிதி நிலைமையை மேம்படுத்தி, வருவாயைப் பெருக்க வழி தெரியாமல் தவிக்கும் இந்த கையாலாகாத அரசு, அம்மா அரசால் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    மக்களின் உயிர் காக்கும் தரமான மருந்துகளை சலுகை விலையில் விற்கும் அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தகங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும், மக்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவை அரசு உடனே கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்பி கோரிக்கை விடுத்தார்.
    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு மழை வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்தார். 

    ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 12 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் சராசரி அளவை விட 52 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மழையால் 49 ஆயிரத்து 757 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.2079 கோடி வழங்க வேண்டும். மழை வெள்ள நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும்’ என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
    முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.
    அவனியாபுரம்:

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு விதியை மீறி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இது குறித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரிடம் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தை அறிவித்துள்ளார்களே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் முல்லை பெரியாறு அணையை எப்போதாவது நேரில் சென்று பார்த்தாரா? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு போராட்டம் நடத்தட்டும் என்றார்.

    முல்லை பெரியாறு அணை


    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கிறதே என்று கேட்டபோது, முல்லை பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றார்.

    பேட்டியின் போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், தி.மு.க. நிர்வாகிகள் இளைஞரணி ராஜா, வாடிப்பட்டி பால்பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மன் வேட்டையன் உள்பட பலர் இருந்தனர்.

    மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும்.
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம். 7-ந் தேதி சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான மனுக்கள் வழங்கலை நான் தொடங்கிவைக்கிறேன். இதர மாநகராட்சிகளில் 10-ந் தேதி காலை முதல் மாநில நிர்வாகிகள் நேரில் சென்று விருப்பமனுக்களை பெற உள்ளார்கள். நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான விருப்பமனுக்கள் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பெறப்படும். விருப்பமனு பரிசீலனைக்கு பிறகு இறுதியாக வேட்பாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.

    அந்தந்த மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மத்திய மந்திரிசபை பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.

    ஒரு மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். முதல்-அமைச்சர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.


    தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை. இது பா.ஜனதாவின் பிரிவும், பாரபட்சமான மனப்பான்மையைக் காட்டுகிறது. பா.ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாங்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம், எல்லாம் மாநிலத்தையும் பாரபட்சமின்றி நடத்துவோம், அனைத்து மாநிலங்கள் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் என்று சொன்னார்கள்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கட்சி பா.ஜனதாவின் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

    பா.ஜனதா சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்வது தான் அரசியல் நாகரீகம்.

    பா.ஜ.க.வின் அமைச்சரவையில் யார்- யார் இடம் பெற வேண்டியது என்று முடிவு செய்ய வேண்டியது பிரதமர் மோடி தான். அதைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. இது சம்பந்தமாக நாங்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

    மேலும் பா.ஜனதா மதவாதத்தை முன்வைத்தும், பாகிஸ்தான் பிரச்சனையை முன்வைத்தும், புல்வாமா தாக்குதலை முன்வைத்தும், மத பெயரால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

    காங்கிரஸ் கட்சியான நாங்கள் எல்லா மதத்தையும் அரவணைத்து செல்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன செய்வோம் என்று தேர்தல் பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரம் எடுபடவில்லை.

    மத பெயரால் பிரசாரம் செய்த பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரம் எடுபட்டது. பா.ஜனதா சொன்ன நதி நீர் இணைப்பு திட்டத்தை வரவேற்கிறேன். நதிநீர் இணைப்பு நல்லதுதான் காவிரி இணைப்பு தேவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

    அப்போது மாவட்ட செயலாளர்கள்- சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    கட்சி பணிகள் குறித்தும், சட்டமன்ற, பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் இக்கூட்டத்தில் தக்க ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது.
    மேல்சபை எம்.பி.யாக்கி அழகு பார்த்த தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், நீட் தேர்வு போன்றவற்றிற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தராத பாரதிய ஜனதா ஆட்சிக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி, கேரளாவில் முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது போன்ற செயல்களுக்கு தமிழக மக்கள் தேர்தல் மூலம் பதில் கூறி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள சிலரை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பாரதிய ஜனதா போட்ட கணக்கு தோல்வி அடைந்து விட்டது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு கிடைத்த தோல்வி, இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக வாக்காளர்களை போல இந்திய வாக்காளர்கள் விழித்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

    தமிழகத்தின் வடமாவட்டங்களில் வலிமையாக இருந்த பா.ம.க., பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் கணக்கை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் வலம் வந்த தே.மு.தி.க.வும் மக்களால் புறம் தள்ளப்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் இத்தேர்தலில் மண் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுள்ளனர். இதனால்தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

    தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நான், பிரசாரம் செய்தபோதே, தி.மு.க. கூட்டணிக்கு 38 தொகுதிகள் கிடைக்கும் என்று கருதினேன். தேர்தல் முடிந்ததும் இதனை தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அதுதான் இப்போது நடந்துள்ளது.

    தமிழகத்திற்கு இனி மு.க. ஸ்டாலினின் தலைமைதான் தேவை. அது காலத்தின் கட்டாயமும் ஆகும்.

    தேர்தல் களத்தில் நின்ற டி.டி.வி. தினகரன் கும்பல் தேர்தலில் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். குறிக்கோள் இல்லாமல் ஒரு சிலருக்காக மட்டும் கட்சி நடத்தியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.

    இந்த தேர்தலில் கமல்ஹாசனுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. இனி அவர், அடுத்த தேர்தலுக்கு தான் மக்கள் முன் வருவார். அப்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டு அரசியலில் இருந்து வெளியேறுவார்.

    ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியை பாராட்டி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர், பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு முகமாகவே இருக்கிறது.

    மத்திய மந்திரிசபையில் தமிழகத்திற்கு இடமில்லை. எந்த பதவியும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இதை நான், ஏற்கனவே எதிர்பார்த்தேன். பிரதமர் மோடி, புதிய இந்தியா என்று கூறி புறப்பட்டு விடுவார். இனி தமிழகத்தை கண்டுகொள்ள மாட்டார்.



    தேர்தலில் களப்பணியாற்றிய வைகோவிற்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கி ஏற்கனவே தி.மு.க. அழகுப்பார்த்துள்ளது. இப்போது மீண்டும் அவருக்கு மேல்சபை எம்.பி. வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தி.மு.க.வின் கொள்கைகளுக்கும், ம.தி.மு.க.வின் கொள்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே வைகோ மீண்டும் தி.மு.க.வில் இணைய வேண்டும். தென்தமிழகத்தின் குரலாக வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    தமிழகத்தின் தேனி தொகுதியில் காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இது இளங்கோவன் மீது திணிக்கப்பட்ட தோல்வி ஆகும். தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இது அ.தி.மு.க.வினர் வசம் இருந்து தி.மு.க.விற்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்ற 9 தொகுதிகளிலும் பணம் பாதாளம் வரை பாய்ந்தது.

    நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் வரும். அங்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களே வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திட முடியாது என்றும் மக்களுக்கு பின்னால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம் என்றும் கனிமொழி எம்.பி.பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி மக்களின் உரிமைகளுக்காக, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயமாக தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    இங்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வரமுடியுமோ அதற்கு நிச்சயமாக பாடுபடுவேன். இங்கு மிக முக்கியமாக இருக்கக் கூடியது தண்ணீர் பிரச்சனை. தண்ணீர் இல்லாத நேரத்தில் குளங்களை தூர்வார வேண்டியது முக்கியமானது. இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியை முன்னெடுப்போம். அதனை தாண்டி மக்கள் பிரச்சனைகள் பல உள்ளன.

    தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எல்லோரையும் அரவணைத்து கொண்டு, இந்தியா என்பது எல்லோருக்கும் சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும். இந்த முறையாவது மகளிர் மசோதாவை கொண்டுவர வேண்டும். பொருளாதாரத்தில் இருக்கும் சரிவு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் உள்ள தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் போல்பேட்டை கிழக்கு, மேற்கு, நந்தகோபாலபுரம், செல்வநாயகபுரம், சக்தி விநாயகர்புரம், அழகேசபுரம், அம்பேத்கர் நகர், சுந்தரவேல்புரம், கிருஷ்ண ராஜபுரம், பொன்னகரம், முத்துகிருஷ்ணாபுரம், பூபால்ராயர்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், முருகன் தியேட்டர், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், குரூஸ்புரம், மட்டக்கடை, எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், 2-ம் கேட், சிவன் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், கே.வி.கே.நகர், அண்ணாநகர் பகுதிகளில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:-

    எத்தனையோ எதிர்ப்புகள், அச்சுறுத்துதல்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை தி.மு.க கூட்டணிக்கு தந்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் தனித்துவமான வெற்றியை பெற்று உள்ளது. தமிழகத்தில் சுமூகமான சூழ்நிலையை, நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம்.

    ஆனால் அவர்கள் தோல்வியடைந்த பின்பும் மக்களை மிரட்டுகின்றனர். என்னுடைய தோல்விக்காக வருத்தப்படுவீர்கள் என்று அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர். தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் அவர்கள் ஏற்படுத்திட முடியாது. மக்களுக்கு பின்னால் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சூலூர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சந்தித்த கூலி தொழிலாளியை நினைவில் வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி நலம் விசாரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 19 -ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூலூர் வந்தார்.

    அப்போது அவர் கிராம திண்ணையில் அமர்ந்து பிரசாரம் செய்தார். அதன் படி சூலூர் தொகுதி அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகருக்கு சென்றார்.

    அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளர் சர்க்கரை (63) என்பவரிடம் செல்போன் எண்ணை வாங்கி சென்றார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொழிலாளி சர்க்கரைக்கு போன் செய்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    உறவினர்கள் நலம் குறித்தும் கேட்டறிந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து அவரது கருத்தினை கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடம் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதனால் கூலி தொழிலாளி சர்க்கரை மகிழ்ச்சியில் திளைத்தார். அவர் தனது நண்பர்கள், உறவினர்களிடம் இதனை சொல்லி மகிழ்ந்தார்.

    இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சந்தித்த கூலி தொழிலாளியை நினைவில் வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி நலம் விசாரித்த சம்பவம் அப்பநாயக்கன் பட்டி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
    ×