search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்களிடம் கிண்டல்"

    • நல்லம்மாள் (வயது 57) தனது மருமகள் விமலா (24) என்பவருடன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சில் துவரங்குறிச்சி செல்வதற்காக கரியாம்பட்டி கிராமத்தில் பஸ்சில் ஏறினார்.
    • அப்போது டிரைவர் பழனிசாமி (44), இருவரையும் திட்டியுள்ளார். இலவச பயணம் செய்வது குறித்து கேலியும், கிண்டலும் செய்துள்ளார். பஸ் துவரங்குறிச்சி வரும் வரை அந்த பெண்களை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.

    திருச்சி,

    தமிழக அரசு வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பெண்களின் நலன் கருதி பேருந்துகளில் இலவச பயணத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் நாள்தோறும் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அதே வேளையில் ஒருசில இடங்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் துன்புறுத்தலுக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நிலைமை இன்னும் மாறவில்லை. இந்த நிலையில் அப்படியொரும் சம்பவம் திருச்சி மாவட்டத்திலும் அரங்கேறியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டம் கரியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிக்குமார் மனைவி நல்லம்மாள் (வயது 57) தனது மருமகள் விமலா (24) என்பவருடன் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சில் துவரங்குறிச்சி செல்வதற்காக கரியாம்பட்டி கிராமத்தில் பஸ்சில் ஏறினார்.

    அப்போது டிரைவர் பழனிசாமி (44), இருவரையும் திட்டியுள்ளார். இலவச பயணம் செய்வது குறித்து கேலியும், கிண்டலும் செய்துள்ளார். பஸ் துவரங்குறிச்சி வரும் வரை அந்த பெண்களை தரக்குறைவாக பேசி வந்துள்ளார். இதனை பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் கண்டித்தும் டிரைவர் அதனை கண்டுகொள்ளவில்லை.

    தொடர்ந்து தங்களை வசை பாடியதால் மனமுடைந்த நல்லம்மாள், விமலா இருவரும் துவரங்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் முறையிட்டனர். உடனே அங்கு வந்த துவரங்குறிச்சி பணிமனை மேலாளர் கென்னடி டிரைவர் பழனிசாமியை அந்த பெண்களிடம் இனிமேல் இதுபோல் தவறு செய்ய மாட்டேன் எனக்கூறி மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தினார்.

    டிரைவரும் மன்னிப்பு கேட்டதையடுத்து நல்லம்மாள், விமலா இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண்களை டிரைவர், கண்டக்டர்கள் ஏளனம் செய்யும் சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரந்தர தீர்வு காண வேண்டுமென பெண் பயணிகள் தெரிவித்தனர்.

    ×