என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223894"
- பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
- யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அதன் பின்பு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நகருக்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்தது.
பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சண்முகாநதி அணையை ஒட்டியுள்ள பகுதியில் தஞ்சமடைந்தது. அதனை நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.
அரிசி கொம்பன் யானையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே யானையின் இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அரிசி கொம்பன் யானையை மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செண்பகத்தொழு குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் படாதபாடு படுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் ஆரம்ப கால வசிப்பிடம் மூணாறு வனப்பகுதியை ஒட்டியே இருந்தது. எனவே அதனை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்தவரை அரிசி கொம்பனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது என்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
- அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
- யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.
அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.
நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.
மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.
தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.
யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.
சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது.
- மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது.
காங்கயம் :
காங்கயம் அருகே ஊதியூா் வனப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடிக்க வலியுறுத்தி காங்கயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, பொதுச்செயலாளா் முத்துவிஸ்வநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் காங்கயம் வட்டம், ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது. சிறுத்தை திடீரென விவசாயிகளின் நிலப் பகுதிக்குள் நுழைந்து மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழும் நிலையில் உள்ளனா். எனவே வனத் துறையினா் கூடுதல் கவனம் செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
- மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது.
- மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி செல்லும் சாலையில் மைனாபேரி மலைப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல், பறவைகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை உயிரினங்கள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் என அதிக அளவில் இம்மலைப்பகுதி முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.
இந்த மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் புகை மூட்டத்துடன் லேசாக தீப்பிடித்த நிலையில் தற்போது வீசி வரும் காற்றால் மலை பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வருகிறது.
இது குறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறைக்கும் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மலை அடிவாரத்தில் வாழும் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது. மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பகுதி மக்கள் வனத்துறையினர் வராத நிலையில் தென்காசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பகுதியில் பச்சை மரக்கிளைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மலை அடிவாரத்தில் அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் மான்கள், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
எனவே இந்த மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதியாக அறிவித்து மலையை சுற்றி வேலிகள் அமைக்க வேண்டும். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றனர். மேலும் இன்று காலையிலும் தொடர்ந்து மலைப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- குமரி மாவட்ட வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கி கலாசாரம்
- கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் வனப்பகு தியில் ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்த்தியாக இருப்பதால், வன விலங்குகளும் ஏராளமாக உள்ளன. இவற்றை யாரும் வேட்டையாடாமல் இருக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் அருகே உள்ள காற்றாலை மைதானத்தில் மிளா இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பூதப்பாண்டி வன சரகர் ரவீந்திரன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு 3 வயது மிளா, துப்பாக்கி குண்டு பட்டு இறந்து கிடந்தது. இதனை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழக்குடி பகுதியில் நாட்டு வெடிகுண்டு மூலம் மிளா கொல்லப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு மிளா துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரிய வகை உயிரினங்கள் உள்ள குமரி வன பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டது. வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த கடுமை யான நடவடிக்கை யால் வேட்டை கட்டுப் படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது பூதப்பாண்டி வன சரக பகுதியான ஆரல்வாய்மொழியில் மெல்ல மெல்ல துப்பாக்கி சத்தம் கேட்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மீண்டும் துப்பாக்கி கலாசாரம் தொடங்கி விட்டதோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் துப்பாக்கியோடு வேட்டை யாடும் கும்பல் பற்றி எந்த தகவலும் வனத்துறைக்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவம் வனத்துறையினர் சமூக ஆர்வலர்கள் இடையே மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குண்டடி பட்டு இறந்த மிளாவை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அதன் உடலில் இருந்து மீட்கப்பட்ட தோட் டாக்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும், காவல் துறையினரும் இணைந்து துப்பாக்கி கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் இல்லை யென்றால் குமரி வனப் பகுதிகளில் உள்ள வன உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியக்கூடிய சூழல் உருவாகும் என பலரும் வேதனை தெரி வித்துள்ளனர்.
- யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
- கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
- 2-வது நாளாக இன்றும் கணக்கெடுப்பு பணி தீவிரம்
- 3 நாட்களுக்கு பிறகு தான் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் புலி, யானை, சிறுத்தை, மான் உட்பட ஏராளமான விலங்கு கள் உள்ளன.
கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கப் பட்டது. அப்போது 20 யானைகள் வசித்து வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்து யானைகள் கணக்கெடுக்கும் பணியை நேற்று தொடங்கியது.
குமரி மாவட்டத்திலும் வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடம் பெற்றுள்ளனர். கோதையார், மாறாமலை, சாமிகுச்சி, ரோஸ்மியாபுரம், தாடகைமலை, அசம்பு, களியல் போன்ற பகுதிகளில் இந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது களியல் பகுதியில் 3 யானைகள் சுற்றி திரிந்தது தெரியவந்தது. மேலும் ஒரு சில பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் இருந்தது. காலை தொடங்கிய கணக்கெடுக்கும் பணி மாலை வரை நடைபெற்றது. கணக்கெடுப்பு குழுவினர் இரவு காட்டுப்பகுதியிலேயே கொட்டகை அமைத்து தாங்கினார்கள்.
இன்று 2-வது நாளாக இந்த குழுவினர் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். யானைகள் சாணத்தை வைத்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாளை காடுகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். யானைகள் நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வருவதை வைத்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், குமரி மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஒரு சில இடங்களில் யானைகள் தென்பட்டதாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுக்க சென்ற ஒரு சிலரை தொடர்பு கொள்ள முடியாததால் முதல் நாளில் எத்தனை யானைகள் தென்பட்டது என்ற விவரம் தெரிய வில்லை. இன்றும் அந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை நீர் நிலைகளுக்கு வரும் யானைகளை கணக்கெடுக்க உள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு தான் குமரி மாவட்டத்தில் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும் என்றார்.
- இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
- பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன,
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. அரகண்டநல்லூர் பேரூ ராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாராட்டு தெரிவித்தனர்.
- அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.
- கிலோ 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள் வனத்திலுள்ள சிறு பொருட்களை சேகரித்து நகரப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.தற்போது வடுமாங்காய் எனப்படும் சிறிய அளவிலான மாங்காய்கள் வரத்து துவங்கி உள்ளது. அவற்றை சேகரித்து வந்து கிலோ 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- இயற்கையாகவே இம்மரங்கள் 70 மீ., வரை மிக உயரமாக வளரும். மார்ச் முதல் மே வரை சிறிய அளவிலான வடுமாங்காய்கள் காய்க்கும்.குரங்கு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் விரும்பி உண்ணும். ஊறுகாய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கு வடுமாங்காய் அதிகம் பயன்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (28). சம்பவத்தன்று இரவு ஆசனூர் வனசரகத்திற்கு உட்பட்ட மாவல்லரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் கால் தவறி கீழே பாறையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த மற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ஆனந்த் சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீப்பற்றியது.
- 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
செங்கோட்டை:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் சூழலில் அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகிறது.
2-வது நாளாக தீ
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேக்கரையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பற்றி 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் மேக்கரையை ஒட்டி உள்ள எருமை சாவடி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தற்போது தீ தொடர்ந்து பரவி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. அவை ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், வன உயிரினங்கள் எதுவும் தீ விபத்தில் சிக்காமல் இருக்கவும் அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மழை இன்றி வனப்பகுதிகள் காய்ந்த நிலையில் காணப்படுவதால் அங்கு செல்வோர் தீ எளிமையாக பற்றும் வகையில் எந்த பொருளையும் எடுத்து ெசல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதிகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சாப்டூர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மரம், செடிகளை தீ வைத்து அழித்ததாக தெரிகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சாப்டூர் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி யாகும். இங்கு சிறுத்தை, கரடி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் புலிகளும் இந்த பகுதியில் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. எனவே சாப்டூர் வனப்பகுதி பாது காக்கப்பட்ட வனப்பகுதி யாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வன பகுதியில் உள்ள கேணி, வாழைத்தோப்பு, சின்ன கோட்டை, மலையாறு, பெருமாள் கோவில் மொட்டை உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரி எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மொட்டை பகுதியிலிருந்து புகை வெளியேறியது. எனவே வனப்பகுதியில் தீ பரவி இருக்கலாம் என கருதி சாப்டூர், வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வனத்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அந்தப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது. அவர்கள் அந்த வழியாக சதுரகிரி செல்ல முற்பட்ட தும், இதற்காக 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரம், செடி, புல்களுக்கு தீ வைத்து அழித்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து வனப்பகுதியில் அத்திமீறி நுழைந்ததாக 62 பேரை போலீசார் கைது செய்து பேரையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்