search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135775"

    • மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
    • சுற்றுலாபயணிகள் வருகை மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு மே 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

    மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.

    தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாபயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாபயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாபயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர்.

    இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

    • தேயிலை கண்காட்சியை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்க வேண்டும்
    • தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து பார்த்தனர்.

    குன்னூர், மே.22-

    குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரியம், தமிழக சுற்றுலாத்துறை, தமிழகத் தோட்டக்கலைத் துறை, இன்கோசர்வ் சார்பில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 நாட்கள் தேயிலை கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த தேயிலை கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தேயிலை கண்காட்சியில் பொதுமக்கள் எது உண்மையான சரியான தேயிலை அந்த தேயிலையின் தரம், ருசி அதனுடைய வண்ணம் தரம் எப்படி உள்ளது.

    தேயிலையை எந்த நிறத்தில் வந்தால் அது கலப்பட தேயிலை என்று அறியும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்முறையும் காண்பிக்கப்பட்டது. இந்த செயல்முறையை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து தேயிலை தரத்தையும் அதன் சுவையையும் ருசித்துப் பார்த்து தெரிந்து கொண்டனர்.

    இதில் முக்கிய அம்சம் சிறுமிகளுக்கு தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து பார்த்து என்ன மாதிரி சுவை உள்ளது என்பது சரியாக சொன்னால் சொல்லிய சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தேயிலை கலப்படம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளதாக சுற்றுலா பயணிகள் பாராட்டினர். மேலும் இந்த தேயிலை கண்காட்சியை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கது.
    • 3 பெரிய எல்.இ.டி மரங்கள் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி, மே.22-

    இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கது. இங்கு கோடைக்காலத்தில் தட்பவெப்பநிலை மிகவும் இதமாக இருக்கும். அதுவும் தவிர ஊட்டியில் உள்ள பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள், காட்சிமுனையம், பிரையண்ட் பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவை கண்களுடன் கருத்தையும் கவர்ந்து இழுக்கும். எனவே கோடைக்காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தண்டர் வேர்ல்டு- குளோ கார்டன் எனும் ஒளிரும் பூங்கா ஊட்டியில் வடக்கு ஏரி சாலையில் அமைந்துள்ளது.

    இதனை இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே முதல்முறையாக குளோ கார்டன் என்னும் ஒளிரும் பூங்கா 50க்கும் மேற்பட்ட ஜொலிக்கும் மலர்கள் மற்றும் 3 பெரிய எல்.இ.டி மரங்கள் ஆகியவை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.

    மலர்களின் வண்ணமயமான வடிவங்களை காண்பிக்கும் வகையில் எல்இடி மரத்தில் 4கே ரெசல்யூஷன் கொண்ட பிரம்மாண்ட திரை ஒன்றும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பூங்காவுக்கு வருகை தரும் அனைவரது பார்வைக்கும் இது விருந்தாக அமையும். 1.50 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட ஒளிரும் மலர் செடி வகைகள் இங்கு உள்ளன. மேலும் 10 மீட்டர் உயரமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட 3 பெரிய எல்இடி ஒளிரும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கணினி தொழில்நுட்பத்தில் 54 வண்ணங்களின் கலவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவர் மலர் வடிவங்களை திரையிடும் திறனுடன் இந்த எல்இடி ஒளிரும் மரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த குளோகார்டன் பூங்காவின் நுழைவு வாயில் 1000 அடி அளவிலான எல்இடி மேட்ரிக்ஸ் புரோபைல் முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவரும் வடிவங்களை காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

    • ஊட்டியில் உள்ள பெரு ம்பாலான விடுதிகளில் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
    • விலை உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஊட்டி

    சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும், ஊட்டியில் தற்போது கோடை விழா தொடங்கப் பட்டுள்ளதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.

    இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களை பாா்வையிட்டு வருகின்றனா்.இந்நிலையில், ஊட்டியில் உள்ள பெரு ம்பாலான விடுதிகளில் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

    சாதாரண விடுதிகளில் ஒருநாள் அறை கட்டணம் ரூ. 1,800-இல் இருந்து ரூ. 2,700 ஆகவும், சிறப்பு வசதிகளுடன் கூடிய அறை கட்டணம் ரூ.2,300இல் இருந்து ரூ.3,000 ஆகவும், காட்டேஜ்களின் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து சற்றுலா பயணிகள் கூறுகையில், ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ள நிலையில், வார விடுமுறை நாட்களில் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வும், கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவில் தற்போது கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

    இதனால் அவதி யடைந்து வருகிறோம். இதுதவிர உணவு பொருட்க ளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே விடுதி கட்டணங்களை முறைபடுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.
    • சமீபகாலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.

    சில குடும்பங்களில் வார இறுதியில் ஒரு மினி சுற்றுலா போவதை வழக்கமாக வைத்திருப்பர். சில குடும்பங்களில், சேர்ந்தாற்போல் 3 நாட்கள் விடுமுறை கிடைத்தால் சுற்றுலா போய்விடுவர். ஆனால் பல குடும்பங்களில் பள்ளி ஆண்டு விடுமுறை தான் சுற்றுலா செல்லும் நேரம். அவ்வாறு விடுமுறையை கழிக்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சொர்க்கமாக திகழ்வது ஏற்காடு மலைவாசஸ்தலம்.

    தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் தான் ஏற்காடு. கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது, தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும்.

    சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதனாலேயே ஏழைகளின் ஊட்டி என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது.

    மரங்களின் நிழலும், தென்றலின் சுகமும், வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை இங்கு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகான கவர்னராக இருந்த சர் தாமஸ் முரோ என்பவரால் 1842-ம் ஆண்டு ஏற்காடு கண்டறியப்பட்டது. ஏற்காடு அதன் பெரும்பான்மை சாகுபடியான காபி, ஆரஞ்சு, பலாப்பழம், கொய்யா, ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு தோட்டங்களுக்கு பெயர் போனது. காபி ஒரு முக்கிய உற்பத்தியாகும். இது ஆபிரிக்காவில் இருந்து 1820-ல் ஸ்காட்டிஷ் கலெக்டர் எம்.டி. காக்பர்ன் மூலம் ஏற்காடு வந்தது. மேலும் இங்கு அரிய வகையான மரங்களும் வனவிலங்குகளும் உடைய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. ஏற்காட்டில் உள்ள காடுகளில் சந்தனம், தேக்கு மற்றும் வெள்ளி கருவாலி மர வகைகள் மிகுதியாக காணப்படுகின்றன. மேலும் காட்டெருமை, மான், நரிகள், கீரிபிள்ளைகள், பாம்புகள், அணில்கள் போன்ற விலங்கு வகைகளும், பறவை இனங்களான புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகளும் இங்குள்ள காடுகளில் காணப்படுகின்றன.

    தென்னிந்தியாவின் ஆபரணம் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன. சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி, படகு போட்டிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. மே மாதத்தில் இங்கு வர நேர்ந்தால் இந்த கோடை திருவிழாவை தவறவிட்டுவிட கூடாது. மேலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கான இடங்கள் பல ஏற்காட்டில் உள்ளன.

    எம்ரால்ட் ஏரி

    அதில் முதலாவதாக ஏற்காட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக கருதப்படுவது, அதன் நடுவே அமைந்துள்ள இயற்கையான ஏரியாகும். இது மிகவும் பிரபலமாக எமரால்டு ஏரி என்று அழைக்கப்படுகிறது. அற்புதமான மலைகள் மற்றும் அழகிய தோட்டங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட இந்த ஏரி கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஏரியில் படகு மூலம் சவாரி செய்யும் வசதிகள் நியாயமான கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. உங்கள் தேவைக்கு ஏற்ப சுயமாக இயக்கப்படும் படகுகளையும் தேர்வு செய்யலாம்.


    பகோடா பாயின்ட்

    ஏற்காடு பிரதான பஸ் நிலையத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகோடா பாயின்ட், ஏற்காட்டிலியே மிகவும் உயரமான தளமாகும். இதன் உச்சியில் இருந்து ஏற்காட்டின் மொத்த அழகையும் கண்டு களிக்கலாம். இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள், இங்கு கற்களால் ஒரு ராமர் கோவிலை கட்டியுள்ளனர். இதன் அழகை கண்டு கழிக்க, இரவு 7 மணிக்கு முன் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.


    கிள்ளியூர் நீர்வீழ்ச்சி

    இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும், இந்த 300 அடி உயர நீர்வீழ்ச்சியின் மயக்கும் மற்றும் வசீகரிக்கும் அழகு, உங்கள் மனதிலும் இதயத்திலும் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர் இருந்துகொண்டே இருக்கிறது. மூலிகைகள் நிறைந்த மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் இந்த அருவியில் குளிப்பது பேரானந்தம் தரும் அனுபவமாக இருக்கும்.

    இந்த கிளியூர் அருவிக்கு வர தென்மேற்கு பருவ மழைக்கு பிந்தைய காலம் உகந்ததாக சொல்லப்படுகிறது. கொஞ்சம் சுவாரஸ்யம் வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த அருவியை ட்ரெக்கிங் பயணம் மூலமாக அடர்த்தியான வனப்பகுதியினுள் பயணித்தும் சென்றடையலாம்.

    லேடிஸ் சீட்

    ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மற்றொரு பிரபலமான இடம் லேடிஸ் சீட். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். வானிலை சரியாக இருந்தால், இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள். இந்த தொலை நோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் பார்வையாளர்களின் வருகைக்கு தினமும் திறக்கப்பட்டிருக்கிறது.

    கதைகளின் படி ஒரு ஆங்கிலேய பெண்மணி இந்த இடத்தில் அமர்ந்தவாறு சூரியன் மறையும் தருனத்தில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டு இயற்கையின் அழகான காட்சியை ரசித்து கொண்டிருந்ததால் லேடிஸ் சீட் என்ற பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஜென்ஸ் சீட், சில்ட்ரன் சீட் ஆகியவையும் இங்கு மிக பிரபலம். இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை பாறைகளின் தொகுப்பாகும். அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளை நோக்கியவாறு அமைந்துள்ளன.

    அண்ணா பூங்கா

    ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும். இதேபோல் வனதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள மான் பூங்காவானது படகு இல்ல ஏரிக்கு நடுவில் ஒரு தீவு போல உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடந்து செல்வதே ஒரு தனி அனுபவத்தை ஏற்படுத்தும்.

    தாவரவியல் பூங்கா

    18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அற்புதமான மரங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ள எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் இந்த பூங்கா ஒரு கடவுளின் பரிசு போல காட்சியளிக்கும்.

    சேர்வராயன் கோவில்

    கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் உள்ளது இக்கோவில். மே மாதத்தில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலம். இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும், காவிரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவிரி நதியையும் குறிக்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் உள்ளது.

    இவை தவிர கரடி குகை, ஆர்தர் இருக்கை, மாண்ட்ஃபோர்ட் பள்ளி, மீன் காட்சியகம், திப்பேரேரி காட்சி முனை, கொட்டச்சேடு தேக்கு காடு, கிரேஞ்ச், ரெட்ரிட் இல்லம், மஞ்சகுட்டை வியூ பாயிண்ட், தலைசோலை அண்ணாமலையார் கோவில், நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகியவையும் ஏற்காட்டில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும்.


    எப்படி ஏற்காடுக்கு செல்வது?

    தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால், விமானம், ரெயில் மற்றும் சாலை என அனைத்து போக்குவரத்து முறைகளாலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

    சேலம் விமான நிலையம் ஏற்காடுக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். சேலம் விமான நிலையத்திலிருந்து ஏற்காடு சுமார் 47 கி.மீ. ஆகும். பயணிகள் விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்து இலக்கை அடையலாம்.

    இதேபோல் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்காடு சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கேரளா, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு தினசரி ரெயில்கள் உள்ளன. ரெயில் நிலையத்திலிருந்து ஏற்காடு செல்ல வாடகை வண்டியில் செல்லலாம். இல்லையெனில் ரெயில் நிலையத்திலிருந்து சேலம் மத்திய பஸ் நிலையத்திற்கு உள்ளூர் பஸ்சில் ஏறுங்கள். அங்கிருந்து ஏற்காடு செல்லும் பஸ் கிடைக்கும்.

    தமிழ்நாடு மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக ஏற்காடு இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை அல்லது சேலம் போன்ற நகரங்களில் இருந்து ஏற்காட்டுக்கு வாகனத்தில் வார இறுதியில் மக்கள் செல்கின்றனர். சேலம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து ஏற்காட்டிற்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. சேலம் - ஏற்காடு செல்லும் பஸ்கள், ஏற்காடு ஏரிக்கரையில் நின்று செல்லும். ஏரியில் ஒரு வண்டி ஸ்டாண்ட் உள்ளது, அங்கு நீங்கள் சுற்றுலாவிற்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்புறம் என்ன அப்பிடியே ஜாலியா ஏற்காட்டுக்கு ஒரு டூர் போயிட்டு வாங்க..!

    ஏற்காட்டில் என்ன கிடைக்கும்?

    ஏற்காடு ஒரு மலை வாசஸ்தலம் என்றாலும் தீவிர வெப்ப நிலை மாற்றம் இங்கு இருப்பதில்லை. எனவே சுற்றுலா பயணிகள் சுமப்பதற்கு கடினமான தங்கள் குளிர் கால உடமைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு இலகுவான உடைமைகளை கொண்டு வந்தால் போதுமானது. ஆண்டு முழுவதும் லேசான மற்றும் இதமான வெப்பநிலையே இங்கு காணப்படுகிறது. ஏற்காட்டின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச சராசரி வெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும்.

    ஆண்டு முழுவதும் இந்த மலைவாசஸ்தலத்திற்கு செல்ல முடியும் என்றாலும் கூட, கோடை மற்றும் குளிர்காலத்தில் ஏற்காடு செல்வது ஏற்றதாக கருதப்படுகிறது. ஏற்காட்டில் கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்குறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இங்கு பருவமழை பெய்கிறது. மழைப்பொழிவு காரணமாக, இப்பகுதியில் மலையேற்றம் செய்வதும் மற்ற இடங்களுக்குச் செல்வதும் கடினமாகிறது.

    ஏற்காட்டில் அக்டோபர் மாதம் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. இதனால் ஏற்காடு குளிர்காலத்தில் இனிமையான காலநிலை மற்றும் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளைக் கொண்டுள்ளது. எனவே அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் தான் ஏற்காடு செல்ல சிறந்த பருவம் ஆகும். ஏராளமான பட்ஜெட் மற்றும் நடுதரப்பட்ட ஹோட்டல்கள் ஏற்காட்டில் இருப்பதால், இங்கு தங்குவது ஒரு எளிதான விஷயமாகும்.

    உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அழகிய சுற்றுப்புற காட்சிகள் நிறைந்த அறைகள், தனி பங்களா, காற்றோட்டமான அறைகள் என விரும்பியவற்றை நீங்கள் தேர்வு செய்து தங்கலாம். ஏன் வீடு போன்ற தங்கும் இடங்கள் கூட உள்ளன. ஏற்காட்டிற்கு வருபவர்கள், உள்ளூர் ஏற்காடு காபியை ருசிக்க வேண்டும். அதன் சொந்த சுவை மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனித்து நிற்கிறது. இதேபோல், இங்கு நூற்றுக்கணக்கான மிளகாய் பஜ்ஜி கடைகள் உள்ளன. இந்த பஜ்ஜியை தொட்டு சாப்பிட பிரத்யோகமாக ஒரு வகையான சட்னி தயார் செய்து கொடுக்கின்றனர். அந்த சட்னி பஜ்ஜிக்கு மேலும் சுவை கூட்டுகிறது. இதுமட்மின்றி ஸ்பைசி மயோனைஸ் மிளகாய் பஜ்ஜி, பிரட் ஆம்லெட் போன்றவையும் மிக பிரபலம்.

    ஆண் மற்றும் பெண்களுக்கு நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகையான முடவன் ஆட்டுக்கால் கிழங்கு இங்கு பரவலாக கிடைக்கின்றன. இந்த கிழங்கில் சூப் வைத்து விற்கின்றனர். இந்த சூப்பின் சுவையானது ஆட்டுக்கால் சூப்பின் சுவையை போலவே இருக்கும். இதையும் சுவைத்து பார்க்க மறக்காதீர்கள்.

    • குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
    • நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி:

    கோடை விடுமுறையையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்தனர். இதேபோல் தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் மற்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். நேற்று பூங்காவுக்கு 17 ஆயிரத்து 171 பேர் வந்தனர்.

    இதனால் ஊட்டி படகு இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அப்போது படகு இல்லத்தில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குதூகளித்தனர்.

    ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரெயிலுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்ட சுற்று ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். மேலும் தொட்டபெட்டா மற்றும் பைக்காரா, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    இதேபோல் குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.

    சீசன் களை கட்டி இருப்பதால், ஊட்டி குன்னூர் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் சாலையில் காத்திருந்து மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதேபோல் குளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை அவர்கள் பார்த்து ரசித்தனர்.

    நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தனர்.

    பழனி முருகன் கோவிலிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 1½ மணி நேரம் காத்திருந்து அவர்கள் தரிசனம் செய்தனர்.

    • சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
    • ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தினால், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    இதற்காக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போதுமான பொக்லைன் எந்திரம், பவர்ஷா ஆகியவற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மின்வாரியம் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்ற மின் சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களை கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும், பேரிடர் மேலாண் ைமத்துறை சார்பில் முதல் நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாயகரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

    மழையினால் பயிர்களுக்கு சேதம் ஏதேனும் ஏற்படின், அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் நல்லநிலையில் உள்ளனவா எனவும், பள்ளியின் மேற்கூரையில் உள்ள குப்பைகள் மற்றும் செடிகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மண் சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தோட்டக்க லைத்துறை இணை இயக்குநர் கருப்பசாமி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, முகம்மது குதுரதுல்லா, பூஷணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது
    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை குரும்பாடி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

    குன்னூர்

    நீலகிரியில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்தன. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கி உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி, நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை குரும்பாடி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செல்போன் சிக்னல் கிடைக்காத பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் மரம் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. மலைப்பாதையில் மரம் விழுந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மண் சரிவு இதேபோல் குன்னூர் பெட்போர்டு, கோத்தகிரி-வட்டப்பாறை சாலையில் நள்ளிரவில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

    இதற்கிடையில் நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஊட்டியில் கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு சென்றிருந்த, சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு சென்றனர். சிலர் குடைகளுடன் வலம் வந்தனர். ஊட்டியில் கடும் குளிர் நிலவியதால் பூங்காக்களை கண்டு ரசிக்க முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீலகிரியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- குன்னூர்-68, பாலகொலா-69, கிண்ணக்கொரை-62, குந்தா-55, பர்லியார்-48, கோத்தகிரி-47, ஊட்டி-10 மழை பதிவானது. நீலகிரியில் சராசரியாக 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    • 7 காட்டு யானைகள் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன.
    • வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

     குன்னூர்,

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும் குன்னூரில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், அந்த பழங்களை ருசிக்கவும் யானைகள் முகாமிட்டு உள்ளன. இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் அடர்லி, ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே உலா வருவதோடு, மலை ரெயிலை வழிமறித்து வருகின்றன. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்க்க தொடங்கி உள்ளன. இதன் பழங்கள் யானைகளுக்கு பிடித்த உணவாகும். இதனால் பலா பழங்களை ருசிக்க 7 காட்டு யானைகள் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை கே.என்.ஆர்.நகர் அருகே 7 காட்டு யானைகள் உலா வந்தன. இதை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தினர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் சாலையோரத்தில் யானைகள் நின்றன. பின்னர் சுமார் ½ மணி நேரம் கழித்து சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் யானைகள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது. அதனை தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.

    • ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கினேன்.
    • இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கூடலூர்

    கூடலூரில் கடன் பிரச்சினையால் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் காசிம்வயலை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். அவர் கூடலூரில் உள்ள நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் மணிகண்டன் பணியாற்றிய நகைக்கடையின் அருகே உள்ள மற்றொரு அறையின் கதவு பாதி திறந்த நிலையில் இருப்பதை நேற்று அப்பகுதி மக்கள் கண்டனர். பின்னர் உள்ளே பார்த்தபோது, அங்கு மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் கபில்தேவ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மணிகண்டன் கூறியுள்ளதாவது:- நான் சீட்டு நடத்தி வந்தேன். இதில் சீட்டு எடுத்து விட்டு பலர் பணம் செலுத்தாமல் ஏமாற்றி விட்டனர். இதனால் மீதமுள்ளவர்களுக்கு பணம் வழங்க ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கினேன். அதை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தேன். மேலும் எனக்கு பணம் தர வேண்டியவர்கள் ஏமாற்றி விட்டனர். நான் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மற்றும் எனக்கு பணம் தராமல் ஏமாற்றியவர்களின் பெயர் விவரங்களை குறிப்பிட்டு உள்ளேன். இதனால் தற்கொலை முடிவை எடுத்தேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • ரூ.36 லட்சம் மதிப்பில் சாலை சரி செய்யும் பணி நடந்தது.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி 10-வது வார்டு காந்தல் சுல்தான் பேட்டை பகுதியில் கனகராக வாகனங்களால் சாலை பழுதடைந்தது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால், ரூ.36 லட்சம் மதிப்பில் சாலை சரி செய்யும் பணி கவுன்சிலர் அபுதாஹிர் முன்னிலையில் தொடங்கியது. இந்த பணிக்கு நிதி ஒதுக்கி தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர மன்ற தலைவர், நகராட்சி கமிஷனர், நகராட்சி பொறியாளர், நகர மன்ற உறுப்பினர் அபுதாஹிர் ஒப்பந்ததாரர் தாஸ் எட்டாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • 19 வகை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் விற்க அரசு தடை விதித்தது.
    • குடிநீர் ஏ.டி.எம்.களை முறையாக பராமரிக்க பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ஊட்டி,

    நீலகிரி சுற்றுசூழலை பாதுகாக்க 19 வகை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க அரசு தடை விதித்தது.

    இதைதொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா, தாவரவியல், ரோஜா, சிம்ஸ், காட்டேரி பூங்கா உட்பட 70 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டன.

    இந்த வாட்டர் ஏ.டிஎம்களில் பல இடங்களில் குடிநீர் வருவதில்லை. சில ஏடிஎம்களில் எந்த காயின் போட்டாலும் காற்று தான் வருகிறது.

    குறிப்பாக சுற்றுலா தலங்கள் முன்பு உள்ள குடிநீர் ஏ.டி.எம்.கள் பல மாதங்களாக செயல்படாமல் கிடக்கிறது.நாணயம் செலுத்தும் பகுதி இயங்காமல் இருக்கிறது. பகலில் வெயில் அதிகமாக உள்ளது.

    இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் எந்திரங்களில் குடிநீர் கிடைக்காததால் அவதி அடைந்து உள்ளனர்.

    பைன் பாரஸ்ட் பகுதியில் ஒரு பெண்மணி மிளகாய் தொட்டு மாங்காய் சாப்பிட்டு காரம் தலைக்கு ஏறியதால் தண்ணீருக்கு அலைந்ந காட்சி பரிதாபமாக இருந்தது

    பிளாஸ்டிக் பயன்பா ட்டை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்று என்பது முறையானதாக அனைவருக்கும் எப்போதும் உபயோக படுத்துவதாக இருக்க வேண்டும் அவைகளை முறையாக பராமரிக்க பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி தெரிவித்தனர்

    ×