search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சியாளர்"

    இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக குரோஷியாவை சேர்ந்த முன்னாள் வீரர் இகோர் ஸ்டிமாக் நியமனம் செய்யப்படுகிறார். #IgorStimac #IndianFootballCoach
    புதுடெல்லி:

    இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமனம் செய்ய அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த பதவிக்காக மொத்தம் 40 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் இருந்து இகோர் ஸ்டிமாக் (குரோஷியா), லீ மின் சுங் (தென்கொரியா), ஆல்பர்ட் ரோகா (ஸ்பெயின்), ஹகன் எரிக்சன் (சுவீடன்) ஆகிய 4 பேர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வானார்கள்.

    புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டி நேற்று நடத்தியது. இதில் இகோர் ஸ்டிமாக் நேரில் ஆஜராகி தனது திட்டத்தை விளக்கினார். மற்ற 3 பேரிடமும் ‘ஸ்கைப்’ மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது.

    அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டியின் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு புதிய பயிற்சியாளர் பதவிக்கு இகோர் ஸ்டிமாக்கின் பெயரை செயற்குழுவுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிய பயிற்சியாளர் பெயர் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட இருக்கும் குரோஷியாவை சேர்ந்த 51 வயதான இகோர் ஸ்டிமாக் 1998-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த குரோஷியா அணியில் இடம் பெற்று இருந்தார். யூகோஸ்லாவியாவில் பிறந்த இகோர் ஸ்டிமாக் அந்த நாட்டின் 20 வயதுக்கு உட்பட்ட அணிக்காக 14 போட்டியில் விளையாடி இருக்கிறார்.

    அதன் பிறகு குரோஷியாவுக்கு இடம் பெயர்ந்தார். குரோஷியா அணிக்காக 53 சர்வதேச போட்டிகளில் பின்கள வீரராக விளையாடி உள்ளார். அத்துடன் குரோஷியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்து இருக்கிறார்.

    அடுத்த மாதம் (ஜூன்) தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் தனது பணியை தொடங்க இருக்கிறார். அவர் 3 ஆண்டு காலம் இந்த பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார். #IgorStimac #IndianFootballCoach
    இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ரீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #GrahamReid #IndianMenHockeyTeam
    புதுடெல்லி:

    புவனேஸ்வரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதியில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ஹரேந்திர சிங் நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 54 வயதான கிரஹாம் ரீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 130 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கும் கிரஹாம் ரீட் 1992-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருந்தார். #GrahamReid #IndianMenHockeyTeam

    இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. #HarendraSingh
    புதுடெல்லி:

    இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த மே மாதம் ஹரேந்திர சிங் பொறுப்பு ஏற்றார். ஆனால் அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் ஆசிய விளையாட்டில் களம் இறங்கிய இந்திய அணி இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றது. ஒடிசாவில் நடந்த உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி கால்இறுதியுடன் வெளியேறியது.

    இந்த நிலையில் ஆக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஹரேந்திர சிங் ஏற்கனவே இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சியின் கீழ் ஜூனியர் அணி 2016-ம் ஆண்டு உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதனால் மறுபடியும் அவர் ஜூனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்.

    சீனியர் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதையொட்டி, விண்ணப்பங்களை வரவேற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை இந்திய அணியின் மேற்பார்வையாளர்களாக உயர்செயல்பாட்டு இயக்குனர் டேவிட் ஜான் மற்றும் அணியின் பகுப்பாய்வு பயிற்சியாளர் கிறிஸ் சிரியலோ ஆகியோர் இருப்பார்கள் என்று ஆக்கி இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. #KapilDev #IndiaWomenCricket
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வருகிற 20-ந்தேதி மும்பையில் நடக்கிறது. சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளரை தேர்வும் செய்யும் பணியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்ததால், முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், இந்திய முன்னாள் வீராங்கனை ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள். தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா, இந்தியாவின் மனோஜ் பிரபாகர் உள்ளிட்டோர் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இடைக்கால பயிற்சியாளராக செயல் பட்டு சர்ச்சையில் சிக்கிய ரமேஷ் பவாரும் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். #KapilDev #IndiaWomenCricket
    வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். #IndianTeam #RaviShastri
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் (புதன்கிழமை) பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.

    அங்கு நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம், ‘தென்ஆப்பிரிக்கா (1-2) மற்றும் இங்கிலாந்தில் (1-4) டெஸ்ட் தொடரை தாரைவார்த்த நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியமானது’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது சற்று கோபித்துக் கொண்டார்.

    “வெளிநாட்டு தொடர்களில் இந்தியா மட்டுமே தோல்வி அடைவது போல் கேள்வி கேட்கிறீர்கள். சமீப காலமாக நடந்த வெளிநாட்டு தொடர்களை உற்று பார்த்தால், பெரும்பாலான அணிகள் வெளிநாட்டில் சோபிக்கவில்லை என்பது தெரியும். 1990-களில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. 2000-ம் ஆண்டு வரை அந்த அணி வெளிநாட்டிலும் வெற்றிகளை குவித்தது. அதே போல் தென்ஆப்பிரிக்காவும் சில ஆண்டுகள் அசத்தியது. இவ்விரு அணிகளையும் தவிர்த்து கடந்த 5-6 ஆண்டுகளில் எந்த அணி வெளிநாட்டில் சாதித்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம். பிறகு இந்தியாவை மட்டுமே ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள்?” என்றார்.

    மேலும் ரவிசாஸ்திரி கூறுகையில் ‘வெளிநாட்டு போட்டி தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் முக்கியமான தருணத்தில் கோட்டை விட்டோம். அது குறித்து அணி கூட்டத்தில் விரிவாக விவாதித்து இருக்கிறோம். இவ்விரு தொடரின் முடிவுகளும் உண்மையான தாக்கத்தை பிரதிபலிக்கவில்லை என்றே சொல்வேன். ஏனெனில் உண்மையிலேயே சில போட்டிகள் நீயா-நானா? என்று கடும் நெருக்கமாக நகர்ந்தது. சில முக்கிய கட்டத்தில் தடுமாறியதால் தொடரை இழக்க வேண்டியதாகி விட்டது’ என்றார்.

    ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி விட்டதா? என்ற இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த சாஸ்திரி, ‘நான் அப்படி நினைக்கவில்லை. உள்ளூரில் எந்த அணியும் வலு குறைந்தது கிடையாது என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வரும் போது 3-4 வீரர்கள் விளையாட முடியாமல் போவது உண்டு. ஆனாலும் யாரும் இந்தியா பலவீனமான அணி என்று சொன்னது இல்லை. மற்றவர்களின் கருத்து குறித்து எனக்கு கவலை இல்லை. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நன்றாக செயல்பட்டால், எந்த அணிக்கு எதிராக ஆடுகிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல’ என்றார்.

    இந்திய பந்து வீச்சு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, ‘கடந்த காலங்களில் நாங்கள் பார்த்தது போலவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இருக்கும் பட்சத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பவுலிங் செய்வார்கள். ஒரு அணியாக அனைவரும் உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (காயத்தால் அவதிப்படுகிறார்) இல்லாதது உண்மையிலேயே பின்னடைவு தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவர் இருந்தால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்துக் கொள்ள முடியும். இப்போது இரண்டு விதமாக யோசிக்க வேண்டி உள்ளது. அவர் விரைவில் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று நம்புகிறேன். அதே சமயம் இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஜொலித்தால், ஹர்திக் பாண்ட்யா இல்லாத குறை பெரிய அளவில் தெரியாது.’ என்றார்.
    ஆசிய விளையாட்டில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளருக்கு ரூ.1¼ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGame #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2-வது கட்டமாக மேலும் சில வீரர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டில் கலப்பு தொடர் ஓட்டம் மற்றும் ஆண்கள் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கங்கள் கைப்பற்றிய ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.60 லட்சம், பெண்களுக்கான ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுனைனா குருவில்லாவுக்கு ரூ.30 லட்சம், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம், மேலும் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களான அஞ்சன் சின்னப்பா, டிம்பிள் மதிவாணன் மற்றும் அமிஷ்வேத் ஆகியோருக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #INDvENG #RaviShastri
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    இங்கிலாந்துடன் மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 5 டெஸ்டில் ஆடியது. இதில் 20 ஓவர் தொடரை மட்டும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. டெஸ்ட் தொடரில் விராட் கோலி அபாரமாக விளையாடியும் பலன் இல்லாமல் போனது.

    இந்திய அணி 3-வது டெஸ்டில் மட்டும் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன் வித்தியாசத்திலும், 5-வது டெஸ்டில் 118 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்று இருந்தது.


    இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட இந்த தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. குறிப்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். பயிற்சியாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் அணி நிர்வாகம் நேரில் ஆஜராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) நிர்வாகிக்கும் குழு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதோடு அறிக்கை ஒன்றையும் சமர்பித்தார்.

    வினோத்ராய் தலைமையிலான நிர்வாக குழுவை ரவிசாஸ்திரி ஆசிய கோப்பை போட்டிக்கு புறப்படும் முன்பு சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தோல்விக்கு ரவி சாஸ்திரி கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ‘டாஸ்’ போடுவதில் விராட் கோலி தவறான முடிவு எடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

    ‘டாசில்’ தோற்றதால் தோல்வி அடைந்தோம் என்று ரவிசாஸ்திரி நிர்வாக குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று அவரிடம் நிர்வாக குழு தெரிவித்தது.

    ஆஸ்திரேலிய பயணத்தில் அதிகமான பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி அப்போது கேட்டுக் கொண்டார்.

    அணி நிர்வாகத்தை பலப்படுத்துவது குறித்து நிர்வாக குழு ஆலோசித்தது. இதை தொடர்ந்து இந்திய அணிக்கு விரைவில் சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார். #INDvENG #RaviShastri
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக கிரிக்கெட் வாரியம் வழங்கி உள்ளது. #RaviShastri

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ.பி.சி. என பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.

    கேப்டன் விராட்கோலிக்கு தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயண ஊதியம், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கான ஊக்க தொகை என ரூ.1.25 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், தவானுக்கு ரூ.2.8 கோடியும், ரோகித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு அதிகபட்சமாக ரூ.3.73 கோடி தரப்பட்டு இருக்கிறது.

    இதேபோல பும்ராவுக்கு ரூ.1.73 கோடி, அஸ்வினுக்கு ரூ.2.7 கோடி, இஷாந்த்சர்மாவுக்கு ரூ.1.33, பாண்ட்யாவுக்கு ரூ.1.1 கோடி, சகாலுக்கு ரூ.1.1 கோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த தகவலை கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். #RaviShastri

    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியதால் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #ENGvIND
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. எந்தவித போராட்டமும் இல்லாமல் இந்திய வீரர்கள் ‘சரண்டர்’ ஆனதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

    முன்னாள் வீரர்கள் இந்திய அணி மீது கடுமையாக பாய்ந்தனர். இதேபோல ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    மோசமான தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.


    இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் முன்பு ரவிசாஸ்திரியும், கோலியும் “எந்த களத்தையும், எந்த அணியையும் சந்திப்போம். தயக்கம் இல்லை” என்று தெரிவித்து இருந்தனர்.

    தற்போது ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். “தங்கள் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்க வேண்டாம். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

    ஆனால் இதுவரை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எந்தவிதமான விளக்கம் அளிக்கவில்லை.

    இதற்கு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அணியின் ஒட்டு மொத்த தோல்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பேற்று காரணத்தை தெரிவிக்க வேண்டும். முன்பு வார்த்தைகளை கொட்டினீர்கள். இப்போது வாய்திறங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் ஆதரங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.


    துருவ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம். உடற்தகுதியை வைத்து போட்டிகளில் வெற்றி பெற இயலாது. அதிகமான பயிற்சி ஆட்டம் அல்லது கவுண்டி போட்டியில் விளையாட வேண்டும். தவான், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக ரி‌ஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர், கருண்நாயரை அணிக்கு கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமித் என்பவர் கூறும்போது, எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிக்கு ராகுல் டிராவிட்டை கிரிக்கெட் வாரியம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    அனுராக் என்ற ரசிகர், “இந்திய அணியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ரவிசாஸ்திரிக்கு தெரியவில்லை. இதனால் டிராவிட்டை பயிற்சியாளராக நியமியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

    மற்றொரு ரசிகர், “ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருப்பது அணிக்கு பேரழிவு. இதனால் அவரை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

    ருத்ரகேஷ் என்பவர் கூறுகையில், “ரவிசாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணையும் நீக்க இதுவே சரியான நேரம். டிராவிட்டை பேட்டிங் பயிற்சியளாராகவும், ஜாகீர்கானை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இதேபோல ரவிசாஸ்திரிக்கு எதிராக ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  #ENGvIND #RahulDravid #RaviShastri #HeadCoach #TeamIndia #BCCI
    இந்திய பெண்கள் அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ரமேஷ் பவார் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். #RameshPowar #WomenCricketTeam
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு துஷ்கர் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

    பரோடா முன்னாள் ஆல்ரவுண்டரான அவர் மீது சீனியர் வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். அவரது பயிற்சி முறை சரியில்லை என்று குற்றம்சாட்டி இருந்தன. இதைதொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சரியான பயிற்சியாளர் அமையும் வரை அவரே அந்த பொறுப்பில் தொடர்வார். #RameshPowar #WomenCricketTeam
    கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பயிற்சியாளருக்கு 13 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #Kovai
    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரி பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதுமட்டுமன்றி, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், பயிற்சியாளருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக்கூறி அவர் ஒரு போலி பயிற்சியாளர் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்காக அவர் 2.5 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியபிறகு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kovai
    மாணவி மரணம் விவகாரத்தில் பயிற்சியாளர் மெத்தனமாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #mkstalin #coimbatorecollegestudent
    சென்னை: 

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை அருகே தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின்போது, மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 

    மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உடன் பயிலும் மாணவிகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துகொள்கிறேன். பேரிடர் பயிற்சியை மாணவ–மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனை அளிக்கிறது. 

    குறிப்பாக இரண்டாவது மாடியில் இருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற பேரிடர் பயிற்சிகள் போதிய பாதுகாப்புகளுடன் நடைபெறவும், பேரிடர் பயிற்சி, நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக்கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத்துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.  #mkstalin #coimbatorecollegestudent
    ×