என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100148"
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, கஸ்கான் (வயது 7) என்கிற சிறுவனை அழைத்து, சக மாணவர்கள் முன்பு நின்று பாடத்தை படிக்கும்படி கூறினார். ஆனால் சிறுவன் பாடத்தை படிக்காமல் நின்றுகொண்டிருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே இருந்து புல், பூண்டுகளை எடுத்து வந்து, கட்டாயப்படுத்தி சிறுவனை தின்ன வைத்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், சிறுவனின் பெற்றோர், ஆசிரியர் தங்களது உறவுக்காரர் என்றும், இதை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்றும் கூறிவிட்டனர். ஆனாலும் இந்த விவகாரம் மாவட்ட போலீஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பதேபூர் போலீசார் ஹமீத் ராசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர்கல்வியை நிர்ணயிப்பதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஒரு மதிப்பெண்ணால் சிறந்த கல்லூரியையும், படிப்பையும் கூட கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் தலைவிதியை ஒவ்வொரு மதிப்பெண்களும் நிர்ணயிப்பதால் எதிர்பார்த்த மார்க் கிடைக்காத மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக ஆசிரியர்கள் செயல்படுவதால் மாணவர்களின் வாழ்க்கை திசை திரும்பி போய் விடுகிறது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண் அளித்ததை ஒவ்வொரு பக்கம் வாரியாக கூட்டல் செய்யும்போது தவறு ஏற்படுகிறது.
அதே போல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்தபோதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 பேர் ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை இணை இயக்குனர்கள் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
500 ஆசிரியர்களுக்கும் மேலாக தவறு குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-
மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வருகிறது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் தான் நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அவர்களின் பட்டியலை கொடுத்து விடுவோம்.
தலைமை கண்காணிப்பாளர், எஸ்.ஒ, வி.ஒ உள்பட 4 பேர் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு பொறுப்பாளர்கள். அவர்களை மீறி தவறு நடந்திருக்காது என்றால் அதற்கு அவர்களும் பொறுப்பாவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் மதிப்பெண் தவறுக்கு காரணமாக உள்ள ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.
பழனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக உள்ளார். இவரது மனைவி கிரிஜா மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கிரிஜா மணி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து ராஜா தனியாக வசித்து வந்தார். தனது கணவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதும் அவர் இணைப்பை துண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளுடன் கணவரின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிரிஜா மணி கூறியதாவது:-
நெய்வேலியைச் சேர்ந்த எனக்கும் ராஜாவுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 3 மாதமாக எவ்வித காரணமும் கூறாமல் என்னையும் என் குழந்தைகளையும் விட்டு விட்டு ராஜா அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அவரது பெற்றோர் பேச்சை கேட்டு எங்களை பார்க்க வர மறுக்கிறார். தனியார் பள்ளியில் பணிபுரியும் நான் குறைந்த வருமானத்தை வைத்து குழந்தைகளை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.
எனவே எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர் அங்கிருந்து சென்றார்.
பாளையில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மாணவிகள் அனைவரும் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். தினமும் தேர்வுக்காக படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவிகள் சிலர் படிக்கும் வேளையில் தங்கள் செல்போனில் டிக்-டாக் ஆப் மூலம் ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்து வீடியோ எடுத்தனர்.
ஆசிரியர்களை மறைமுகமாக வீடியோ எடுத்து அதை சினிமா வசனங்களுக்கு ஏற்றவாறு டிக்-டாக் செய்து வெளியிட்டார்கள். இந்த வீடியோக்கள் சக மாணவிகளிடையே பரவியது. அவர்கள் வாட்ஸ்-அப்பில் மற்ற மாணவிகளுக்கும் பரப்பினர். தொடர்ந்து இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனிடையே இந்த விவரம் ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி கூறினர்.
பள்ளி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தியபோது, 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவிகள் 17 பேர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கையாக 17 மாணவிகளையும் வீட்டில் இருந்து தேர்வுக்கு படிக்குமாறு பள்ளி நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர் நிர்வாகத்தினரிடம் இதுபற்றி கேட்டனர். அதற்கு மாணவிகளை தேர்வு எழுத தடை செய்யவில்லை.
பள்ளியில் இருந்து தேர்வுக்கு படிக்க தடை விதித்துள்ளோம் என்றனர். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்," தற்போது தேர்வு நேரம் என்பதால் பல பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு படிப்பதற்காக விடுமுறை அளித்துள்ளார்கள். பாளை பள்ளியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. மாணவர்கள் யாரையும் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தடை செய்ததாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றனர். #TikTok
மத்திய பிரதேசம் மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் என்பவர் பாடம் சொல்லி கொடுக்க சென்றார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டு தப்பி சென்றார். படுகாயத்துடன் சிறுமி மயங்கிய நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்தாள்.
பின்னர் சிறுமியை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மத்திய பிரதேச அரசு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தது. அங்கு சிறுமிக்கு பல ஆபரேசன் செய்யப்பட்டது.
தப்பி ஓடிய ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் மகேந்திர சிங் கோன்ட்டுக்கு தூக்கு தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மகேந்திரசிங் கோன்ட் அப்பீல் செய்தார். இதை விசாரித்த மத்திய பிரதேச ஐகோர்ட்டு, ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அவரை வருகிற மார்ச் 2-ந்தேதி ஜாபல்பூர் சிறையில் தூக்கில் போட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
அந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்கு தண்டனை இதுவாகும்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை என்றால் மார்ச் 2-ந்தேதி தூக்கில் போடப்படுவார். அப்படி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் புதிய சட்டத்தின் கீழ் முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றம் இதுவாக இருக்கும் என்றனர். #MahendraSinghGond #JabalpurCentralJail
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பராமரிப்பு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003-ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக 10 சதவீதம் தொகையை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டப்படி இந்தத் தொகைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்காத நிலையில் இந்த நிதி தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது.
இந்த நிதி அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டி வீதத்தின்படி வட்டியைக் கணக்கிட்டு, அத்தொகைக்கும் கருவூல பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசே பொறுப்பேற்று அதை கருவூல பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டியுடன் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது.
அந்தவகையில் அரசு 2017-18-ம் ஆண்டு வரை ரூ.2,115.47 கோடி கூடுதல் வட்டியை வழங்கியுள்ளது. இந்த நிதியில் உரியவாறு ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா? என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த நிதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8,283.97 கோடியுடன் அரசின் பங்களிப்பாகப் பெறப்பட்ட ரூ.8,283.97 கோடியும், பெறப்பட்ட வட்டியாக ரூ.5,252.90 கோடியும் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டிலும் பெறப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு?, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு? என்பதை முறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/pub-l-ic இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி தனி பொதுக்கணக்கு வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன் அதற்கான வட்டி, சேமநல நிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டி அளவான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று 2-வது நாளாக மறியல் செய்தனர்.
திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அங்கிருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் நோக்கி வந்தனர். எம்.ஜி.ஆர். சிலை முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி கோஷம் போட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். பெண்கள் உள்பட 4 ஆயிரம் பேரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதே போல் தேனி நேரு சிலை முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலுக்கு முயன்றனர். சுமார் 2, 500 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்துவார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அவர் விமர்சித்தது டுவிட்டரில் பரபரப்பாகி உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 21 மாத நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதில் 8 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள், அரசுப்பள்ளிகளில் பணிகள் முடங்கியுள்ளன.
இதுகுறித்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, ’தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலை பளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம், பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம். வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம், அரசு விருதுகள், பயணத்தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர், வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்கு பணம், இப்படி அரசு கல்வித்துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.
ஒண்ணாம் கிளாஸ் வாத்தியாருக்கு டைடல் பார்க்கில் வேலை செய்யும் பொறியாளரை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
கஸ்தூரியின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல்வாதிகளையும் கார்ப்பரேட் கொள்ளையர்களையும் கேள்வி கேட்க முடியாதவர் என்று கஸ்தூரியை விமர்சித்து வருகிறார்கள். கஸ்தூரியின் கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். #Kasthuri
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரெயில் நிலையம் ரோட்டில் ராமகிருஷ்ணா அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வணிகவியல் ஆசிரியரை ஏளனம் செய்தும், நாற்காலியை இழுத்து போட்டு அவரை உட்கார விடாமல் தரக்குறைவான முறையில் நடந்து கொண்டு ராக்கிங் செய்து அந்த வீடியோக்களை டிக்டாக் எனப்படும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்த வீடியோ பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் சிவா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களிடம் நடந்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேசி மாணவர்களின் ஒழுங்கீன தன்மையை எடுத்துக்காட்டினர்.
ஏற்கனவே அந்த பள்ளி தலைமை ஆசிரியர் பாபு என்பவரை கத்தியால் குத்திய மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் சேர்ந்து ரகளையில் ஈடுபட்டு ஆசிரியர்களை அவதூறாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து 6 மாணவர்களை பள்ளியிலிருந்து சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் சிவா உத்தரவிட்டார்.
மேலும் அவர்களை தேர்வு நேரத்தின் போது மட்டும் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவும் பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tiktok
சென்னை:
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இது தான் இயற்கை நீதியாகும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.
இதைக் கண்டித்து 24-ந்தேதி மாலை முதல் பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர். தமிழக அரசோ அவர்களை கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் திடலில் அடைத்தது. அங்கும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் நேற்றிரவு அவர்களை அங்கிருந்து காவல்துறை மூலம் விரட்டியடித்தது.
அதைத்தொடர்ந்து நேற்றிரவு முதல் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உண்ணாநிலை மேற்கொண்டிருந்த ஆசிரியர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அரசு மனம் இறங்கவில்லை.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த காலங்களில் ஏராளமான போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போதும் ஏராளமானோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மட்டும் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
2009-ம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதால் அவர்களின் ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை பரிந்துரைத்தது. ஆனால், அதையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், மே மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே குறைந்தபட்சம் ரூ.15,500 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களிடையே இவ்வளவு ஊதிய ஏற்றத் தாழ்வு இருப்பது மிகப் பெரிய அநீதி. இதை களைய வேண்டியது அரசின் கடமை. எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை முதல்- அமைச்சர் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #AnbumaniRamadoss
திருவண்ணாமலை அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள காப்பகத்தில் தங்கியுள்ள 15 வயது சிறுமி, அதே கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் சவுந்தர்ராஜன் (38) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் மாணவியை பள்ளியிலேயே கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், இந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது. அதையும் மீறி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மற்றும் ஆங்கில பாடத்துக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவதாக ஆசிரியர் சவுந்தர்ராஜன் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஆசிரியர் சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை மற்றும் மருத்துவ ஆய்வறிக்கை மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சவுந்தர்ராஜனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் அவர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்