search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shobia"

    சிதம்பரம் அருகே வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்த ஷோபியாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷோபியா (வயது 32) பி.ஏ. பட்டதாரி. இவர் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறினார். பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 74 பேரிடம் ரூ. 3 கோடிக்கு மேல் வசூலித்தார். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டார். இவருக்கு உடந்தையாக இவரது தாய் ஆரோக்கியசெல்வி மற்றும் கடலூரில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

    இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் செம்மண்டலத்தில் தலைமறைவாக இருந்த ஷோபியாவை கைது செய்தனர். மேலும் ஆரோக்கியசெல்வி, ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஷோபியா மீது சின்னசேலம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்த லூர்துமேரி (வயது 50) என்பவர் ஒரு புகார் மனு அளித்தார்.

    அதில் எனது மகள், உறவினர் மற்றும் நண்பர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 4 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் ரூ.25 லட்சத்தை ஷோபியா வாங்கினார். அதற்கு போலி உத்தரவு நகலை கொடுத்தார். அப்போது நாங்கள் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. நாங்கள் கொடுத்த பணத்தை ஷோபியாவிடம் கேட்டபோது எங்களை ரவுடிகளை வைத்து மிரட்டினார். ஷோபியாவிடம் இருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    அதன்பேரில் ஷோபியா மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஷோபியா மீது பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் வேறு யாரிடமாவது இது போன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஷோபியா பண மோசடியில் ஈடுபட்டாரா என்பதை கண்டறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×