search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security provided"

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

    நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் முத்துமணி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் லூர்துமணி ஆகியோர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.

    இது தொடர்பாக நடந்த வன்முறையில் தனியார் பள்ளி வளாகத்தில் சில சமூகவிரோதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு பொதுசொத்துக்களை அடித்து சூறையாடி உள்ளனர். இது போன்ற சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளியின் சொத்துக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    நெல்லை பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசிபாலா தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாச்சலபதி என்ற குட்டி ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்வின் போது சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கேள்வித்தாளை முன்னரே ஆய்வு செய்யாமல் கடமையை செய்ய தவறிவிட்டனர்.

    எனவே கடமையை செய்யாத துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், வணிகவியல்துறை தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிவ பக்தர் ஒருவரும் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தார்.

    மேம்பாலம்

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கொடுத்த மனுவில், நெல்லையில் 1999-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது 17 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    அவர்களின் நினைவாக கொக்கிரகுளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு மாஞ்சோலை போராளிகள் நினைவு பாலம் என பெயரிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    கருங்குளத்தை சேர்ந்த முதியவர் கணேசன் என்பவர் கொடுத்த மனுவில், எனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்யுமாறு பலமுறை தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையை சேர்ந்த மைக்கேல்ராஜ் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    மேலும் பள்ளிகள், இந்து ஆலயம் உள்ளது. தற்போது எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதனை கைவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    ×