search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathankulam Custodial Death"

    சாத்தான்குளம் இரட்டைகொலை வழக்கில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து படுகாயங்களுடன் ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு நேற்று மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் கிருபை கிரேனாப் என்பவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. பகல் 12 மணியளவில் தொடங்கிய இந்த வழக்கு விசாரணை மாலை 5 மணி வரை நடந்தது.

    பின்னர் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் கிருபை கிரேனாப் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரையும் படுகாயங்களுடன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர்களுக்கு மருந்து செலுத்துவதற்காக ஊசியுடன் அவர்களிடம் சென்றேன்.

    இருவரின் இடுப்பு பகுதியிலும் கடுமையான காயங்கள் இருந்தை பார்த்தேன் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பினர் செவிலியர் கிருபையிடம், உடனடியாக இதுபற்றி டாக்டரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கிருபை, இவர்களைப்போல சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து ஏராளமானவர்கள் தங்களின் உடல்களில் கடுமையான காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் அருகிலும் போலீசார் நின்று கொண்டு இருந்தனர். இதனால் இதுபற்றி நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

    அடுத்த விசாரணையின்போது, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மாஜிஸ்திரேட்டுவிடம் கொடுத்தது தொடர்பாக கேமரா தொழில்நுட்ப பணியாளர் இன்பன்ட் அந்தோணி, வருகிற 19-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். இவர் தான் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து கொடுத்துள்ளார்.

    இவ்வாறு வக்கீல் தெரிவித்தார்.
    ×