search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "santhosh பாராளுமன்ற தேர்தல்"

    பாராளுமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவின் சந்தோஷ் கங்வார் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற பா.ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று இரவு பிரதமராக பதவி ஏற்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி சில நாட்களில் நடக்க உள்ளது. அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்படுவார்.

    தற்காலிக சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக பாராளுமன்றம் அல்லது மேல் சபையில் மூத்த எம்.பி.க்கள், அதிக முறை எம்.பி.யாக இருந்தவர்கள் ஆகியோரின் பட்டியல்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்களை தவிர மற்ற எம்.பி.க்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

    இதில் தேர்வு செய்யப்படும் நபரை ஜனாதிபதி பாராளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமிப்பார்.


    பாராளுமன்றத்துக்கு அதிக முறை தேர்வானவரை தற்காலிக சபாநாயகராக நியமிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி பா.ஜனதாவின் சந்தோஷ் கங்வார் தற்காலிக சபாநாயகராக நியக்கப்படுவார் என்று தெரிகிறது.

    கடந்த மோடி அமைச்சரவையில் மந்திரியாக இருந்த சந்தோஷ் கங்வார் 8-வது முறையாக பாராளுமன்றத்துக்கு தேர்வாகி உள்ளார். இதேபோல் பா.ஜனதாவை சேர்ந்த மேனகாகாந்தியும் 8-வது முறையாக பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருக்கிறார்.

    ஆனால், தற்காலிக சபாநாயகர் பதவிக்கு சந்தோஷ் கங்வாருக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே சந்தோஷ் கங்வார் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சபாநாயகராக நியமிக்கப்பட்டால் வேறு ஒருவர் தற்காலிகமாக சபாநாயகராக நியமிக்கப்படுவார்.

    கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்) வீரேந்தர் குமார் (பா.ஜனதா) மூலாயம் சிங்யாதவ் (சமாஜ்வாடி), மோகன்பாய் டெல்கர் (சுயேச்சை) ஆகியோர் 7-வது முறையாக எம்.பி.க்களாக தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் தற்காலிக சபாநாயகர் பதவி பட்டியலில் உள்ளது.

    அதிகமுறை எம்.பி. பட்டியலில் பலர் சமமாக இருந்தால் அதிக ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தவரின் பெயர் தற்காலிக சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
    ×