search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salt"

    இந்தியர்கள் அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்த நோயில் சிக்கி தவிப்பதும், மேலும் இருதய ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. #Salt #BloodPressure
    புதுடெல்லி:

    இந்தியர்களுக்கு உணவில் அதிக அளவில் உப்பு சேர்க்கும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

    இது தொடர்பாக இந்திய சுகாதார அமைப்பு என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. டெல்லி, அரியானா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது.

    அதில், இந்தியர்கள் அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்த நோயில் சிக்கி தவிப்பதும், மேலும் இருதய ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

    மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியர்கள்தான் அதிக அளவில் உப்பு சேர்க்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் உணவில் எவ்வளவு உப்பு சேர்த்து கொள்ளலாம் என்று வரம்பு நிர்ணயித்துள்ளதோ அதை விட இந்தியர்கள் அதிகமாக உப்பு சேர்த்து கொள்கிறார்கள்.

    இந்தியர்கள் வீட்டில் தயாரித்து உண்ணும் உணவை விட அவர்கள் வாங்கி சாப்பிடும் உணவுகள் மற்றும் தின்பண்டங்களில் அதிக உப்பு கலந்திருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இந்தியாவை பொறுத்த வரை அரசு கட்டுப்பாட்டுக்குள் வரும் உணவு உற்பத்தி நிறுவனங்களை விட எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் வராத சிறு நிறுவனங்கள் மூலம் உணவு பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரித்து விற்பதே அதிகமாக உள்ளது.


    அந்த நிறுவனங்களை அரசு அமைப்புகள் கட்டுப்படுத்த முடிவதில்லை. இது போன்ற நிறுவனங்கள் தான் தனது உணவு பொருளில் அதிக அளவில் உப்பு கலந்து விற்கின்றன.

    இதுபற்றி அந்த நிறுவனங்களிடம் கேட்ட போது, எங்கள் உணவு பொருட்களில் உப்பு குறைவாக இருந்தால் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்குவது குறைகிறது. எனவே, அதிக உப்பு சேர்க்கிறோம் என்று கூறுகின்றனர்.

    குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் தான் உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் இதய ரத்தக்குழாய் நோய் அதிகமாக உள்ளது. இந்தியா நடுத்தர வருவாய் கொண்ட நாடாக உள்ளது. எனவே, இந்தியர்களையும் இந்த நோய்கள் அதிகமாக தாக்குகின்றன.

    இந்தியாவை பொறுத்த வரையில் 61 சதவீத உயிரிழப்புகள் தொற்று நோய் அல்லாத இதய நோய், இதய ரத்தக்குழாய் நோய், நீரிழிவு, புற்று நோய் போன்றவற்றால் ஏற்படுகிறது.

    உப்பு சேர்ப்பதால் ஏற்படும் ரத்த அழுத்தத்தால் இதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உப்பு, இந்தியர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது.

    அது மட்டும் அல்லாமல், கருவில் இருக்கும் குழந்தைகளையும் இந்த நோய்கள் பாதிக்கின்றன. இதனால் பிறக்கும் முன்பே உயிர் இழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. #Salt #BloodPressure
    ×