search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reformation"

    • அம்மனுக்கு உரல் உலக்கை சத்தம் பிடிக்காத காரணத்தினால் அம்மன் கோபித்துக்கொண்டு வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டதாக ஐதீகம்.
    • திருவிழா முடிந்த பின்பு மீண்டும் அம்மனை பெட்டியில் வைத்து சீர்வரிசை தட்டுகளுடன் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து சென்று வைத்து விடுவது வழக்கம்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே புனவாசல் கிராமத்தில் வடகட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். 2 வருடங்கள் கொரோனா தொற்றின் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு ஒரு மாதம் கடந்து இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த வடகட்டளை மாரியம்மன் கோவிலில் அம்மனை வருடத்திற்கு ஒரு முறை தலையில் சுமந்து எடுத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த கோவிலில் இருந்த அம்மனுக்கு உரல் உலக்கை சத்தம் பிடிக்காத காரணத்தினால் இந்த அம்மன் கோபித்து க்கொண்டு வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்றுவிட்டதாக ஐதீகம். இதன் காரணமாக வருடத்திற்கு ஒருமுறை ஐம்பொன்னாலான ஒன்றரை அடி நீளமுள்ள இந்த வட கட்டளை மாரியம்மன் சிலையை வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இருந்து மரப்பெட்டியில் வைத்து மாலை அணிவித்து தலையில் சுமந்தபடி 8 கிலோமீட்டர் தூரம் குறுக்குவழியில் புனவாசல் கிராம மக்கள் இந்த அம்மனை எடுத்து வருவது வழக்கம்.

    இந்த வட கட்டளை மாரியம்மனின் பிறந்த ஊர் புனவாசல் என்று கருதப்படுவதால் கிராம மக்கள் மணப்பெண்ணுக்கு சீர்வரிசை எடுத்து வருவது போன்று பூ, பழம், தேங்காய் என சீர்வரிசை தட்டுகளுடன் இந்த அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்து வடகட்டளை மாரியம்மன் ஆலயத்தில் வைத்து 10 நாட்கள் திருவிழா நடத்துகின்றனர்.இந்த வருடம் மேட்டூர் அணையில் தண்ணீர் முன்கூட்டியே திறக்கப்பட்ட காரணத்தினால் அம்மனை கார் மூலம் எடுத்து வந்து ஊர் எல்லையில் இருந்து ஊர்வலமாக தலையில் சுமந்து வந்தனர்.10 நாட்கள் திருவிழா முடிந்த பின்பு மீண்டும் அம்மனை பெட்டியில் வைத்து சீர்வரிசை தட்டுகளுடன் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து சென்று வைத்து விடுவது வழக்கம்.

    இந்த திருவிழாவில் புனவாசல் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தலையில் சுமந்து வந்து வழிபாடு நடத்தினர். திருவிழா முடிந்தபின் மீண்டும் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்று விடுவதால் அடுத்த ஒரு வருடம் வரை புனவாசல் வடகட்டளை மாரியம்மன் கோவில் அம்மன் இல்லாத கோவிலாக இருக்கும்.மீண்டும் அடுத்த வருடம் இதே போன்று விழா நடத்தப்படும் என்றும் அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். இந்த வினோதமான திருவிழாவை காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×