search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramayana Yatra Express"

    ராமாயண நிகழ்விடங்களுக்கு செல்லும் வகையில் ராமாயண யாத்திரை என்ற சிறப்பு சுற்றுலா ரெயிலை ரெயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரெயில் நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் சென்னை வழியாக இயக்கப்படுகிறது. #RamayanaYatra
    புதுடெல்லி:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது ராமாயண யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



    அதாவது ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு பயணிகளை அழைத்து சென்று காண்பிப்பதே இந்த சுற்றுலாவின் நோக்கம் ஆகும். மத்தியபிரதேசத்தில் உள்ள சித்திரகுட், உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்ரீவெங்வெர்புர், துளசிமான்ஸ் மந்திர், அயோத்தி, பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மார்கி (சீதை பிறந்த இடம்), தார்பங்கா, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு இந்த சுற்றுலா ரெயில் செல்கிறது.

    இந்த சிறப்பு ரெயில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேளியில் இருந்து வருகிற 31-ந் தேதி புறப்படுகிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு நெல்லையிலும், காலை 6.35 மணிக்கு மதுரையிலும், 9.45 மணிக்கு திருச்சியிலும், மாலை 4 மணிக்கு சென்னை எழும்பூரிலும் பயணிகள் ஏறுவதற்காக நின்று செல்லும்.

    இந்த ராமாயண யாத்திரை வருகிற செப்டம்பர் மாதம் 11-ந் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. இதில் பயணிப்பதற்கு டீலக்ஸ், கம்போர்ட், ஸ்டேண்டர்டு ஆகிய 3 நிலைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதன்படி ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.39 ஆயிரத்து 350-ல் இருந்து, அதிகபட்சம் ரூ.60 ஆயிரத்து 750 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவு, தண்ணீர், பஸ் பயணம் அனைத்தும் இதில் அடங்கும். குழந்தைகளுக்கு கட்டண சலுகையும் உண்டு.

    இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு சென்னை, மதுரை, பெங்களூரு, மைசூரு, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ரெயில்நிலையங்களின் சுற்றுலா பிரிவையோ அல்லது www.irctctourism.com என்ற இணையதள முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவு மேலாளர் எல்.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.  #RamayanaYatra
    ×