search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pochampalli worker murder"

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தந்தையை கொன்று தற்கொலை நாடகமாடிய தாயின் நடிப்பை மகன்கள் அம்பலப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோனியா (25). இவர்களுக்கு ஜீவா (7), ஹரி (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு ராஜலிங்கம் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக சோனியா கூறினார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சோனியாவின் மகன்கள் ஜீவா, ஹரி ஆகிய 2 பேரும் தாயின் நாடகத்தை அம்பலப்படுத்தினர். தனது தாயும், சிலரும் சேர்ந்து தந்தையை அடித்து கழுத்தை நெரித்ததாக கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது பாணியில் சோனியாவிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தனக்கும், தனது தங்கை சோபனாவின் கணவர் சிவக்குமாருக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு கணவருக்கு தெரிந்ததால் அவர் தன்னை கண்டித்ததாகவும் இதனால் சிவக்குமார் மற்றும் அவரது கடை ஊழியர்கள் துணையோடு கணவரை கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சோனியாவை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து ராஜலிங்கத்தை கொன்ற மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களின் விவரம் வருமாறு:-

    1. அஜீத் (19) திருவண்ணாமலை அருகே உள்ள பசும்கரை பழைய காலனியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன்.

    2. காளிமுத்து (19) திருவண்ணாமலை சீனாத்தூர் காலனியை சேர்ந்த சகாதேவன் என்பவரின் மகன். இவர் திருவண்ணாமலையில் உள்ள பிரபல என்ஜீனியரிங் கல்லூரி ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    3. பாலாஜி (20) திருவண்ணாமலை வேலங்கல் காலனியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன்.

    4. சிவக்குமார் (39) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த எம்.ஜி.அள்ளி பகுதியை சேர்ந்தவர்.

    கைதான சிவக்குமார், சோனியாவின் தங்கை சோபனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சோபனாவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூரை சேர்ந்த பாண்டித்துரை என்பவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை இருந்தது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை விட்டு விவாகரத்து பெற்று வந்துவிட்டார். போச்சம்பள்ளியில் வசித்தபோது சிவக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சோபனாவும், சிவக்குமாரும் அடிக்கடி சோனியா வீட்டுக்கு சென்றபோது சோனியாவுடன் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமே கொலை வரை சென்றுள்ளது.

    சிவக்குமாருடன் கைதான மற்ற 3 பேரும் திருவண்ணாமலையில் அவர் வைத்துள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் பந்தல்கள் போடும் அடார்னஸ் கடையில் வேலை பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜலிங்கம் கொலையில் கைதான அவரது மனைவி சோனியா உள்பட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். மேலும் ராஜலிங்கத்தை வி‌ஷ ஊசி போட்டு கொன்றதாக சோனியா கூறி இருந்தார்.

    ஆனால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ராஜலிங்கம் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அவர் கழுத்து நெரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் இறந்ததாக கூறி உள்ளார். உடலில் ஊசி போட்டதற்கான அறிகுறியும், வயிற்றில் பூச்சி மருந்தும் இல்லை என்று கூறி உள்ளார்.
    ×