search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Physical Barrier"

    மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக பார்க்க வேண்டும் என அமெரிக்க மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார்.
     
    இதற்காக உள்நாட்டு நிதியில் இருந்து 500 கோடி டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தை அவர் வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால். மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது. மேலும், அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளது.

    இதனால், உள்நாட்டு அரசு செலவினங்களுக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட செலவின மசோதா  செனட் சபையில் எதிர்க்கட்சியான  ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற தவறியதால் நிறைவேற முடியாமல் போனது.

    இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.

    மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் சமரசம் ஏற்படாததால் இரு வாரங்களுக்கும் மேலாக அரசு துறைகள் முடக்கம் நீடிக்கிறது.

    இந்நிலையில், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சியின் பலம் கூடியது. மேலும் பிரதிநிதிகள் சபை  தலைவராக ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிலுவையில் உள்ள இரு செலவின மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அந்த இரு மசோதாக்களிலும் மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. அந்த மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேறியது.



    இருப்பினும், தற்போது செனட் சபையில் குடியரசு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம் என தெரிகிறது. ஒருவேளை செனட் சபையிலும் அந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அவை அனுப்பிவைக்கப்படும்.

    அமெரிக்க-மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு நிதி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ஏற்கமாட்டேன் என ஏற்கனவே டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    எனவே, இந்த செலவின மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேறினாலும் தனக்குரிய சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் அவற்றை ரத்து செய்துவிடுவார் என தெரிகிறது. இதனால் அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருவது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    இதற்கிடையில், எல்லைப்பகுதியில் இரும்பிலான தடுப்பு வேலி அமைக்கலாம். இரும்பு தடுப்புகள் பலமானதாகவும் இருக்கும் என்று நேற்று தெரிவித்தார். இதற்கு 570 கோடி டாலர்கள் வரை செலவாகும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், தனது நிலைப்பாட்டை மக்கள் மன்றத்தில் முன்வைக்க டிரம்ப் தீர்மானித்தார். அதிபராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அவரது அலுவலகத்தில் இருந்தவாறு தொலைக்காட்சி வழியாக நேற்று அவர் மக்களிடையே உரையாற்றினார்.

    அமெரிக்கா-மெக்சிகோ இடையே பலமான எல்லைச்சுவர்  இல்லாததால் இங்கு குடியேறவரும் மக்கள் வழியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள்படும் வேதனையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இதை மனிதாபிமான நெருக்கடியாக நாம் கருத வேண்டும். எல்லைச்சுவர் ஒன்றினால் மட்டுமே இந்த பிரச்சனையை களைய முடியும். எனவே, இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான முக்கிய பிரச்சனையாக இதை மதித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்னை சந்தித்து பேச வேண்டும். மக்களிடம் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதல்ல என தனது தொலைக்காட்சி உரையில் டிரம்ப் குறிப்பிட்டார். 

    அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லை பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக மாற்றி, மனித உரிமை மீறல் என பிறநாடுகள் குற்றம்சாட்டும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கும் டிரம்ப் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். #Trumpurges #wallfunding #bordercrisis #borderwall
    ×