search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Gambling"

    • ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 32 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது.
    • ரம்மி திறமைக்கான விளையாட்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இயற்றப்பட்டு உள்ள இந்த சட்டம் செல்லுபடியாகும். பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

    ஆன்லைன் சூதாட்டம் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தினக்கூலிகள் ஆட்டோ டிரைவர்கள் என 32 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, 'ரம்மி திறமைக்கான விளையாட்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநில அரசுகள் ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதனை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கவில்லை.

    தற்போது ஆன்லைன் விளையாட்டுகளை அதிர்ஷ்ட விளையாட்டு எனவும், அதற்கு பலர் அடிமையாகி நிதி இழப்புகளை சந்தித்து தற்கொலைகள் செய்து கொள்வதாகவும் கூறி ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் கடுமையான குற்ற நடவடிக்கைகளை எடுக்கும்வகையில் இருப்பதால் இந்த சட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றார்.

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், 'ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தடை கோரி நீண்ட நேரம் வாதிடப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் அந்த வாதத்தை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. எனவே, இறுதி விசாரணைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும்' என வாதாடினார்.

    இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள் இறுதி விசாரணைக்காக 13-ந் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

    • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த, சினிமா ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தற்கொலை செய்த தேவதாசனுக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொல்லங்கோடு:

    கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டம்துறை கோவில் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஹவுசேப்பு. இவரது மகன் தேவதாசன் (வயது 40).

    இவர் சினிமா துறையில் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் ஆக பணியாற்றி உள்ளார். கோவையில் தங்கி இருந்து திரைப்படத்துறையில் செயலாற்றி உள்ளார்.

    இந்த நிலையில் தேவதாசனுக்கு, ஆன்லைன் சூதாட்டம் மேல் நாட்டம் ஏற்பட்டுள்ளது. பொழுது போக்காக விளையாட தொடங்கிய இவர், நாளடைவில் இந்த விளையாட்டுக்கு அடிமையானார்.

    இதனால் சம்பாதித்த பணத்தை அதில் இழந்துள்ளார். இருப்பினும் அவரால் ஆன்லைன் சூதாட்டத்தை விட முடியவில்லை. பெரும் பண கஷ்டத்திற்கு ஆளான தேவதாசன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இங்கு குடும்பத்துடன் தங்கிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் இழந்து விட்டதாக குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

    இதனை பலரும் கண்டித்துள்ளனர். பணம் இழந்த வேதனையாலும், ஆன்லைன் சூதாட்டத்தை விட முடியாததாலும் மன வேதனையில் தேவதாசன் இருந்துள்ளார். இந்தநிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடம் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தேவதாசன் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த, சினிமா ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்த தேவதாசனுக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    • புதுவை காவல்துறைக்கு புதிய வாகனங்களை வழங்கி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி:

    புதுவை காவல்துறைக்கு புதிய வாகனங்களை வழங்கி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    லாஸ்பேட், ரெட்டியார்பாளையம் காவல்நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் போலீஸ் துறை தலைமை அலுவலகம், கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையம் ஆகியவை கட்டவும், காரைக்காலில் சூப்பிரண்டு அலுவலகம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போலீஸ் தேர்வில் உடல்தகுதித்தேர்வு நடந்துள்ளது. விரைவில் எழுத்துத்தேர்வு நடக்கும். ஊர்க்காவல்படையில் 500 பேரை தேர்வு செய்ய விரைவில் பணிகள் தொடங்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய முதலில் முயற்சி எடுத்தது புதுவை மாநிலம்தான்.

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். பா.ஜனதா ஒருபோதும் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்காது. பயிற்சி முடித்த காவலர்கள் ஜூன் மாதம் போலீஸ் நிலையங் களில் பொறுப்பேற்பார்கள்.

    போலீசாரின் பிறந்தநாள், திருமணநாள் உட்பட அவர்கள் கேட்கும் நாளில் விடுமுறை தர சொல்லியுள்ளோம். வாரவிடுமுறை தருவது அரசு பரிசீலனையில் உள்ளது. போலீஸ் ரோந்து பணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு எடுப்போம்.

    ரோந்து பணிக்கான வாகனங்கள் சீரமைத்து இயக்குவோம். பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. புதுவையில் வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, சீருடை, சைக்கிள், லேப்டாப் அளிக்கப்படும். கவர்னர் ஒப்புதலுடன் விளையாட்டுத் துறை தனி துறையாக அறிவிக்கப்படும். கந்து வட்டி புகார்ககள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் கருத்து.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதம் செய்தது.

    இந்நிலையில், "ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், " ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே தடை சட்டம். மக்கள் நலன் தான் மிக முக்கியம். மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இருதரப்பு வாதத்தின் முடிவில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

    மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கவர்னரின் ஒப்புதலோடு நிரந்தர சட்டம் நிறை வேற்றப்படும் என்று நம்புகிறோம்.
    • கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு இனி இந்த சட்டத்தின் மூலம் முடிவு கட்டப்படும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

    சென்னை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரின் ஒருமித்த ஆதரவோடு மீண்டும் இயற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை கவர்னரின் ஒப்புதலோடு நிரந்தர சட்டம் நிறை வேற்றப்படும் என்று நம்புகிறோம். மக்கள் நலனில் அக்கறையும், நிர்வாகத் திறனும் மிக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படும் அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

    கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு இனி இந்த சட்டத்தின் மூலம் முடிவு கட்டப்படும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
    • ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை கவர்னர் உணர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட ரூ.7 லட்சம் கடனை அவரது தாயார் அடைத்துள்ளார். அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்ட மோகத்திலிருந்து மீள முடியாத ரவிச்சந்திரன் மேலும் பல லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு அதற்கு அடிமையான ஒருவரை கடனாளியாக்கி, தற்கொலை செய்து கொள்ள வைக்கும் வரை விடாது என்பதற்கு ரவிச்சந்திரனின் வாழ்க்கை தான் சான்று. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 48-வது தற்கொலை இது. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 19-வது தற்கொலை. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த முதல் தற்கொலை. இது தொடர் கதையாகி விடக்கூடாது.

    ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை கவர்னர் உணர வேண்டும். எனவே, இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு அனுராக்சிங் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
    • தமிழக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க உள்ளது

    புதுடெல்லி:

    ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்றும், சில மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன என்றும் மத்திய மந்திரி கூறி உள்ளார். மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அம்சங்களை இயற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என கூறி தமிழக ஆளுநர் ரவி, மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என கூறியிருந்தார். மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 

    • சைபர் கிரைமில் புகார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்து வருகிறார்.

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு லிங்க் வந்தது. அதனை அவர் ஓபன் செய்ததும், டெலிகிராம் செயலிக்கு சென்றது. எதிர் முனையில் இருந்த நபர் பகுதிநேர வேலை தருவதாகவும், அதற்காக ரூ.1000 கட்டுங்கள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

    அதனை நம்பி பணம் கட்டினார். உடனடியாக பணம் இரட்டிப்பாக வந்தது.

    பின்னர் 5 நிலையை அடைந்தால், அதிக அளவில் பணம் கிடைக்கும் என சவால் கேள்விகள் கேட்கப்பட்டது. அதிலும் அவர் பதில் அளித்து பணம் சம்பாதித்தார். அடுத்தடுத்து நிலை மாறி கேள்விகள் கேட்கப்பட்டது.

    பதில் தெரியாமல் பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். விட்ட பணத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து விளை யாட்டுகளை விளையாடியதால் லட்சக்க ணக்கில் பணத்தை இழந்தார்.

    மேலும் நண்பர்களிடம் கடன் வாங்கி மீண்டும் அதே விளையாட்டை விளையாடி இருக்கிறார். அப்போதும் விளையாட்டில் தோற்று ரூ.55 லட்சம் வரை இழந்து விட்டார்.

    இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
    • ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறி இருப்பதாவது:

    தமிழக கவர்னர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். மீண்டும் தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டம் 200-வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் .

    என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய போது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார்.
    • கடிதத்தில் கவர்னர், தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று முன்தினம் கூறுகையில், 'சட்டசபையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று அறிவித்தார். இதனால் தமிழக அரசியலில் ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய போது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டம் என்பது, கவலை தரக்கூடிய விஷயம். அதை ஒழுங்குப்படுத்தாததால், அதற்கு அடிமையாகி, பணத்தை இழந்து, சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு ஏற்படுகிறது.

    அதேநேரம், ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட இணையதளம் தொடர்பான விஷயங்களை, ஒரு மாநில அரசால் மட்டும் தடை செய்ய முடியாது. இது, மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம். எனவே, தேசிய அளவில் இதற்கு நடவடிக்கை தேவை.

    எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்கு முறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. அது நிச்சயமற்றதாகவும் இருக்கும்."

    ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (ஜி) பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

    அதற்கு எதிராக, எந்த அரசும் சட்டம் இயற்ற முடியாது.

    ஒரு மாநில அரசால், திறமையான விளையாட்டை ஒழுங்குப்படுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடை செய்ய முடியாது.

    இவ்விஷயத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திய பின்னும், மாநில அரசு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்களையே, சட்டமாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பி உள்ளது.

    இதைமீறி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    'இதை விளையாடுபவர்கள் தங்கள் 'ஆதார்' அட்டை, 'பான்' அட்டை போன்றவற்றை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் விளையாட முடியாது' என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி அதில் கூறி உள்ளார்.

    மசோதாவை திருப்பி அனுப்ப மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தி உள்ளார் கவர்னர். அது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

    முதலாவதாக இத்தகைய மசோதா, மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால் அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். அத்தகைய சட்டத்தை மாநில அரசால் நிறைவேற்ற முடியாது.

    இரண்டாவதாக, இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாகவும் அமையும்.

    மூன்றாவதாக இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று கவர்னர் கடிதத்தில் கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை கவர்னர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்.
    • ஆன்லைன் சூதாட்டத்தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி. திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று கவர்னர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கவர்னர் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை கவர்னர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். வரும் 20-ந்தேதி தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.
    • ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:-

    தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது நீதிமன்றம், சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்யவில்லை.

    வேறு சில காரணங்களை சொல்லி அதாவது இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நீங்கள் புதிய சட்டம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி சட்டமன்றத்துக்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

    அதன்படி இந்த புதிய சட்டம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு. நீங்கள் புதிய சட்டம் இயற்றுங்கள் இதில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு இயற்றுங்கள் என்று சொல்கிற போது அதை அதிகாரம் இல்லை என்று கூறி நீக்க எந்த அடிப்படையில் கவர்னர் நீக்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

    அதைப்பற்றி தெளிவாக அவர் என்ன அனுப்பி இருக்கிறார் என்பதை கோப்புகளை படித்து விட்டு தெளிவான விடையை நிச்சயமாக முதலமைச்சர் தருவார்.

    இந்த மசோதா 2-வது முறை அல்ல, முதல் முறையாக திருப்பி அனுப்பி உள்ளார்கள். இதற்கு முன்பு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லி இருந்தோம்.

    இதை திருப்பி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதை மறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பே கிடையாது. அது தான் சட்டம்.

    கேள்வி: கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள மசோதாவுடன் ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

    பதில்: நான் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தான் சென்னை வந்தேன். கவர்னர் கடிதம் அனுப்பி இருக்கிறாரா? என்பதெல்லாம் தெரியாது. அவர் அனுப்பியதை படித்து பார்த்த பிறகு தான் எதையும் தெளிவாக சொல்ல முடியும். நானாக எதுவும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×