search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Omni Bus Station"

    • நெல்லையில் மாலை முதல் இரவு 8 மணி வரையிலும் மாநகர பகுதியில் ஆம்னி பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
    • தெற்கு புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே செல்லும் பாதையின் அருகே சாலை ஓரத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் தற்போது புதிய பஸ் நிலைய பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டுள்ளதால் பாளை பகுதியில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

    ஆனாலும் மாலை முதல் இரவு 8 மணி வரையிலும் மாநகர பகுதியில் ஆம்னி பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

    சந்திப்பு பஸ் நிலையம் இடிக்கப்படுவதற்கு முன்பாக அங்கிருந்து தினந்தோறும் சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

    இதன் மூலம் பயணிகள் அதிக அளவில் பயன் அடைந்து வந்தனர்.மாநகரில் மத்திய பகுதியில் அமைந்திருந்த இந்த பஸ் நிலையம் புதிதாக நெல்லைக்கு வருபவர்களுக்கும்,இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்கள் வந்து இறங்கினாலும் மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது.

    இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்களும் வந்து சென்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. அதனை சமாளிக்க பாளை வேய்ந்தான் குளம் அருகே புதிதாக ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்துக்கு ஆம்னி பஸ்கள் கொண்டு செல்லப்பட்டாலும் அது மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

    ஆம்னி பஸ்ஸில் செல்ல வேண்டுமானால் சந்திப்பு பஸ் நிலையத்திலிருந்து டவுன் பஸ்சில் ஏறி செல்லவேண்டி இருந்தது. இதனை பயணிகள் வீண் அலைச்சலாக கருதினர். ஆனாலும் காலப்போக்கில் அது பழகிப்போன நிலையில் புதிய பஸ் நிலையமும் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதால் ஆம்னி பஸ் நிலையத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

    அதன் பின்னால் பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமுக்கு சொந்தமான இடத்திலும் அரசு விரைவு பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றன. இதன் காரணமாக அங்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டதால் ஆம்னி பஸ் நிலையமும், அகதிகள் முகாமில் இருந்த தற்காலிக பஸ் நிலையமும் தற்போது வீணாக கிடக்கிறது. ஆம்னி பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் வந்து முறையாக நின்று செல்வதில்லை.

    மாறாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளும் நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளையும் ஆங்காங்கே குறிப்பிட்ட சில இடங்களில் நின்று ஆம்னி பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

    அதன்படி தெற்கு புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே செல்லும் பாதையின் அருகே சாலை ஓரத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

    வண்ணார்ப்பேட்டை வடக்கு பைபாசில் செல்ல பாண்டியன் மேம்பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இது தவிர தச்சநல்லூர்-மதுரை ரவுண்டானா அருகே மக்கள் நின்று ஏறி செல்கின்றனர்.

    இந்த இடங்கள் நள்ளிரவில் புறப்படும் பேருந்துகளுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து நள்ளிரவில் வந்து சேரும் ஆம்னி பஸ்களுக்கும், உகந்த இடங்களாக இருந்தாலும் பயணிகளுக்கு அவை உகந்ததாக இல்லை. ஒருவித அச்சத்துடனே பெண் பயணிகள் இந்த இடங்களில் நள்ளிரவில் இறங்கி தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    புதிய பஸ் நிலையம் அல்லது ஆம்னி பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டால் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும், இது தவிர மற்ற இடங்களில் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்படுகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் பகுதியில் ஆம்னி பஸ்களை முறைப்படுத்தி நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×