என் மலர்
நீங்கள் தேடியது "New Year's Resolutions"
- அலட்சியமான மனநிலையில் கேட்பதோ, இடைமறித்து பேசுவதோ கூடாது.
- குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்.
புத்தாண்டு மலர்ந்து இருக்கும் இந்தச் சூழலில், ஆண்டு முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு உறுதிமொழிகளை பலரும் எடுப்பார்கள். அடைய விரும்பும் இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி பயணத்தை தொடரவும் செய்வார்கள்.
அதேவேளையில் உறவுகளுக்கும், நட்புக்கும், சுற்றுப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுப்பதும் இன்றியமையாதது. இவைகளை புத்தாண்டு தீர்மானங்களுடன் செயல்படுத்துவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
உரையாடல்: நட்போ, உறவோ இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் சுமூகமாக அமைய வேண்டும். ஏதேனும் எதிர்பார்பை முன்வைத்து உரையாடலை தொடங்கக்கூடாது. தன் தரப்பு பேச்சை மட்டுமே எதிர் தரப்பினர் கேட்க வேண்டும் என்ற மன நிலையில் வார்த்தைகளை பிரயோகிக்கக்கூடாது. அவர்கள் பேசும்போதும் தெளிந்த மனநிலையில் அவர்களின் கருத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அலட்சியமான மனநிலையில் கேட்பதோ, இடைமறித்து பேசுவதோ கூடாது.
அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்தரப்பினரிடம் இருந்து புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை புத்தாண்டு உறுதிமொழிகளில் ஒன்றாக முன்னெடுக்க வேண்டும். நட்பு, உறவு மட்டுமின்றி புதிய நபர்களையும் நாட வேண்டும். அவர்கள் மூலம் நட்பு வட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கும், நல்ல விஷயங்களை, பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வதற்கும் முன்வர வேண்டும்.
விருப்பங்கள்: குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அதற்கு பெற்றோர் முன்மாதிரியாக திகழ வேண்டும். பிள்ளைகளிடம் பாரபட்சம் காண்பிக்காமல் அவர்களின் தேவைகள், விருப்பங்களை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். தங்களின் விருப்பங்கள், அத்தியாவசிய தேவைகளை கேட்டு நிறைவேற்றுவதற்கு சிலர் தயங்கலாம். அதனை புரிந்து கொண்டு அவர்களின் தேவையை பெற்றோர் பூர்த்தி செய்ய வேண்டும்.
மற்ற நபர்களுக்கு தேவை அதிகமாக இருக்கலாம். அதைபுரிந்து கொண்டு தன் தேவையை குறைத்துக்கொள்வதற்கு சிலர் முன்வரலாம். அதனை சாதகமாக பயன்படுத்தி தன் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. தனக்காக விட்டுக்கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தக்க சமயத்தில் அவர்களின் தேவையை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்பதை புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்றாக கடைப்பிடிக்க முன்வர வேண்டும்.
ஆர்வம்: குடும்ப உறவுகள், நட்பு வட்டத்தை தாண்டி நம்மை சுற்றி வசிக்கும் மக்கள், பொது இடங்களில் அடிக்கடி பார்க்கும் நபர்கள் அவர்களின் செயல்பாடுகள், குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டலாம். அவர்கள் மூலமும் புதிதாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.
அவர்களின் அனுபவங்கள் ஏதேனும் ஒரு வாழ்க்கை பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கலாம். இதுநாள் வரை அடிக்கடி பார்க்கும் நபர்களிடம் பேசி பழகுவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருந்தாலும் புத்தாண்டு முதல் சிறு புன்னகையை வெளிப்படுத்து வதற்காகவாவது முயற்சிக்கலாம்.
இரக்கம்: மனித நேயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்வதில் இரக்கத்திற்கு தனி பங்கு உண்டு. குடும்பம், நட்பு வட்டத்தை தாண்டி கண்முன்னே யாரேனும் நிர்கதியாக தவிக்கும் நிலையை எதிர்கொண்டால் தயக்கமின்றி அவர்களுக்கு உதவிபுரிவதற்கு முன்வர வேண்டும்.
அனுதாபத்துடனும், இரக்கத்துடனும் அணுக வேண்டும். கனிவாகவும், பணிவாகவும் இருப்பது வாழ்க்கையை சிறப்பாக கட்டமைக்கவும், வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்லவும் துணைபுரியும். இத்தகைய பழக்கவழக்கங்களை புத்தாண்டு தீர்மானங்களுள் ஒன்றாக இணைத்து செயல்படுத்தி வருவது சிறப்புக்குரியது.
சுயபரிசோதனை: நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் வழக்கத்தை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இன்பம், துன்பத்தை எதிர்கொள்ளும்போது நிச்சயம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அது அந்த சூழலில் இருந்து மீண்டு வருவதற்கும், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதற்கும் வழிகாட்டியாய் அமையும்.
வாழ்வில் செய்ய வேண்டிய மாற்றங்களை தீர்மானிப்பதற்கும், எதிர்காலத்தை வலுவாக கட்டமைப்பதற்கும் சுயபரிசோதனை அவசியமானது. புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்றாக இதனையும் சேர்த்து பின்பற்றுவது வாழ்வில் வெற்றி தரும்.






