search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NDA"

    • தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 306 தொகுதிகளைப் பெற்று ஆட்சியில் அமரும் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தியது. டிசம்பர் 15 முதல் ஜனவரி 28-ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன் விவரம் வருமாறு:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே, சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 306 தொகுதிகளைப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.


    உத்தர பிரதேசத்தில் 72 தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணியும், 8 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

    கேரளாவில் இந்தியா கூட்டணி 20 தொகுதிகளை கைப்பற்றுகிறது.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 26 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது.

    குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணி 22 தொகுதிகளையும், பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது.

    ஜார்கண்டில் 14 தொகுதிகளில் பா.ஜ.க. 12 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    பஞ்சாப்பில் இந்தியா கூட்டணி 10 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    பீகாரில் 40 தொகுதிகளில் பா.ஜ.க. 32 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது என தெரிவித்துள்ளது.

    • பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார்.
    • பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வாராஹி யாத்திரை நடத்தி வருகிறார்.

    யாத்திரையின்போது ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பவன் கல்யாண் பேசும்போது பிரதமர் மோடி ஜெகன்மோகனுக்கும் அவரது ஆட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    இதனால்தான் ஜெகன்மோகன் யாரையும் மதிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்தி வருகிறார். ஆந்திராவில் பா.ஜ.க. தனித்து நின்றால் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாது என்றார்.

    பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் திடீரென இப்படி பேசியது அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பா.ஜ.க. தனது கூட்டணியில் பவன் கல்யாண் இருப்பதாக கூறியது.

    பவன் கல்யாண் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் மத்திய தலைமை எடுக்கும். கொள்கை முடிவுகளை இப்போதெல்லாம் எடுக்க முடியாது. பவன் கல்யாண் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார். ஜனசேனாவில் இருந்து எத்தனை பேர் சட்டசபைக்கு சென்று உள்ளனர்.

    பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி உறுதி செய்யப்படலாம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தலைமைதான் முடிவு செய்யும். பவன் கல்யாண் பேச்சுக்கள் குறித்து பா.ஜ.க. தலைமையிடம் புகார் செய்யப்படும் என்றார்.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

    • ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    • தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது.

    நிஜாமாபாத்:

    பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்துக்கு சென்றார். அங்கு நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பெல்லாம், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை வரவேற்க வருவார். அந்த தேர்தலுக்கு பிறகு அவர் வரவேற்க வருவது இல்லை.

    திடீரென்று என்ன கோபம்? ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, சந்திரசேகர ராவ் என்னை டெல்லிக்கு வந்து சந்தித்தார்.

    ஒரு அழகிய சால்வையை போர்த்தி எனக்கு மரியாதை செய்தார். பிறகு அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆனால், உங்கள் தவறான செயல்களால், உங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டேன். ஐதராபாத் மாநகராட்சியில் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.

    அதன்பிறகுதான் என்னை நேருக்குநேர் சந்திப்பதை சந்திரசேகர ராவ் தவிர்க்க தொடங்கினார். நான் சொல்வது 100 சதவீதம் உண்மை.

    தெலுங்கானா ஆட்சிப்பொறுப்பை தன்னுடைய மகன் கே.டி.ராமாராவிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் சந்திரசேகர ராவ் என்னிடம் கூறினார். அதற்கு நான், அப்படி செய்யாதீர்கள். இது மன்னர் ஆட்சியல்ல, ஜனநாயகம் என்று கூறினேன்.

    தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாரத ராஷ்டிர சமிதி மறைமுக ஆதரவு கொடுத்தது.

    எனவே, தாய்மார்களும், சகோதரிகளும் உஷாராக இருக்க வேண்டும். தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, நிஜாமாபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

    அவற்றில், தெலுங்கானா சூப்பர் அனல்மின் திட்டத்தின் முதலாவது அலகு திறப்பும் அடங்கும். அந்த ஆலை, 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவல்லது.

    மனோகராபாத்தையும், சித்திப்பேட்டையும் இணைக்கும் புதிய ரெயில் பாதை, 2 ரெயில்வே வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.

    அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இன்னும் சில மாதங்களில், அனைத்து ரெயில் பாதைகளும் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்று கூறினார்.

    • அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார்
    • அண்ணாமலையை நீக்குமாறும் இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. அங்கம் வகித்து வந்தது. ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றது. பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் இதற்கு காரணம் என அக்கட்சியில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் கூட்டணி தொடர்ந்தது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சித்தாந்த தலைவர்களில் முக்கியமானவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை குறித்து கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இது அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது.

    இது மட்டுமல்லாமல், "மத்தியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி" எனும் அ.தி.மு.க.வின் முழக்கத்தையும் அண்ணாமலை ஏற்க மறுத்தார். 

    இதை தொடர்ந்து அண்ணாமலையை பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை தலைமை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், அக்கூட்டணி முறிந்ததாகவும் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் கே.பி. முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

    மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த 20.06.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை பற்றியும் அவதூறாக விமர்சித்து வருகிறது.

    இந்த செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட்கிழமை) கழகப் பொது செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சி தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே, பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என தீர்மானம் இயற்றி அ.தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணங்களை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி" என்பதற்கு பதிலாக "பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி" என வாசகங்கள் இடம் பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
    • பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது

    வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.

    தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.

    இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.

    நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:

    ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.

    இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.

    எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மோடியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சியினரும் பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளனர்
    • முன்னரே இரண்டு சந்திப்புகள் பாட்னாவிலும், பெங்களூரூவிலும் நடத்தப்பட்டது

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

    இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடந்து வருகிறது.

    இதில் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

    முக்கியமாக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம் அமைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும். கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

    கூட்டணிக்கான செய்தித்தொடர்பாளர்கள் யார் யார் என்பது குறித்தும் இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    ஆளும் கட்சி கூட்டணிக்கும், எதிர்கட்சி கூட்டணிக்கும் 2024 தேர்தல் ஒரு வாழ்வா, சாவா பிரச்சனை போல் தோன்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ வல்லுனர்களுக்கு சந்திரயான்-3 வெற்றிக்காக இக்கூட்டணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 முயற்சிக்காகவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    • பாராளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை.
    • தி.மு.க. 2-வது பைல் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    புதுக்கோட்டை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கினார். தொடர்ந்து நேற்று 6-வது நாளில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பாத யாத்திரை மேற்கொண்டார். காரைக்குடியில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் கடியாப்பட்டி முக்கத்தில் கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 10.30 மணிக்கு யாத்திரையை தொடங்கி திருமயம் பஸ் நிலையம் வரை அவர் நடந்து வந்தார். சாலையின் இருபுறமும் பொதுமக்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர். பெருமாள் கோவில் அருகே ஜல்லிக்கட்டு காளைகள், வண்டி மாடுகள் நிறுத்தப்பட்டிருந்ததை அவர் பார்வையிட்டு காளைகளை தடவி கொடுத்தார்.

    திருமயம் பஸ் நிலையத்தில் பேசிய பின் லேனா விளக்கில் பழனிசாமி என்பவரது சிற்பங்கள் தயாரிக்கும் கலைக்கூடத்தை அண்ணாமலை பார்வையிட்டார். அவரிடம் தொழில் பற்றி கேட்டறிந்ததோடு, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த யாத்திரையை பொறுத்தவரை பெரும் எழுச்சியாக இருக்கிறது. நல்லதொரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த யாத்திரை பற்றி எதிர்க்கட்சியினர் விமா்சனம் வைப்பதன் மூலம் யாத்திரைக்கான நோக்கம் பூர்த்தி அடைகிறது. பிரதமர் மோடி 9 ஆண்டுகள் செய்ததை இந்த யாத்திரையில் பேசுகிறோம். அதேபோல தி.மு.க. அரசின் தவறுகளை ஆதாரத்தோடு தொடர்ந்து வைத்து கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என கேட்கிறோம். அனைத்து இடத்திலும் மக்கள் வரவேற்கின்றனர். நாங்கள் யாருக்கும் போட்டியாளர்கள் கிடையாது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக தலைவர்கள் அரசியல் கட்சியினரை அழைத்து பேசி வருகின்றனர். அ.தி.மு.க. அதிகாரபூர்வமாக கூட்டணியில் உள்ளது. எங்களது பணியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காததால் அவர் விரக்தியில் இல்லை. நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை.

    கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணியில் கதவுகள் திறந்துள்ளன. பாராளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. பாதயாத்திரையை முடித்து விட்டு கட்சி வேலை பார்ப்பது தான் எனது வேலை.

    தி.மு.க. 2-வது பைல் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 3-வது பட்டியலும் வரும். தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து பேசக்கூடிய கட்சி பா.ஜ.க. தான். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை சுட்டிக்காட்டுகிறோம். மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். அரசுக்கு சாராத அமலாக்கத்துறை, சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்து அமலாக்கத்துறையிடம் மாட்டிக்கொண்டவர். அவர் அமலாக்கத்துறை வேண்டாம் என்று தான் சொல்வார். கோடநாடு வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 10 குழுக்களாக பிரிப்பு
    • பிரதமர் மோடி இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரண்டு குழுக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்

    மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு குறைவான காலமே உள்ளதால் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

    அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை பகுதி வாரியாக 10 குழுக்களாக பிரித்து பிரதமர் சந்திக்க முடிவு செய்தார். 10 குழுக்களாக எம்.பி.க்களை பிரிக்க பா.ஜனதா தலைவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது 10 குழுக்களாக எம்.பி.க்கள் பிரிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை இந்த சநதிப்பு நடைபெற இருக்கிறது.

    மேற்கு உத்தர பிரதேசம், பண்டேல்கண்ட், பிரிஜ் பகுதி எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    2-வது ஆலோசனை கூட்டம் 7 மணிக்கு நடக்கிறது. இதில் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநில எம்.பி.க்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத், ஜே.பி. நட்டா ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்ச்சிக்கு புபேந்திர யாதவ், சர்பானந்த சோனாவால், தருண் கக், ருத்துராஜ் ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள். பிரகலாத் பட்டேல், அர்ஜுன் ராம் மேக்வால், வி. முரளீதரன் ஆகியோர் அவர்களுக்கு துணையாக இருப்பார்கள்.

    பாராளுமன்றத்தை தவிர்த்து உத்தர பிரதேசம், மற்றும் மகாராஷ்டிரா மாநில தலைநகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. பாராளுமன்ற மக்களவை தேர்தலில் 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா கூட்டணி அதற்கான வேலைகளை செய்வதில் மும்முரமாக களம் இறங்கியுள்ளது.

    பா.ஜனதா தலைமை 160 இடங்களை பலவீனமாக கருதுகிறது. இந்த இடங்களில் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு எதிராக பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டததை டெல்லியில் கூட்டியது. இதில் 38 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்

    • கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
    • வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும்.

    எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

    குமாரசாமியின் கருத்துக்கு நேர்மாறாக தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு இல்லாததால் செல்லவில்லை.
    • பா.ஜனதா முறிக்கும்வரை, பா.ஜனதா உடனான என்னுடைய கூட்டணி தொடரும்

    பா.ஜனதா, அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இடம் பிடித்திருந்த மற்றும் புதிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜனதா முறைப்படி அழைப்பு விடுத்தது.

    எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு அருகில் அவர் அமரவைக்கப்பட்டார்.

    சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் அதிமுக-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து, அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

    இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. பதவி பறிக்கப்பட்டபோதிலும், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அழைக்கப்பட்டிருந்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது பற்றி ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ''தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜனதா எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆகவே, நான் செல்லவில்லை. என்னுடனான கூட்டணியை பா.ஜனதா முறிக்கும்வரை, பா.ஜனதா உடனான என்னுடைய கூட்டணி தொடரும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பிராந்திய எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள்
    • ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்

    மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம் நடத்தியது.

    தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் குறித்து திட்டம் வகுக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடி எம்.பி.க்களை 10 குழுக்களாக பிரித்து அவர்களுடன் தினந்தோறும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 40 எம்.பி.க்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. பிராந்தியம் வகையில் குறிவைக்கும் நோக்கமாக இது பார்க்கப்படுகிறது. ஜூலை 25-ந்தேதியில் இருந்து இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்த எம்.பி.க்கள் குழு பிராந்தியம் ரீதியில் பிரிக்கப்படுகிறது. ஒவவொரு குரூப்பிலும் இரண்டு பிராந்தியத்தில் உள்ள எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள். முதல் கூட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்திய எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

    பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு ஒரு கூட்டம், இரவு 7.30 மணிக்கு ஒரு கூட்டம் என இரண்டு கூட்டமாக நடத்த இருக்கிறார். பிரதமர் மோடியுடன் பா.ஜனதா தலைவர் நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஒவ்வொரு கூட்டத்திலும் இருப்பார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள சஞ்சீவ் பல்யான், அஜய் பாத், பா.ஜனதா கட்சி அதிகாரிகள், மத்திய அமைச்சர்களும் இடம் பெற இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 25 வருடத்தை நிறைவு செய்யும் நிலையில் இநத் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையில் 2024 மக்களவை தேர்தலை பா.ஜனதா சந்திக்க உள்ளது. இந்த முறை மிகப்பெரிய அளவில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    • கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது.
    • ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.

    திருப்பதி:

    டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்திற்கு முன்பு பவன் கல்யாண் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பிரிவினை ஏற்பட்டது. பா.ஜ.க.வும் ஜனசேனாவும் மீண்டும் இணைந்தாலும், தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. இடையே புரிந்துணர்வு பிரச்சனை உள்ளது.

    அவர்களின் பிரச்சனைகளை பேசுவது ஏற்புடையது அல்ல.

    எங்கள் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது ஒரு பிரச்னை இல்லை. ஜனசேனா கட்சியினர் என்னை முதல்வராக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவு படுத்தப்படும்.

    ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது மட்டுமே எனது முன்னுரிமை.

    ஆதார் போன்ற பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு ஏன் கொடுக்கப்பட வேண்டும். ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளது. உள்கட்டமைப்பு முழுமையாக இல்லை. ஊழியர்களுக்கு முறையான சம்பளம் கிடைப்பதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×